எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்களின் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் -அமைச்சர் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgஇலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலைமட்டுமே தெரிவித்த ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இராணுவத்தினர், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள் போன்று விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவர்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக் கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகிறோம். கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதில் சகல ஊடகவியலாளர்களையும் குற்றம் சாட்ட முடியாது.

யுத்தம் காரணமாக சகல துறைகளிலும் பிரச்சினை இருந்தது. வர்த்தகர்கள் மட்டுமல்லாது, இராணுவத்தில் இருப்பவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அரசாங்கத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளும் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தனர். இது தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. யுத்த காலத்தின் போது இவர்களால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இது வேறு பிரச்சினை. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இது தொடர்பிலும் அரசாங்கம் விசாரிக்கும்.

எவ்வாறாயிருப்பினும் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் குறித்து கவலையடைகிறோம். இது குறித்து ஜனாதிபதிக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  அத்துடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பாக 2 வாரங்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேநேரம், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களது விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது;  அது பாதுகாப்பு அமைச்சின் வேலை. இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு நாம் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருக்கிறோம் என்று லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

‘சர்வதேச நாடுகள் இப்போது புலிகள் பற்றி பேசுவதில்லை’ – அமைச்சர் போகொல்லாகம

rohithaogollagama.bmpசர்வதேச நாடுகள் இப்போது எல். ரீ. ரீ. ஈ. யினர் பற்றி பேசுவது இல்லை. அவர்களுடைய கவனம் முழுவதும் இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதிலும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலுமே இருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற மோதல் காரணமாக உள்ளூரில் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துவதில் சர்வதேச சமூகங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், வடக்கிலிருந்து மோதல் காரணமாக இடம் பெயர்ந்திருக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் குறித்து சர்வதேச நாடுகள் இதுவரையில் பேச்சு நடத்தவில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ளவர்களை விரைவில் மீளக் குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் துரித திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய உள்ளூர் உற்பத்தி சதவீதம் மிகவும் குறைவாகும்.

இச்சதவீதத்தை அதிகரித்து வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயகம் தழைத்தோங்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

“வன்னி மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரண உதவிகள் உரிய முறையில் அவர்களுக்கு சென்றடைய வேண்டும்’

refugee_.jpgவன்னி மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரண உதவிகளை ஊழல், வீண்விரயம் ஏற்படாதவகையில் அம்மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஜனாதிபதியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய அபிவிருத்தி முன்னணியின் நகரசபை உறுப்பினர் எம்.ஆர்.சமருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

வடக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள தமிழ் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொடுக்கவும் வெளிநாடுகளால் அனுப்பி வைக்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் முற்றும் முழுதுமாக அம்மக்களுக்கும் அப்பிரதேசங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்நிதி வேறு பிரதேசங்களுக்கு சென்றடையாதவாறும் ஊழல் வீண்விரயம் ஏற்படாத வகையிலும் பயன்படுத்தப்படுவதை ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கனவே கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டிய வெளிநாட்டு நிதியுதவிகள் வீண்விரயம் செய்யப்பட்டதாகவும் ஊழல் இடம்பெற்றதாகவும் சிலரால் கூறப்படுகிறது. வடகிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டும் நிதியுதவியில் இவ்வாறானதொரு அவப்பெயர் ஏற்படாதவாறு ஜனாதிபதியும் அரசும் கவனம் செலுத்த வேண்டும்.

அதேசமயம் வடபகுதி அபிவிருத்தியிலும் அம்மக்களுக்கு இயல்பு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்திலும் அரசாங்கமோ அமைச்சர்களோ அரசுடன் சம்பந்தப்பட்டவர்களோ அரசியல் இலாபம் தேட முற்படக்கூடாது. 30 வருட யுத்தத்தினால் உடல், உள ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இவர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான ரீதியில் அனுப்பப்பட வேண்டுமே தவிர, நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றும் விதமான செயற்பாடுகள் இடம்பெறுவது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன் தெரிவிப்பு

sampanthan.jpgசரண டைந்த விடுதலைப் புலி உறுபினர்கள் சமூகத்தில் இயல்பு வாழ்வை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது தங்கியுள்ள சம்பந்தன் நிருபர்கள் மத்தியில் பேசும் போது இதனைத் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர்களின் நியாய பூர்வமான உரிமைகள் தொடர்பாகத் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படவேண்டும். சாதாரணமாக எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நாம் முன்வைக்கும் தீர்வில் பிரிவினை வாதத்திற்கோ, இனவாதத்திற்கோ இடமில்லை – படைவீரர்கள் தேசிய விழாவில் ஜனாதிபதி

he_speech_ranaviru_.jpgநாங்கள் வழங்கப்போகும் தீர்வுகளில் பிரிவினை வாதத்திற்கோ,  இனவாதத்திற்கோ எந்தவொரு இடமும் இருக்காது என்றும் பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஒன்றுபட்டிருக்கும் எமது தேசத்தை பிளவுபடவோ அல்லது பிரிவினைவாதத்தின் நிழல்கூட விழுவதற்கோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர்வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி:

