எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எனது தந்தையின் படுகொலையால் நான் கொதிப்படைந்தேன் – பிரியங்கா

23-priyanka.jpgஎனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு சில வருடங்கள் வரையில் நான் மிகவும் கொதிப்புடன் இருந்தேன் என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. இதுதொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளி்த்துள்ள பேட்டி..

எனது தந்தை கொல்லப்பட்டபோது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை. ஆனால் அப்போது நான் கோபமடைந்தேன். அந்தக் கோபம் என்னிடம் சில ஆண்டுகள் வரை இருந்தது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கூட கோபமாகவே இருந்தது. நான் இளம் வயதினளாக அப்போது இருந்ததால் அந்தக் கோபம் இருந்திருக்கலாம் என நினைக்கிறன். ஆனால் படிப்படியாக என்னை நான் பக்குவப்படுத்திக் கொண்டேன். கோபமும் படிப்படியாக குறைந்து போனது.

தமிழ் மக்கள் புத்திசாலிகள், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தமிழ் தேசியவாதத்தை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அதற்கான முறை தவறு. ஒரு மனிதராக, இன்னொருவரை கொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது பாட்டியும், தந்தையும் அரசியல் காரணங்களால் கொல்லப்பட்டனர். அதேபோல எனது தாயும் கொல்லப்படுவாரோ என்று நான் 2004ம் ஆண்டு பயந்தேன்.

அந்த ஆண்டில் நான் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள், பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தேன். அதே வேகத்தில், எனது சகோதரரின் அறைக்குள் புகுந்து, இவரும் கொல்லப்படப் போகிறார் என்று ஆதங்கத்துடன் கூறினேன். இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். எனது தாயாரைப் பற்றியோ, சகோதரரின் பாதுகாப்பு பற்றியோ தினசரி நான் கவலைப்படத் தேவையில்லை என்றார் பிரியங்கா.

வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் இரு தரப்பினருக்கிடையில் கடும் மோதல் கடற்புலிகளின் 3 படகுகள் அழிப்பு; 12 பேர் பலி

navy.jpgமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் கடும் சமர் இடம்பெற்றது எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. முள்ளிவாய்க்கால் கடற்பகுதியூடாக புலிகளின் படகுகள் வருவதை அவதானித்த கடற்படையினர் நடத்திய தாக்குதல் சில மணிநேரம் நீடித்திருந்தது என்றும் படைத் தரப்பில் கூறப்பட்டது.இத்தாக்குலில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டன. அதிலிருந்த கடற்புலிகள் 12 பேர் உயிரிழந்தனர் என்றும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன.

எனினும் இந்த மோதல்களில் கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் நேற்று இரவு வரை வெளியிடப்படவில்லை

வன்னிப் நிலைமை குறித்து ஆராய பிரிட்டன், பிரான்ஸ், சுவீடனின் வெளிவிவகார அமைச்சர்கள் ஒரே நாளில் கொழும்பு வருவர்!

British_French_Foreign_Ministers வன்னியில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேச சமூகத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கைக்கு திடீர்  முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லி பாண்ட், பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் பேனாட் கொஷ்னர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் ஹாம் பில்ட் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகச் செய்திகள் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgசர்வதேச சமூகம் தமது அரசிடம் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதை விட்டு, விடுதலைப் புலிகளை சரணடையச் சொல்லுமாறு செய்ய வேண்டும் என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டை நிலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடி வரும் தமது அரசு அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாது என்பதனை தெளிவு படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தாம் தடுக்கவில்லை என்றும், மாறாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்தினருக்கு அவ்வாறான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்த 1,65,000 எனும் கணக்கீடு தவறானது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளவை பொய் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கோட்டபைய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

ஏப்ரல் 27ஆம் திகதி. சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day) – புன்னியாமீன்

world-graphic-design-day.jpgஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி சர்வதேச கிரபிக்ஸ் வடிவமைப்பு தினம் (World Graphic Design Day  சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து வரைபட அலங்காரத்திற்கான உலக அமைப்பு இத்தினத்தை ஏப்ரல் 27ஆம் திகதி கொண்டாடி வருகின்றது.

ஆரம்ப காலங்களில் வரைபடக் கலையென்பது தற்போதைய காலகட்டத்தில் பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக Graphic Design  வளர்ச்சியானது அண்மைக்காலத்திலேயே மிகவும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. Graphic Design  எனும்போது இது ஒரு கலை. நவீன தொலைதொடர்பு சாதன வளர்ச்சியுடன் இக்கலையானது வேறு கோணத்தில் வளர்ச்சியடைந்து இன்று நவீன தொழில்நுட்பத்துடன் கணனித்துறையில் இணைந்து முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. ஆரம்ப கட்டங்களில் Graphic என்பது வரைபடத்துடன் சுருங்கிக் காணப்பட்டாலும்கூட, எதிர்காலத்தில் இத்துறையானது ஒரு இன்றியமையாத் துறையாக விளங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

