எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“இனி என்ன செய்யப்போகிறோம்’ காங்கிரஸை சங்கடப்படுத்தும் சி.டி.

IDP_Camp_Injured_Manகுண்டு வெடிப்புக் காட்சிகள், அகோர மரணங்கள், அழுது புலம்பும் பெண்கள், கால்நடைகள் போன்று நீண்ட தூரம் காணப்படும் அகதிகள் என்பனவற்றின் பின்னணியிலான பாடல் அடங்கிய சி.டி.யானது இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இனி என்ன செய்யப்போகிறோம்’ என்பது பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சி.டி.யின் தலையங்கமாகும். இப்போது இச் சி.டி. பரந்தளவுக்கு சுற்றோட்டத்திற்கு விடப்பட்டிருக்கிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு வேண்டுகோளும் இந்த சி.டி.யில் விடுக்கப்பட்டுள்ளது.

16 நிமிடங்கள் அடங்கிய இச் சி.டி.யானது பார்ப்பவர்களின் அபிப்பிராயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக நியூஇன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிக்கும் ஒரு செயல்

இறக்குவானை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் பௌத்தர்களின் எதிர்ப்புக்காரணமாக இடைநிறுத்தப்பட்டது இந்துக்களை அவமதிப்பதுடன் இந்து மதத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் உள்ளதாக கடந்த வியாழக்கிழமை மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இரத்தினபுரி மாவட்ட இனணப்பதிகாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.டி இராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலய பரிபாலனசபையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முத்துமாரியம்மன் ஆலய உற்சவம் இடைநிறுத்தப்பட்டமை இறக்குவானை பிரதேச மக்கள் மத்தியில் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரா பௌர்ணமி தினத்தில் பதுளை, அட்டன் போன்ற பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் இரதபவனி இடம்பெற்று வருகிறது. ஆனால் இறக்குவானைப் பிரதேசத்தில் மாத்திரமே பௌத்தர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரியவர்களுடன் கலந்துரையாடி சாதகமான முடிவை பெற்றுத்தர வேண்டுமென அப்பிரதேச மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்: தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை

era_thurairatnam.jpg மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடித்ததில்;

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமமான கெவுளியாமடு கிராமசேவையாளர் பிரிவு இல.135, கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது அங்கு குடியிருந்த 106 குடும்பங்கள் இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் அநேகமானோர் வேளாண்மை, மீன்பிடி, மேட்டுநிலப்பயிர்செய்கை, வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வந்ததோடு விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களுக்கும் மேட்டு நிலங்களுக்கும் உரித்துள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர்.

சுமார் 18 வருடகாலமாகியும் அப்பிரதேசத்தில் இருந்து வந்த யுத்த சூழ்நிலை காரணமாக உயிருக்குப்பயந்து மீண்டும் சொந்த இடம்போக முடியாமல் எப்போது சொந்த இடத்திற்குப் போவதென எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்த போது அனைத்து பொருளாதார வளங்களையும் இழந்தனர்.

தற்போது இப்பகுதியிலுள்ள வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் காடாக காட்சியளிப்பதோடு சில வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டும் சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டும் ஒருசில நிறுவனங்களினால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டும் ஓரிரு குடும்பங்கள் வாழ்ந்தும் வருகின்றன.

இவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. கடந்தவாரம் இப்பகுதிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில் பார்வையிடச்சென்றபோது அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அரசாங்கம் தமிழ்மக்கள் வாழ்ந்த கெவுளியாமடு கிராமத்தில் நடக்கின்ற அத்துமீறிய குடியேற்றத் திட்டத்தை நிறுத்த வேண்டும்.இந்தக் குடியேற்றத்தை தற்காலிக மேற்பார்வை செய்வதற்காக இக்கிராம சேவையாளர் பிரிவு உகணைப் பிரதேசசெயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதோடு இப்பிரதேசமக்கள் மேற்படி பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தங்களது விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும் இதைத் தொடர்ந்து இவர்களுக்குரிய காணாமல் போன கால்நடைகளுக்குப் பதிலாக கால்நடைகளை வழங்கி மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதற்கும் சம்பந்தப்பட்டோர் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தில் வசிப்பதற்கும் வீட்டுத்திட்டத்தை ஒரே இடத்தில் கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு மாத்தளையிலிருந்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைப்பு

