மொரவெவ நொச்சிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர்கள் நால்வர் இனந்தெரியா தோரினால் கொலை செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணேசேக்கர தெரிவித்தார்.
இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மேற்படி நால்வரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் கோணேஸ்வரன், விவேகானந்தன், விஜேசேகரன், ராஜமணியென அவர்களது குடும்பத்தவர்களால் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
வெவ்வேறு தொழில்களை மேற் கொண்டு வரும் மேற்படி நால்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் வெவ்வேறு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
கொலைகள் இடம் பெற்ற இடங்களுக்கு நேற்றுக் காலை நேரில் விஜயம் செய்த நீதவான் சடலங்களை நேரில் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்களை திருமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்த மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.