எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த மீதான தாக்குதலுக்கு லக்ஷ்மன் யாப்பா கண்டனம்

33222.jpgஊடக வியலாளரான போத்தல ஜெயந்த மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலை வண்மையாகக் கண்டிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நேற்று இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்ட போத்தல ஜெயந்த தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு விடுவிக்கப்பட்டு நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உழைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலையானதாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதிக்கு ரஷ்யத் தூதுவர் பாராட்டு

russian_ambassador.pngஇலங் கையில் கடந்த 30 வருடங்களாக நீடித்திருந்த புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காகவும் அதற்காக இராணுவத்தில் ஜெனரல் தரத்துக்குப் பதவி உயர்த்தப்பட்டமைக்காகவும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் பி. மிகாய்லொவ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வடபகுதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கையளிப்பு

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த வடபகுதி மாணவர்களுக்கு 46 மில்லியன் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் இன்று (2) கல்வி அமைச்சில் நடைபெறறது. இதன் போது வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேலதிக புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், மேசை, கதிரை மற்றும் உணவு வகைகள் என்பவற்றை கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி பொருட்கள் 25 லொறிகளில் வவுனியா நலன்புரி கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளதோடு அவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நலன்புரிக் கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது. இதனையொட்டி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அடங்கலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இடம்பெயர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகள் குறித்து ஆராய கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார இருவாரங்களுக்கு முன் வவுனியா சென்றிருந்தார். இதன் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடனடியாக தேவைப்படும் உபகரணங்கள் குறித்து ஆராயப்பட்டது. இதன்படி 25 ஆயிரம் சீருடைகள், 500 மேசைகள், 1500 கதிரைகள், 5 இலட்சம் பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் 5 ஆம் திகதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

இதேவேளை 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை என்பவற்றுக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கான விசேட வகுப்புகளும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட உள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் – இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள்

piyasena_gamagesss.jpgவடக்கில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பதற்காக இரண்டு வாரங்களுக்குள் இரண்டு தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி அமைச்சர் பியசென கமகே தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா நிவாரணக்கிராமங்களை அன்மித்து இவை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேற்கில் இளைஞர்கள் யுவதிகள் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளை வடக்கிலுள்ளவர்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

‘இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியில் இடமில்லை’ – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgமுடியாது என கைவிடப்பட்ட பலவற்றை நாம் சாத்தியமாக வெற்றி கொண்டோம். இயலாது என்ற சொல்லுக்கு இனி அரசின் அகராதியிலேயே இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தீவிரவாதம், போதை ஒழிப்பு உட்பட பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ள யுகமிது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு அஞ்சிய யுகமொன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இனி அபிவிருத்தியும் ஒழுக்கமும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கென 959 புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவுகின்ற இத்தருணத்தில் நாம் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிலையில் உள்ளோம். எதிர்காலம் குறித்து சிந்தித்து பொருத்தமான தீர்மானங்களை நாம் எடுத்தமையே இதற்குக் காரணம். எமது நாட்டுக்குப் பொருத்தமான திட்டங்களை வகுத்து எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கல்வித் துறையில் சுமார் ஆயிரம் பட்டதாரிகளுக்கு புதிய நியமனம் வழங்கப்படும் மகிழ்ச்சியான நாளிது. நாம் பதவிக்கு வந்த மூன்று வருடகாலத்தில் 28,000 புதிய ஆசிரிய நியமனங்களை எம்மால் வழங்க முடிந்துள்ளது.

அரச துறையில் ஆறரை இலட்சம் பேரே தொழில் புரிந்ததுடன் சுற்று நிருபம் மூலம் அத்துறையின் வளர்ச்சியைத் தடுத்து புதிய நியமனங்களை நிறுத்திய யுகம் ஒன்றிருந்தது. அரச துறையை மட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அத்துறையை 12 இலட்சம் பேர் கொண்டதாக வளர்த்தெக்க முடிந்துள்ளமை எமது திட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகிறது.

