யுத்த நடவடிக்கைகளின் போது கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை விபரங்களை பாதுகாப்புக் காரணமாக வெளியிட முடியாதென அரசாங்கம் செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிஹார மற்றும் ரேணுகா ஹேரத் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுந் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த மறுப்பை வெளியிட்டார்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் 2008 ஆண்டு ஜனவரி மாதங்களில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களுக்கிணங்க வடக்கு, கிழக்கு யுத்த நடவடிக்கைகளின் போது அந்தந்தக் கால எல்லைகளுக்குள் ஒவ்வொரு திகதியிலும் உயிரிழந்த முப்படையினர் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை சபைக்கு அறிவிக்குமாறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
இதில் ரஞ்சித் அலுவிஹார எம்.பி.யின் கேள்விகளுக்கு முதலில் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன , உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரினது பெயர், விலாசம் விபரங்களை பாதுகாப்புக் காரணம் கருதி வெளியிட முடியாதென கூறினார்.
இதேநேரம், எண்ணிக்கையை மட்டுமாவது கூறமுடியாதாவென ரஞ்சித் அலுவிஹார கேள்வி எழுப்பியபோது; எண்ணிக்கையையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது. விசேடமாக ஏதேனும் விபரங்கள் தேவையாயின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். இப்போது பகிரங்கமாக எதனையும் கூற முடியாது என்று தினேஷ் குணவர்தன பதிலளித்தார்.
அத்துடன் ரேணுகா ஹேரத்தின் கேள்விக்கும் இம்மாதிரியான பதிலே இருப்பதாக அமைச்சர் குணவர்தன தெரிவிக்கவே ரேணுகா ஹேரத் மேலதிக கேள்வி எதுவும் கேட்க முற்படவில்லை.