அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் தீர்வு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி, அரசியல் கைதிகள் அனைரையும் விடுதலை செய்து மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு இயல்புவாழ்நிலை உறுதி செய்யப்பட வேண்டும். இது உடனடியான நடவடிக்கை ஆகும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உட்பட அனைத்து தமிழர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்கும் ஏனைய அடக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கும் அதிகபட்ச சுயாட்சியை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வை உறுதி செய்வது இன்னொரு கட்ட நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே யுத்தமற்ற, ஐக்கியமான, சுதந்திரமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் இதன்மூலமே கௌரவமான சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற மே தின கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே மேற்படி குறிப்பிட்டார்.