வன்னி மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரண உதவிகளை ஊழல், வீண்விரயம் ஏற்படாதவகையில் அம்மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஜனாதிபதியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய அபிவிருத்தி முன்னணியின் நகரசபை உறுப்பினர் எம்.ஆர்.சமருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
வடக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள தமிழ் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொடுக்கவும் வெளிநாடுகளால் அனுப்பி வைக்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் முற்றும் முழுதுமாக அம்மக்களுக்கும் அப்பிரதேசங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்நிதி வேறு பிரதேசங்களுக்கு சென்றடையாதவாறும் ஊழல் வீண்விரயம் ஏற்படாத வகையிலும் பயன்படுத்தப்படுவதை ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் உறுதி செய்ய வேண்டும்.
ஏற்கனவே கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டிய வெளிநாட்டு நிதியுதவிகள் வீண்விரயம் செய்யப்பட்டதாகவும் ஊழல் இடம்பெற்றதாகவும் சிலரால் கூறப்படுகிறது. வடகிழக்கு மக்களின் மறுவாழ்வுக்கு கிட்டும் நிதியுதவியில் இவ்வாறானதொரு அவப்பெயர் ஏற்படாதவாறு ஜனாதிபதியும் அரசும் கவனம் செலுத்த வேண்டும்.
அதேசமயம் வடபகுதி அபிவிருத்தியிலும் அம்மக்களுக்கு இயல்பு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்திலும் அரசாங்கமோ அமைச்சர்களோ அரசுடன் சம்பந்தப்பட்டவர்களோ அரசியல் இலாபம் தேட முற்படக்கூடாது. 30 வருட யுத்தத்தினால் உடல், உள ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இவர்களின் பிரச்சினைகள் மனிதாபிமான ரீதியில் அனுப்பப்பட வேண்டுமே தவிர, நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தினரையும் ஏமாற்றும் விதமான செயற்பாடுகள் இடம்பெறுவது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.