மிகக்கூடிய விரைவில் எமது பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவகையிலும் தற்போது ஒன்றுபட்டிருக்கும் எமது தேசம் பிளவுபடாதவிதத்திலும் எமது சொந்த தீர்வினை நோக்கி நகர்வோம். ஒருங்கிணைக்கப்பட்ட தாய் நாட்டின் பூமியிலேயே இன்று நான் தேசியக்கொடியை ஏற்றிவைத்தேன் என்பதை கௌரவத்துடனும் பெருமதிப்புடனும் தெரிவித்துக்கொள்கிறேன். போர்திறன்,  செயல்திறன்,  அஞ்சாமை மற்றும் நல்லொழுக்கமுள்ள உலகை வியப்பில் ஆழ்த்திய முப்படை இன்று எம்மிடமுள்ளது. சிறப்புமிக்க ஒரு எதிர்காலம் உருவாவதைக் கண்டுகொள்ள ஆவலுடன் இருக்கும் நாட்டு மக்கள் மத்தியில் எங்கள் எதிர்காலம் தொடர்பாக பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டவனாக நான் இன்று உரையாற்றுகிறேன்.

எமது தாய்நாட்டை ஒருங்கிணைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் சிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கிச்செல்லத் தயாராக உள்ள எங்களுக்கு ஒரு பாதையைத் திறந்துவிட்டுள்ளது. எமது தாய்நாடு பெற்றுள்ள இம்மாபெரும் வெற்றியை உலக நாடுகள் அதிசயத்துடன் பார்த்தமை கடந்த சில நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் புலனாகின்றது. பயங்கரவாதத்தை முரியடித்தமைக்கு பல உலக நாடுகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளன.

இவ்வாறான மிகவும் மோசமான ஒரு தீவிரவாத இயக்கத்தை உலக நாடுகள்; இதுவரை கண்டதில்லை. கப்பல்கள்,விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் பயங்கர ஆயுதங்கள் அதுமட்டுமல்லாமல் தற்கொலைக் குண்டுதாரிகள். எனவே இவ்வாறான ஒரு சக்திமிக்க பயங்கரவாத இயக்கத்தை அழிக்க அதிகாரம் மிக்க ஒரு நாட்டின் அல்லது ஐகிய நாடுகளின் படையை ஈடுபடுத்த வேண்டுமென சிலர் வலியுறுத்தினர்.

ஓரிரு வருடங்கள் அல்ல முப்பது வருட காலமாக அவர்கள் எமது நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தமை மிகவும் மோசமான ஒன்றாகும். நாட்டை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டம் மிக மிகப்பயங்கரமானது. 2005ஆம் காலக்கட்டத்தை எட்டும் போது நான்கு தலைவர்களுடன் போராடி ஒரு தலைவரையும் அழித்துள்ளது. நாட்டில் உயர் பதவி வகித்த படைத்தளபதிகள் பலர் பாதுகாப்பு அமைச்சர்கள்,  உட்பட இந்தியப் பிரதமர் ஒருவரையும் அழித்துள்ளது. விமானங்களையும் படகுகளையும் புனிதத்தளங்களையும் தாக்கியுள்ளது. தலைநகர் உட்பட பொருளாதார வலயத்தையும் தாக்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது எவ்வாறாயினும் அவர்களுக்கு எதிராகப் பேசுவதும் பாரதூரமான விடயமாக இருந்தது. அவ்வாறு பேசினால் பேசியவரின் பரம்பரையே பழிவாங்களுக்கு இலக்காகும் ஆபத்தான நிலை தோன்றியிருந்தது.

தீவிரவாதத்தைத் தோற்கடித்து நாம் பெற்றுக்கொண்டுள்ள புதிய சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஏனைய வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதைத் தவிர்ப்பதற்கும் எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு வெளியுறவுகளில் புதியதோர் யுகத்தை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தாய்நாட்டின் சுதந்திரத்தை வென்றிருக்கும் நாம், அடுத்ததாக எமது சுதந்திரத்தையும் இறைமையையும் சர்வதேச ரீதியாக தாபிக்க வேண்டும். பயங்கரவாதிகள் இந்த நாடுகளில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தமையால் அவர்களுக்கு உலகநாடுகளின் மூலம் ஒரு சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடான எமது நாட்டின் மீது அழுத்தத்தைக் கொண்டுவர முடிந்தது.

