புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி இறுதி அத்தியாயத்தின் கடைசி வசனங்களை எழுதத் தயாராகின்ற இச் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண மக்கள், புலிப் பயங்கரவாதிகளை பாதுகாக்க எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாதென தேர்தல் மூலம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்கள். தேர்தல் முடிவுகளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
மேல் மாகாண சபைத் தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிராமத்தைப் போன்று நகரமும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இத் தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகின்றது. இம் மாகாண சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருப்பதும், மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வருவதும் ஒரே நேரகாலத்தில் நடந்திருப்பதால் புதிய எதிர்பார்ப்புகளை கொண்டுவந்திருப்பது புலனாகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல் ஊடாக கிடைக்கப் பெற்றிருக்கும் ஆணை மூலம் சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான செய்தியொன்றை இம் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள். மாகாண மக்கள் அளித்திருக்கும் செய்தி மூலம் புலிப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க எந்தச் சந்திக்கும் உரிமையும் கிடையாது என்பதாகும். இந்தப் பாரிய வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த சகலருக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இத் தேர்தலில் வெற்றி பெற்ற சகல அபேட்சகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசியல், இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் நாட்டின் கெளரவத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க ஒன்றுபட்ட சகலருக்கும் தாய்நாட்டின் கெளரவம் உரித்தாகும். கிடைக்கப் பெற்றிருக்கும் பாரிய வெற்றியை யதார்த்தபூர்வமாக்குவதற்காக தோல்வியடைந்த அபிப்பிராயங்களையும் மதித்து சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இந்த நாட்டை கட்டியெழுப்பக் கிடைத்திருக்கும் இப் பொன்னான சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பெறச் செய்யவென சகலரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கு விரும்புகின்றேன்.