எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அவுஸ்திரேலியாவில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம்

au.jpgதமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.

காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழப்பு

gun00.jpgமட்டக்களப்பு காத்தான்குடியில் மாமாவையும் அவரது சகோதரரையும் சுட்டுக்கொன்ற மருமகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஜாமி அத்துல் ஜமாலியா அரபு கல்லூரியின் அதிபரான சேகு முகமது மீரான் முதின் (வயது 65) அவரது சகோதரரான சேகு முகமது மஜ்ஜின் (வயது 60) மற்றும் துப்பாக்கி தாரியான ஷாஜஹான்(வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மனைவியைப் பிரிந்து வாழும் மருமகன் இன்று காலை மாமனாரின் வீட்டுக்கு மதிலேறி குதித்து, அத்துமீறி நுழைந்து இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் மனைவியும் பிள்ளையும் வீட்டின் பின்புறமாக ஓடித் தப்பிச்சென்றுள்ளனர்

மாணவி தினுஷிக்கா கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால்

thinu.jpgகடத்திச் செல்லப்பட்டு பின் கப்பம் கோரப்பட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா என்ற மாணவியின் கொலையைக் கண்டித்து  இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது

மேல் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்; பிரசன்ன ரணதுங்க முதலமைச்சர்

prassana-ranatunga.jpgமேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடங்கலான மேல் மாகாண அமைச்சர்கள் இன்று (04) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். அலரி மாளிகையில் நடைபெறும் இந்த வைபவத்தில் அமைச்சர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி அமோக வெற்றியீட்டியது. மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சராக நியமிக்க ஐ. ம. சு. முன்னணி தீர்மானித்துள்ளதோடு நான்கு பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களி லிருந்து தலா ஒருவரும் கொழும்பு மாவட்டத்திலி ருந்து இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் புதியவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

புலிகளின் மற்றுமொரு மண்அணை தகர்ப்பு – 4 1/2 சதுர கி.மீ. புலிகள் முடக்கம்

udaya_nanayakkara_brigediars.jpgபாதுகாப்பு வலயத்துக்குற்பட்ட பகுதியில் புலிகளின் மேலும் ஒரு மண்அணை நேற்றுக் காலை படையினரால் தகர்க்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஏனைய சிவிலியன்களும் படையினரை நோக்கி வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏ-35 பிரதான வீதிச் சந்தியிலிருந்து தெற்கிலும் முல்லைத்தீவு நந்திக்கடல் கடனீரேரியிலிருந்து வடக்கிலும் சுமார் 500 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையே நேற்றுக் காலை இராணுவத்தின் 53ஆம் படையணியினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நான்கரை சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு க்குள்ளேயே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. வலைஞர்மடத்தின் தெற்கிலும் தென்கிழக்கிலும் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்றது. இதில் புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. மோதல்களின்போது நாளுக்குநாள் சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சமடைந்து வரும் அதேவேளை பெரும் எண்ணிக்கையான புலிகளும் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இராணுவத்தின் 53ஆம் 57ஆம் 58ஆம் மற்றும் மூன்றாம் படையணியினர் முல்லைத்தீவில் சிவிலியன்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுக் காலை 500 மீற்றர் நீளமான மண்அணையை தகர்த்ததன் மூலம் மேலும் பெருமளவிலான சிவிலியன்கள் வருவரென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிபுரிவது தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று கொழும்பில்

mahinda-samarasinha.jpgவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவி வழங்குவது தொடர்பாக ஆராயும் மாநாடு இன்று (4) இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஐ. நா. வுடன் இணைந்து நடத்தப்படும் இந்த மாநாட்டில் இணைத் தலைமைத்துவ நாடுகள், உதவி வழங்கும் நாடுகள், தொண்டு நிறுவனங்கள் என்பன பங்கேற்க உள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு நேற்று கூறியது.

வன்னியில் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு மேலும் பல வசதிகள் அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு அவர்களின் தேவைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களின் தேவைகள் அடங்கிய பட்டியல் இன்று உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த மாநாட்டினூடாக இலங்கைக்கு கூடுதல் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ. நா. தொண்டு நிறுவனங்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

வன்னியில் இருந்து வந்துள்ள மக்களில் சுமார் 1,67,330 பேர் வவுனியாவில் உள்ள 24 நலன்புரி நிலையங்களிலும் யாழ்ப்பாணத்தில் 11,150 பேரும் திருகோணமலையில் 4 ஆயிரம் பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு மேலதிகமாக ஐ.நா. தொண்டு நிறுவனங்களும் உள்நாட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றன.