Wanni_War_IDPs
வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள வடபகுதி அகதிகளுக்கு இவ்வார இறுதிக்குள் மாத்தளையிலிருந்து மற்றுமொரு தொகை அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மாநகர பிதா முகம்மது ஹில்மிகரீம் தெரிவித்தார்.

மாத்தளை நகர சர்வமதத் தலைவர்கள், பாடசாலைகள் சமூகநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை கடந்த வாரம் முற்பகுதியில் வவுனியாவுக்கு எடுத்துச் சென்று கையளித்தபோது அங்கு கடமையில் ஈடுபட்டுவரும் மாத்தளையைச் சேர்ந்த பிரிகேடியர் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் சஹீட் ஆகியோர் எம்மை சந்தித்து மேலும் ஒரு தொகை அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன் வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு பெருந்தொகையான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாகவும் நாட்டுமக்கள் இன, மத, மொழி பேதமின்றி மனிதாபிமான ரீதியில் இம்மக்களுக்கு நம்மாலான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் பாடசாலை மாணவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் உடை, தண்ணீர்ப் போத்தல், மருந்துவகைகள், பால்மா, உணவுப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்க்கிறோம்.

பொருட்களை அன்பளிப்பு செய்ய விரும்புவோர் அவற்றை மாத்தளை நகர சர்வமதத் தலைவர்களில் இவ்வார இறுதிக்குள் ஒப்படைக்கலாம், வாரநாட்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதிக்குள் மாத்தளை மாநகரசபை காரியாலயத்தில் ஒப்படைக்கலாம்.

இலங்கை அரசுக்கு ஆதரவானோர் தமிழகத்தில் இருக்கமுடியாது இன்று முதல் 8 இடங்களில் விழப்புணர்வுத்தேர்தல் பிரசாரம்

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்துவோம். இதை மையமாக வைத்து தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

காஞ்சிபுரத்தில் முதல் கூட்டம் நடைபெறும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னபோர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாரதிராஜா. அப்போது அவர் கூறுகையில்; திரைப்பட கலைஞர்களுக்கு சமூகப்பார்வை இருக்க வேண்டியது அவசியம். தமிழக அரசியலில் சினிமாவுக்கு பெரும் பங்கு உண்டு. திரைப்படத்துறையிலிருந்து இயக்கம் ஆரம்பித்து அரசியல் கட்சியாகி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள்.  இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வு மங்கிப்போய்விட்டது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன், சீமான், சேரன், அமீர், சரவண சுப்பையா, செல்வபாரதி, பிரவீண்காந்த், மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் உட்பட ஏராளமான இணை,துணை உதவி இயக்குநர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை எங்களது பிரசார பயணத்தை தொடங்குகிறோம்.

உலகில் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதைத் தட்டிக்கேட்கவும் தோள் கொடுக்கவும் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவும் புறப்படுகிறோம்.தமிழ் மக்களுக்கு இன உணர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் நோக்கம்.தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம் .விரட்டியடிப்போம். தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவுதரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்கமுடியாது.

தமிழர்களின் முதுகில் குத்தியுள்ள கட்சிகளை எதிர்த்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம். குறிப்பிட்ட கட்சி என்று இல்லை. துரோகிகள் அனைவரையும் நாங்கள் எதிர்க்கிறோம்.மத்திய கிழக்கில் முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விடமோசமான முறையில் தமிழர்களுக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  இன்று தொடங்கும் எங்கள் தேர்தல் பிரசாரம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எங்களது எதிர்ப்பை எந்த முறையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் காட்டுவோம் என்றார்.

இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி வழங்க விசேட செயல்திட்டம். யுனிசெப் நிறுவனம் உதவி – பசில் எம்.பி.

20090424063601srilanka4.jpgஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள சுமார் 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வசதிகள் அளிப்பதற்காக யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் விரைவில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய்ந்த அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவுள்ளனர். அவர்களை மெனிக்பாம் 4ஆவது வலயத்தில் தங்கவைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் நாளாந்தம் 15 லீட்டர் நீர் வழங்க வேண்டும் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.

ஆனால் நாம் நாளாந்தம் 50 லீட்டர் நீர் வழங்கி வருகிறோம். முகாம்களில் உள்ள மக்களுக்கு நீர் வசதி அளிக்க 105 கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 60 நீர் பவுசர்களினூடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் 60 கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கென நாளாந்தம் 87 ஆயிரம் உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலாக அவர்களாக சமைப்பதற்கு விரைவில் வசதிகள் அளிக்க உள்ளோம்.

விரைவில் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் சமையல் உபகரணங்கள் கிடைக்க உள்ளன. அவற்றோடு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி அடங்கலான அத்தியாவசியப் பொருட்கள், ஆடைகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.மருத்துவ வசதிகள் அளிக்க வரும் வெளிநாட்டு முகவர்களை முகாம்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக அவர்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் சிபாரிசு பெறப்படும் என்றார்.

கந்துருவெலவில் சுற்றிவளைப்பு தேடுதல் இரு பெண்கள் உட்பட 81 பேர் கைது

பொலனறுவை கந்துருவெலவில் சனிக்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 81 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலனறுவை கந்துருவெல பகுதியிலுள்ள அரிசி மில் ஆலைகளில் பணியாற்றியவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மற்றும் நாவலப்பிட்டி, அட்டன் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாமையினாலேயே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நிரபராதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட சிறுமி களுத்துறையில் விடுவிப்பு

அம்பலாங் கொடையில் வியாழக்கிழமை இனம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பியூமி தனஞ்சனி என்ற 11 வயது மாணவி மேதினத்தன்று களுத்துறையில் விடுவிக்கப்பட்டார். தனியார் பாடசாலை ஒன்றில் கல்விபயிலும் இம் மாணவியை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அம்மாணவி தெரிவித்தார். இவர் களுத்துறை பாலம் அருகில் வெள்ளிக்கிழமை நண்பகல் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். களுத்துறையில் விடுவிக்கப்பட்ட இச் சிறுமி வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்று தான் கடத்தப்பட்டதாக கூறினார். களுத்துறை பொலிஸார் சிறுமியை அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

யுத்தமற்ற ஐக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப அதிகபட்ச சுயாட்சி அவசியமானதொன்றாகும் -அமைப்பாளர் தம்பையா

may-day.jpgஅரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் தீர்வு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி, அரசியல் கைதிகள் அனைரையும் விடுதலை செய்து மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இயல்புவாழ்நிலை உறுதி செய்யப்பட வேண்டும். இது உடனடியான நடவடிக்கை ஆகும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கும் ஏனைய அடக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வை உறுதி செய்வது இன்னொரு கட்ட நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே யுத்தமற்ற, ஐக்கியமான, சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் இதன்மூலமே கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற மே தின கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே மேற்படி குறிப்பிட்டார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள முதியவர்கள் வெளியே அனுப்பப்டுகின்றனர்

mahinda-samarasinha.jpgஇலங்கையின் வடக்கே பல்வேறு இடங்களில் உள்ள் முகாம்களிலிருந்து 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வெளியே அனுப்பபடுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை அரசின் மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தமிழோசையிடம் கூறும் போது, இந்த திட்டமானது ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், ஏற்கனவே சுமார் இரண்டாயிரம் முதியவர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே உள்ள முதியோர் இல்லங்களுக்கும் மேலாக புதிய இடங்களுக்கும் தாங்கள் ஏற்பாடு செய்து இருப்பதாகவும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோயில்களிலும் இவர்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.