Graphic தினம் எனும்போது இத்துறையில் ஈடுபடக்கூடியவர்களில் கௌரவித்து, மதிப்பளிக்கும் அதேநேரத்தில் இத்துறையின் தொழில் ரீதியான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இத்தினத்தின் முக்கியத்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதைப்போல இலங்கை இந்திய போன்ற வளர்முக நாடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதில்லை. 1990களில் இணையத்தள அறிமுகத்துடன் Graphic  என்பது ஒரு அத்தியாவசியமான துறையாக பரிணமித்துள்ளது. குறிப்பாக இணையத்தள வடிவமைப்புகள் வெப் பேஜ் வடிவமைப்புகள் Graphic உடன் இணைந்தவை. இத்தினத்தின் முக்கியத்துவதை உணர்ந்து இத்தினத்தை அனுஸ்டித்துக் கொண்டாடுமிடத்து Graphic வடிவமைப்புத்துறையில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகள் மக்கள் மத்தியில் உணர்த்தப்படக் கூடியதாக அமையலாம். குறிப்பாக இத்தினத்தன்று Graphic   வடிவமைப்பு தொடர்பான பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மேலும் போட்டி நிகழ்ச்சிகள் ஈடுபட்டோருக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் என்பன முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்துறையின் முக்கியத்துவத்தினூடாக இத்தினம் பற்றிய கெண்டாட்டங்கள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கலாம்.

pmpuniyameen@yahoo.com

அமைதியான தேர்தல் -ஆணையர் திஸாநாயக்க

e-c.jpgமேல் மாகாண சபைத் தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 2769 மத்திய நிலையங்களிலும் இவ்வாறு தேர்தலை நடத்தி முடிக்க கிடைத்தது.

இத்தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய சகல அராசங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்

விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – அமெரிக்கா

Wanni_War_Bombed_Safe-Zoneஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மூன்றாவது தரப்பு ஒன்றிடம் தமது ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்கா, பெரும்பாலான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சார்பில் அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக மோதலை கைவிட்டு அங்கு மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வுத்திட்டம் மற்றும் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் அடங்கலான, இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளிகளின் சந்திப்பு ஒன்று டோக்கியோவில், கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அதில், அமெரிக்காவின் சார்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசுத்துறை, மோதல் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளதை இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணைத்தலைமை நாடுகள் வரவேற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோதல் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஐ. நா அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அமெரிக்க அறிக்கை கோரியுள்ளது.

மொரவெவ பகுதியில் நான்கு சிவிலியன்கள் சுட்டுக்கொலை

pisto.jpgமொரவெவ நொச்சிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர்கள் நால்வர் இனந்தெரியா தோரினால் கொலை செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணேசேக்கர தெரிவித்தார்.

இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மேற்படி நால்வரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் கோணேஸ்வரன், விவேகானந்தன், விஜேசேகரன், ராஜமணியென அவர்களது குடும்பத்தவர்களால் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

வெவ்வேறு தொழில்களை மேற் கொண்டு வரும் மேற்படி நால்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் வெவ்வேறு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

கொலைகள் இடம் பெற்ற இடங்களுக்கு நேற்றுக் காலை நேரில் விஜயம் செய்த நீதவான் சடலங்களை நேரில் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்களை திருமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்த மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாணமையில் 5 மீனவர்கள் இரவில் வெட்டிக்கொலை

f-m.jpgஅம்பாறை மாவட்டம் பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நேற்று இனத்தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டுள்ள ஐவரது சடலங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உகந்தமலை கடற்கரை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, பொன்னுத்துரை, கதிரவேல், உதயா, ஜீவா ஆகிய ஐந்து மீனவர்களே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொத்து வில் பொலிஸார் கூறுகின்றனர்.

சனிக்கிழமை இரவு மீன் பிடிப்பதற்காக நான்கு இயந்திரப் படகில் உகந்தமலை சென்றிருந்த மேற்படி ஐவருமே இனந் தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் பயணித்திருந்த நான்கு படகுகளும் சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த குடிசை வீடு ஒன்றும் எரியூட்டப்பட்டிருந்ததாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கொலையுண்டவர் களை அவர்களது பெற்றோர், உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பொத்து வில் நீதிமன்ற நீதிபதியின் மரணவிசார ணைகளைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

புலிகளை பாதுகாக்க எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது – ஜனாதிபதி

Mahinda Rajapaksaபுலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி இறுதி அத்தியாயத்தின் கடைசி வசனங்களை எழுதத் தயாராகின்ற இச் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண மக்கள், புலிப் பயங்கரவாதிகளை பாதுகாக்க எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாதென தேர்தல் மூலம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்கள். தேர்தல் முடிவுகளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

மேல் மாகாண சபைத் தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிராமத்தைப் போன்று நகரமும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இத் தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகின்றது. இம் மாகாண சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருப்பதும், மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வருவதும் ஒரே நேரகாலத்தில் நடந்திருப்பதால் புதிய எதிர்பார்ப்புகளை கொண்டுவந்திருப்பது புலனாகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல் ஊடாக கிடைக்கப் பெற்றிருக்கும் ஆணை மூலம் சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான செய்தியொன்றை இம் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள். மாகாண மக்கள் அளித்திருக்கும் செய்தி மூலம் புலிப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க எந்தச் சந்திக்கும் உரிமையும் கிடையாது என்பதாகும். இந்தப் பாரிய வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த சகலருக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இத் தேர்தலில் வெற்றி பெற்ற சகல அபேட்சகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசியல், இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் நாட்டின் கெளரவத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க ஒன்றுபட்ட சகலருக்கும் தாய்நாட்டின் கெளரவம் உரித்தாகும். கிடைக்கப் பெற்றிருக்கும் பாரிய வெற்றியை யதார்த்தபூர்வமாக்குவதற்காக தோல்வியடைந்த அபிப்பிராயங்களையும் மதித்து சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்பக் கிடைத்திருக்கும் இப் பொன்னான சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பெறச் செய்யவென சகலரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கு விரும்புகின்றேன்.