இவர்களின் உதவிகளை கிரமமான முறையில் பெற அரசு திட்டமிட்டுள்ளதோடு ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திடம் இருந்தும் எத்தகைய உதவிகளை பெறுவது என்பது குறித்தும் இன்று ஆராயப்பட உள்ளன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ. நா. மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ¤டனும் வன்னி மக்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே மேற்படி உதவி வழங்கும் மாநாடு கூட்டப்படுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளது தெரிந்ததே.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கு விடுதலைப் புலிகள் ‘பாராட்டு’

pr-con.jpgபிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சென்ற வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தொடர்பில் விடுதலைப் புலிகள் அவர்களைப் பாராட்டியுள்ளனர். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்று இருதரபினரிடமும் அமைச்சர்கள் தமது பயணத்தின்போது வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அக்கறை காட்டியமைக்காக வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போர்நிறுத்தம் செய்வதையே தாங்களும் விரும்புவதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

islam.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும் ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நடாத்திய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிரமப்படுவோருக்கு உதவுமாறு இலங்கை முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் தனது குத்பா பேருரையில், இஸ்லாம் பிறருக்கு உதவுவதை பெரிதும் வரவேற்கிறது. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற எந்த வித்தியாசமும் இதில் இல்லை. மாறாக மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஓர் உயிர் சிரமப்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மிகத்தெளிவாக எமக்கு கற்றுத் தருகின்றன. எனவே நாம் கஷ்டப்படுவோருக்கு துன்ப துயரத்திலிருப்போருக்கு எம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அது உடலால், பொருளால், பணத்தால், ஆலோசனையால் எந்த தோற்றத்திலிருந்த போதிலும் பிற சகோதரனின் துன்பம் துடைப்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும்.

எனவே நாம் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் உதவவேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உங்களால். முடிந்தவைகளை கொடுத்து உதவுங்கள் இஸ்லாம் கொடையை மிகவும் நேசிக்கின்றது. கஞ்சத்தனத்தை வெறுக்கின்றது.

இன்று முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தில் ஒரு கேள்வி உண்டாகலாம். எமது முஸ்லிம் சகோதரர்களை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஈவிரக்கமின்றி உடுத்திருந்த ஆடையோடு வடக்கிலுள்ளவர்கள் விரட்டியடித்தார்கள் எமது சமூகம் அவர்களால் அகதிகளாக்கப்பட்டது. சொல்லொணாத் துன்ப துயரங்களை முன்னோக்கியது. இப்பொழுது நாம் உதவி செய்வதா?

எமது சகோதரர்களை விரட்டியவர்கள் இந்த அப்பாவிப் பொது மக்கள் அல்ல. இஸ்லாம் பழிக்குப்பழி வாங்குவதை கற்றுத்தரவில்லை. மாறாக அநியாயம் செய்தவர்களோடும் உபகாரம் செய்து வாழுமாறு எம்மை பணித்திருக்கின்றது. நபி(ஸல்) அவர்களை குறைஷிக் காபிர்கள் மக்காவிலிருந்து விரட்டியடித்தார்கள். எனினும் மக்கா வெற்றி கிடைத்தபோது நபியவர்கள் அவர்களனைவரையும் மன்னித்து விட்டார்கள். நாமும் அந்த உத்தம நபியின் வழிமுறையையே பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

5 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் இன்று இலங்கை வருகை

uk-london.jpgபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று இன்று திங்கட்கிழமை வடபகுதி மனிதாபிமான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. பக்கிங்காம் எம்.பி. கட்சியின் ஜோன் பேர்கவ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் டெஸ் பிறவுண், ஸ்கொட்லாந் எம்.பி. மக்கெலம் புரூசி, வட அயர்லாந்திற்கான எம்.பி. எட்வட் மக்கிரடி மற்றும் தொழிலாளர் கட்சி எம்.பி. மொஹமட் சர்வர் ஆகியோரே இக்குழுவில் அடங்கியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் – தங்காலையில் மூடப்பட்டிருந்த 8 பாடசாலைகளும் இன்று திறப்பு

schools_stu.jpgடெங்கு காய்ச்சல் தீவிர நிலை காரணமாக சுமார் ஒரு வார காலமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தங்காலைப் பிரதேச எட்டுப் பாடசாலைகளும்இன்று (4ம் திகதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். எச். சுனில் நேற்றுத் தெரிவித்தார். இந்த எட்டுப் பாடசாலைகளினதும் சுற்றாடல், சுத்தம் தொடர்பான கண்காணிப்பு இன்று முதல் நான்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் தீவிர நிலைமை காரணமாக தங்காலை வலயக் கல்விப் பணியகத்திற்கு உட்பட்ட எட்டு பாடசாலைகள் கடந்த 28ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டன.

தங்காலை மகளிர் வித்தியாலயம், தங்காலை ஆண்கள் தேசியப்பாடசாலை, தங்காலை ராகுல வித்தியாலயம், தங்காலை முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம், தீபங்கர கனிஷ்ட வித்தியாலயம், பொலம்பாறுவ முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம், தங்காலை ஆரம்பப் பாடசாலை ஆகிய எட்டு பாடசாலைகளுமே இவ்வாறு மூடப்பட்டன.

தங்காலை மகளிர் கல்லூரி மற்றும் தங்காலை முன்னணி கனிஷ்ட வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பெறும் ஒரு மாணவியும், ஒரு மாணவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததையடுத்தே இப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதேநேரம் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத்துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவும், டெங்கு ஒழிப்பு பிரிவும் இணைந்து தங்காலை பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளையும் துரிதப்படுத்தினர்.

‘டெங்கு காய்ச்சல் பரவுகை கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதத்திற்கு அமைய இந்த எட்டுப் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவ தாகவும் தங்காலை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.