எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பொது மக்கள் கொலை தொடர்பில் அரசாங்கம் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டுத்தீர்மானம்

manig.jpgஅரசாங்கத்தின் எறிகனை தாக்குதல்களினால், பாதுகாப்பு வலயத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுவது தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கைக்கு, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் சிறிலங்கா சுதந்தி கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச் சாட்டினை முன்வைக்கும் போது, அதில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி, தம்மீது குற்றம் இல்லை என்றால் அதனை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.இவ்வாறான குற்றச் சுமத்தல்கள் மூலம், சர்வதேச ரீதியாக இலங்கையை தலைகுனிய செய்ய முனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இன்று அனுப்பப்படுகின்றன. – ஜெயபாலன் & புன்னியாமீன்

02.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரிநிலையங்களினுள்ளே இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் கல்வியதிகாரி திரு. த. மேகநாதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தேசம்நெற் ஆசிரியர் குழுவும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் திட்டத்தின் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்தமை அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கு 1100 வீதம் மாதிரிவினாத்தாள்கள் 10உம், புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடு தொகுதி 01 நூலும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டன. 

இந்த மாதிரிவினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பரீட்சையாக நடத்தப்படுகின்றன. இந்த அனுப்பப்படும் பொதிகளில் பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டி புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 11 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 12 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 13 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 14 1100 பிரதிகள்
மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02 எனும் நூலின் 1100 பிரதிகள்

மேற்படி மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி., பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி., காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 16 மாதிரிவினாத்தாள்களையும் (விசேட மாதிரிவினாப்பத்திரம் இலக்கம் 01 – 16 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தரம் 06, 07, 08, 09, 10, 11 மாணவர்களுக்காக வேண்டி வி.ச. சுப்பரமணியம், ஞானசுந்தரம், பா. கிருபாகரன் ஆகிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியும் குவி அச்சக வெளியீடுகளின் ஒரு தொகுதி செயல் நூல்களும் இன்று அனுப்பப்பட்டுள்ளன.

வருண்காந்தி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: உச்சநீதிமன்றம்

varun.jpgஉச்ச நீதிமன்றம் வருண்காந்தி மீதான தேசிய பாதுôகாபபு சட்டத்தை ரத்து செய்தது . வருண்காந்திக்கு தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரோலில் வெளியே வந்துதான் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பா.ஜ., வேட்பாளர் வருண் காந்திக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், வருண் காந்தி சுப்ரீம் கோர்ட்டில், தன் மீதான தே.பா. சட்டம் ரத்து செய்யவேண்டும் என்ற உ.பி. ஆலோசனை குழு பரிந்துரைத்தது படி அது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தா. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருண் மீதான தே.ப., சட்டத்தை நீக்கி உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 3இடங்களில் நாளை மறுவாக்குப்பதிவு

india-elc.jpgதமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.  இதில் 3 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால்  மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அதன்படி பொள்ளாச்சி, அரக்கோணம், சேலம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முகாம்களுக்கு அனைத்துக்கட்சி குழுவினர் செல்ல அனுமதிக்கப்படவேண்டும்: ரணில் விக்கிரமசிங்க

ranil-wickramasinghe.jpgஇடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அனைத்துக்கட்சி குழுவினர் செல்ல அனுமதிக்கப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நோர்வே சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பது தமது கட்சியின் நிலைப்பாடெனக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, எனினும், தற்போதைய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முகாம்களுக்கு அழைத்துச்செல்லும் இலங்கை அரசாங்கம், தமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் அழைத்துச்செல்லவில்லையெனவும் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் நிலைவரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எரிக் சொல்ஹெய்ம்

eric-solheim.jpg இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை நிலைவரம் குறித்து அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை கலந்துரையாடியிருந்த நிலையிலேயிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனின் இலங்கை விஜயம் உட்பட, அனைத்து மட்டத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் முனைப்புக்கள் அவசியமெனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

g-11-mahi.jpgஜோர்தானில் இன்று ஆரம்பமாகவுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைப் பெறும் நாடுகளின் ஜீ-11 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள  ஜனாதிபதிக்கு ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜோர்தானின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அமீர் ஹதீதி ஜனாதிபதியை வரவேற்றார். அதன் பின்னர் ஜனாதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

 மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மத்திய கிழக்கின் பொருளாதாரம் தொடர்பாக ஆராயும் மாநாட்டிலும் கலந்துகொள்வார்.

பாகிஸ்தான், மோரோக்கோ, எல்சல்வடோர், ஜோர்ஜியா, குரோசியா, ஹொண்டுராஸ், பெரகுவே, ஈக்குவாடோர், இந்தோனேசியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடுவார். பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான ஓர் உடன்படிக்கையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் சகல நாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

2400 க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை

mullivaikaal-01.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். கரையாமுள்ளி வாய்க்காயைத் தாண்டி வெள்ளமுள்ளி வாய்க்கால், பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2400க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர் என தெரிய வருகிறது.

புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி  அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

mullivaikaal-02.jpg

தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்

obama_.jpgஇலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்ததையும், ஈழத் தமிழர்களைக் காக்க விடுத்த வேண்டுகோளையும் நாங்கள் வரவேற்கிறோம். மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அதிபர் ஒபாமாவின் தலையீட்டை ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

அதிபர் ஒபாமா கூறியதுபோல, பாதுகாப்புடன் கூடிய, நீடித்த அமைதிக்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். மேலும், அமைதியை நோக்கிய நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் வைத்துள்ள ஆயுதங்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அமைதியான இறுதித் தீர்வை பாதுகாப்பதற்காகத்தான்.

இன்று இலங்கை அரசு, ஈழத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. தங்களது சுய நிர்ணயத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழர்களை அது தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து இலங்கை அரசு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தவித மரியாதையும், கௌரவமும் இல்லாத முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

தமிழர்களின் நிலங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் தமிழர்களையும், அரசுப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அழித்து வருகிறது. இடம் பெயர்ந்து வரும் அப்பாவி மக்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இவற்றை எந்தவித சாட்சியமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

அதிபர் ஒபாமா கூறுவதைப் போல, தமிழர்களை பேரழிவிலிருந்து காக்க, மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீட்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சர்வதேச சமுதாயத்தின் கண்களை மூடி விட்டு, இலங்கை அரசு தனது தாக்குதல்களை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிரது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக சமுதாயத்தை அது ஏமாற்றி வருகிறது.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைக் கூட அது ஏற்கவில்லை. அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.

தற்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுயேச்சையான மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.  ஈழத் தமிழர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுக்காக பேசிய அதிபர் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடேசன்.