இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள சுமார் 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வசதிகள் அளிப்பதற்காக யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் விரைவில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆராய்ந்த அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவுள்ளனர். அவர்களை மெனிக்பாம் 4ஆவது வலயத்தில் தங்கவைக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் நாளாந்தம் 15 லீட்டர் நீர் வழங்க வேண்டும் என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.
ஆனால் நாம் நாளாந்தம் 50 லீட்டர் நீர் வழங்கி வருகிறோம். முகாம்களில் உள்ள மக்களுக்கு நீர் வசதி அளிக்க 105 கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 60 நீர் பவுசர்களினூடாக நீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் 60 கிணறுகள் தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கென நாளாந்தம் 87 ஆயிரம் உணவுப் பார்சல்கள் வழங்கப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலாக அவர்களாக சமைப்பதற்கு விரைவில் வசதிகள் அளிக்க உள்ளோம்.
விரைவில் இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் சமையல் உபகரணங்கள் கிடைக்க உள்ளன. அவற்றோடு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி அடங்கலான அத்தியாவசியப் பொருட்கள், ஆடைகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.மருத்துவ வசதிகள் அளிக்க வரும் வெளிநாட்டு முகவர்களை முகாம்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பாக அவர்கள் தொடர்பாக இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் சிபாரிசு பெறப்படும் என்றார்.