முதலாவதாக,  கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த எல்லா வசதிகளையும் நாம் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். 30 வருடங்களாக இருந்துவந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரண்டரை வருட காலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்று இதுவும் ஒரு பாரிய அபிவிருத்தி நடவடிக்கையாக இருக்குமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வடக்கின் வசந்தம் உதயமாவது மட்டுமல்ல. அது வடக்கெங்கும் மிக விரைவில் பரவி வியாபிக்கும்.

தமிழர் படுகொலையில் நம்பியார்கள் சதி- நடவடிக்கை கோரும் ராமதாஸ்

03-satish-nambiar-vijay-nambiar.jpgதமிழர் களை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சதிக்கு பின்னணியில் இருந்த விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரத்தை ஏற்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். இப்போது எங்களுக்கு இருக்கும் கவலையெல்லாம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

வன்னிப் பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.

இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும், ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது. இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.

வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலாளராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் `தமிழர்களை அழித்தொழிக்கும்’ இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும். ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்.

இவ்வாறும். ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து அரசியல் தீர்வு ஒன்றை எட்ட முன்வரவேண்டும் – எஸ்.பி.திஸநாயக்கா

s-b-d.jpgதமிழர் களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் அரசுடனும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்  இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் இப்போது முடிவுற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வின் தேவை அதிகரித்துள்ளது. தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகாரப் பகிர்வைக் கோருகின்ற தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால்தான் தமிழீழக் கோரிக்கை தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

அந்தத் தமிழீழக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து உருவான புலிகள் அமைப்பு இன்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையான அரசியல் தீர்வின் தேவை இல்லாது செய்யப்படவில்லை. அரசியல் தீர்வின் தேவை இப்போதுதான் வலுவடைந்துள்ளது. இந்தத் தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருக்க வேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது இந்தக் கோரிக்கையை ஏற்றுச் செயற்பட வேண்டும்  என்றார். 

இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் சபாநாயர் – முதல் தலித் பெண் சபாநாயகர்

0-meera-kumar-india.jpgஇந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மூத்த காங்கிரஸ் தலைவர் மீரா குமார் இன்று போட்டியி்ன்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல பா.ஜ.க.வின் மூத்த தலைவரான கரியா முண்டா துணை சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

15ஆவது மக்களவையின் சபாநாயகியுள்ள மீரா குமார் காங்கிரஸ் சார்பில் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பையும் முதல் தலித் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் மீரா குமார் பெயரை முன் மொழிந்தும் வழி மொழிந்தும் ஆளும் காங்கிரஸ், எதிர்க் கட்சியான பா.ஜ.க மற்றும் பலவேறு கட்சிகளின் சார்பில் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மீரா குமார் இன்று போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இன்று வெளியிட்டார்.

அதே போல துணை சபாநாயகராக கரியா முண்டாவும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.மீரா குமார், கரியமுண்டா இருவரும் இன்று தங்களது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அனைத்துக் கட்சி எம்பி்க்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 03-meira-kumar.jpg

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு

uno.jpgஇலங் கையில் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுடன் வெள்ளிக்கிழமை விவாதிக்கவுள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனையாகும். இத் தகவலை ஐ.நாவுக்கான துருக்கியின் தூதர் பகி இல்கின் தெரிவித்துள்ளார். 15 நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பு இப்போது துருக்கியிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , இலங்கை விவகாரத்தில் அண்டை நாடுகளோ, சர்வதேச சமுதாயமோ தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் கூறியுள்ளது. உள்நாட்டுப் பிரச்சனையை இலங்கை அரசே கவனித்துக் கொள்ளும். சர்வதேச சமுதாயம் வேண்டுமானால் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளைத் தரலாம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதில் சீனாவும் ஒன்று. இந்த நாடுகளிக்கு வீடோ அதிகாரம் உண்டு. அதன்படி ஐ.நா. பாகாப்பு சபையில் எடுக்கப்படும் எந்த முடிவையும் வீடோ அதிகாரத்தைக் கொண்டு சீனாவால் ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சபையில் உள்ள மற்ற 10 நாடுகள் சுழற்சி முறையில் தாற்காலிக உறுப்பினர்களாகவே இருக்க முடியும்.

யாழ், வவுனியா தேர்தல்களில் அ. இ. மு. காங்கிரஸ் போட்டி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளது.

வடக்கில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதி எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுள் ஒன்றாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக வடக்கில் இருந்து புலம் பெயர்ந்து வாழுகின்ற முஸ்லிம்கள், தமது தாயக மண்ணில் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

சமூக வியாபாரிகளும் அந்நிய சக்திகளின் தரகர்களும் இம்மக்களின் வாக்குகளில் சவாரி செய்ய எத்தனிக்கின்ற இவ் வேளையில் இம்மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்றது. எனவே இத்தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டி யிட்டு தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.