அரச துறையில் ஆசிரியர் தொழில் என்பது உன்னதமானதும் கெளரவமானதுமானதொரு தொழிலாகும். நாட்டின் தலைவராயினும் கூட தமது ஆசிரியரைக் கனம் பண்ணுவது கெளரவமானதாகும். இத்தகைய உன்னதமான பணி செய்பவர்கள் நாட்டைப் பற்றிய தெளிவுடன் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்குவது அவசியமாகும்.

2004ம் ஆண்டு இந்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை 8.3 வீதமாக இருந்தது. எனினும் அது இன்று 5.1 வீதமாகக் குறைந்துள்ளது. எந்த அழுத்தமோ நிபந்தனைகளோ இன்றி நாம் நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்கிறோம். பயங்கரவாதத்தைப் போன்றே போதையற்ற இலங்கையை உருவாக்குவதிலும் நாம் காத்திரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். புகையிலை, மது போன்றவற்றினால் அரசாங்கத்தின் திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைகின்ற போதும் நாம் பணம் பற்றி சிந்திக்காமல் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கின்றோம்.

நுரைச்சோலை, மேல்கொத்மலை மின்திட்டங்கள் உட்பட கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்திகள் பலவற்றை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றைப் புதிதாக நிர்மாணிப்பதுடன் நகரங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்த அபிவிருத்தியை கிராமங்களின் அடிமட்டத்திற்கும் எடுத்துச் செல்ல முடிந்துள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருகின்றன. நாம் பதவியேற்ற போது 5 வீதமாக விருந்த தகவல் தொழில் நுட்ப அறிவை 28 வீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. வடக்கு கிழக்கில் நாம் சகோதரத்துவத்தினைக் கட்டியெழுப்புவதுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக அவசியமானது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி பயணியான மில்வினா டீன் மரணம்

02-titanic.jpgடைட்டா னிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியான மில்வினா டீன் என்ற பெண் இங்கிலாந்தில் தனது 97வது வயதில் மரணமடைந்தார். கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் பனிபாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் மரணமடைந்தனர். 706 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். விபத்தில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். அப்போது இரண்டு மாத கை குழந்தையாக இருந்த மில்வினா டீன், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் உயிர் பிழைத்தனர்.

தற்போது விபத்து நடந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் மில்வினாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோருக்கு அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 97 வயதான மில்வினா நேற்று முன்தினம் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கொழும்பில் இன்றும் நாளையும் பல பிரதான வீதிகள் பூட்டு

02colombo.jpgகொழும்பு காலிமுகத் திடலில் நாளை நடைபெற உள்ள படையினரின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் கொழும்பிலுள்ள பல பிரதான வீதிகள் போக்குவரத்துக்காக மூடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. மூடப்படும் பாதைகளுக்கு பதிலாக மாற்றுப் பாதைகளினூடாக பயணம் செய்யுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

இன்று இரவு (02) 10.00 மணி முதல் தேசிய வைபவம் முடிவடையும் வரை பாதைகள் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பிலிருந்து கரையோரப் பகுதிக்கான ரயில் சேவை இன்று (02) நள்ளிரவு முதல் நாளை பிற்பகல் 4.00 மணிவரை பம்பலப்பிட்டி வரையே இடம்பெற உள்ளது. மருதானைக்கும் பம்பலப்பிட்டிக்குமிடையில் ரயில் சேவைகள் எதுவும் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மூடப்படும் பாதைகள்

* காலிமுகத்திடலில் இருந்து பம்பலப்பிட்டி வரையான காலி வீதி.

* அப்துல் கபூர் மாவத்தை – காலி வீதி சந்தியில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான பாதை

* கிரீன்பாத் – பிளவர் வீதி சமிக்ஞை விளக்கு சந்தியில் இருந்து லிபர்டி சுற்றுவட்டம் வரை

* ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் வீதி – பித்தளை சந்தியில் இருந்து கொம்பனித் தெரு சமிக்ஞை விளக்கு வரை * பெரஹர வீதி – ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து பெரஹர வீதி வரை

* நவம் வீதி – ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் வீதியில் இருந்து பெரஹர வீதி வரை

* நீதிபதி அக்பர் மாவத்தை – மாக்கான் மாக்கார் மாவத்தை கொம்பனித்தெருவில் இருந்து காலிமுகத்திடல் வரை

* இப்பம்வெல சந்தியில் இருந்து யூனியன் பிளேஸ் வரை

* டீ. ஆர். விஜேவர்தன மாவத்தையில் இருந்து காமினி சுற்றுவட்டம் மற்றும் ரீகல் சுற்றுவட்டம் வரை.

