முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணீரைத் துடைக்கவே நான் தேர்தல் களத்தில் குதித்தேன். என் போன்ற இளைஞர்கள் நம் சமுதாயத்தில் புரையோடிப் போயுள்ள இன்னல்களை இனம் கண்டு சேவை செய்ய முன்வர வேண்டுமென கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அஸ்லம் தாலிப் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அஸ்லம் தாலிப் மேலும் தெரிவிக்கையில்; பல்வேறு கோணங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்ற மூத்த அரசியல் வாதிகள், முஸ்லிம் சமூகத்தின் இளம் சமுதாயத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எதுவுமே சொல்லாமல் பிதற்றிப் பேசி வருகின்றனர்.
கொழும்பில் சீரான நீர் வடிகாலமைப்பு இல்லை. சேரிப் புறங்களில் சிறு வீதிகள் சிதைந்து காணப்படுகின்றன. வீடுகள் ஒழுகிக் கரைகின்றன. இவற்றில் கவனமெடுத்து சமுதாய ஏழை எளிய மக்களின் துயரங்கள் துடைக்கப்படவே நான் இத் தேர்தலில் களமிறங்கினேன். இதேபோல கொழும்பு முஸ்லிம் பாடசாலைகள் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஏன் இந்த அவல நிலை. வேறு மாவட்டங்களில் எமது முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் முன்னேற வெற்றிக் கம்பங்களை எட்ட முடியுமானால் ஏன் எம்மால் முடியாமலுள்ளது. யார் சிந்திக்கின்றார்… நான் கூறிய உண்மைகளை என்னால் கூட நம்ப முடியவில்லை தான். ஆயினும் நாம் எல்லோரும் ஜீரணித்துத் தான் ஆக வேண்டும் என்றார்.