* லோட்டஸ் வீதி, சீ. ரீ. ஓ. சந்தி, செரமிக் சந்தி என்பவற்றில் இருந்து பழைய பாராளுமன்றம் வரை

* யோர்க் வீதி – செரமிக் சந்தியில் இருந்து யோர்க் வீதி வரை.

* செத்தம் வீதி – சீ. ரீ. ஓ. சந்தியில் இருந்து யோர்க் வீதி வரை

* வை. எம். பீ. ஏ. சந்தியில் இருந்து பாரென் ஜெயதிலக மாவத்தை வரையான வீதி.

மாற்று வீதிகள்

* புறக்கோட்டையில் இருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் புறக்கோட்டை, ரெக்லமேசன் வீதி, லோட்டஸ் வீதி, சீ. ரீ. ஓ. சந்தி, ஒல்கட் மாவத்தை, தொழில் நுட்பக் கல்லூரி சந்தி, மருதானை வீதி, பாலம் சந்தி, டார்லி வீதி, இப்பம்வல சந்தி, லிப்டன் சுற்றுவட்டம், சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கர வீதி, நந்தா மோட்டார் சந்தி, ரீட் வீதி, தும்முள்ள சந்தி, புளர்ஸ் வீதி, பம்பலப்பிட்டிய சந்தி ஊடாக காலி வீதியை வந்தடையலாம்.

* காலி வீதி ஊடாக புறக்கோட்டை வரை வாகனங்கள் பம்பலப்பிட்டிய சந்தி, புளர்ஸ் வீதி.

தும்முள்ள சந்தி, ரீட் மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ரோயல் கல்லூரி சுற்று வட்டம், கேம்பிரிஜ் பிளேஸ், கட்டுகே சந்தியால் வலதுபக்கமாக திருப்பி நந்த மோட்டார் சந்தி, ஹோர்டன் சுற்று வட்டம், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், இப்பம்வெல சந்தி, டார்லி வீதி, காமினி சுற்றுவட்டம், பாலம் சந்தி, முதலாவது மருதானை வீதி, தொழில்நுட்பக் கல்லூரி சந்தி, ஹில்டன் மாவத்தையூடாக புறக்கோட்டையை வந்தடையலாம்.

வடக்கின் இரு பாதுகாப்புத் தலைமையகங்களுக்கு புதிய தளபதிகள் நியமனம் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

வடக்கில் மீட்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இரு பாதுகாப்புத் தலைமையகங்களுக்கு இரண்டு புதிய கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷன்ன குணதிலகவும் முல்லைத்தீவு பாதுகாப்புத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நந்தண உடவத்தவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனங்கள் இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய அரசாங்கம் திட்டம்

02-adele.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடெல் ஒரு மருத்துவ தாதியாவார். அன்டன் பலசிங்கம் லண்டனில் இருந்த போது, அவரைச் சந்தித்த அடெல் பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈடுபட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால், அடெல் பாலசிங்கத்தைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அடெல் பாலசிங்கம், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது?

bigben_ap_.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 13.6 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது.  ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன.

இந்த அனைத்து ஆயுத கொடுக்கல் வாங்கல்களும் பூர்த்தியடைந்துள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ தளவாட விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதியளித்த போதிலும், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது குறித்து சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.மோசமான மனித உரிமை நிலைமைகள் காணப்படும் நாடுகளுக்கோ அல்லது உள்ளக பிரச்சினைகள் காணப்படும் நாடுகளுக்கோ ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களை விநியோகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.