எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை கையாள செயலணி

susil_prem_minister.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கவனிக்கவென கல்விச் செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் பிரதிக் கல்வியமைச்சர் சச்சிதானந்தனும் அங்கம் வகிக்கின்றார்.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வவுனியா தெற்கு கல்வி வலய அலுவலகத்திற்கு விஜயம் செய்தது. இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியா தெற்கு கல்வி வலயக் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் சச்சிதானந்தன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டிலேயே கல்விச் செயலணி அமைக்கப்பட்டது. கல்வி தொடர்பான குறைபாடுகள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக மேற்படி செயலணி நடவடிக்கைகள் எடுக்கும். அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த், அனைத்துக் குறைபாடுகளும் குறுகிய காலத்தில் நிவர்த்திக்கப்படுமென உறுதியளித்தார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் 17 பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவைகள் இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்வரும 31ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளில் தங்கியிருப்போர் ஆறாவது வலய நிவாரணக் கிராமங்களுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் அதன் பின்னர் 17 பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுமெனக் கூறினார்.

நிவாரணக் கிராமங்களில் 55 ஆயிரம் மாணவர்களும் 1969 ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். இவர்களுக்கென 13 கோடி ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரி யைகளுக்கான சேலைகள் உட்பட ஏராளமான பொருட்கள் கல்வியமைச்சரினால் கையளிக்கப்பட்டன. இதேவேளை நிவாரணக் கிராமங்களில் கல்வி நடவடிக்கைகளைக் கண்காணிக்கவென கண்காணிப்பு அலுவலகமொன்று அமைக்கப் பட்டுள்ளது. கல்வியமமைச்சர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

‘கப்டன் அலி’ தொடர்ந்தும் தடுத்துவைப்பு: கடற்படையினர் தீவிர விசாரணை

vanangaaman-captainali.jpgஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த “கப்டன் அலி” சரக்குக் கப்பல் பாணந்துறை கடற்பரப்பினுள் தடுத்து நிறுத்தப்பட்டு கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். கொழும்பிலிருந்து சுமார் 87 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4.00 மணியளவில் கைப்பற்றப்பட்ட எம். வி. கப்டன் அலி சரக்குக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொண்டுவந்துள்ளதாக கூறியே இக் கப்பல் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்துள்ளது. எனினும் இன்னொரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதாயின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் எதுவித முன்னறிவித்தலும் இன்றி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது. கடற்படையின் விசாரணைகள் இன்னும் முடியவில்லை. முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாணந்துறை கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இக் கப்பலில் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கலாக சுமார் 884 மெற்றிக் தொன் பொருட்கள் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ஐஸ்லாந்து பிரஜையும், ஒரு ஆங்கிலேய பிரஜையும் இரண்டு எகிப்திய பிரஜைகளும். 11 சிரிய பிரஜைகளும் உட்பட 15 மாலுமிகள் இருந்தனர். கப்பலின் கப்டனும் சிரிய பிரஜையென கடற்படை அறிவிக்கிறது.

சுமார் 93 மீற்றர் நீளமும், 14 மீற்றர் அகலமும் கொண்டதான சரக்குக்கப்பல் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை கடற்பரப்பிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளது.கப்பல் தொடர்பாக கடற்படையினரின் விசாரணைகள் யாவும் பூர்த்தியானதுமே மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கொஹன தெரிவித்தார்.

வங்காளவிரிகுடாவில் சிறிய தாழமுக்கம்; சில தினங்களுக்கு காற்றுடன் மழை

fishing_peoples.jpgவங்காள விரிகுடாவின் வட மேற்கு பகுதியில் தாழ முக்க அறிகுறிகள் உருவாகி யிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இதன் விளைவாக அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடைஇடையே கடும் காற்று வீச முடியும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவின் வட பகுதியில் தாழமுக்க அறி குறி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டில் இடையிடையே கடும் காற்று வீச முடியும். இச்சமயம் மணித் தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், இந்த நாட்களில் கடலும் கொந்தளிப்பாக இருக்கும். அதனால் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது அவசியம். இதேவேளை, கடல் பரப்பிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்தோடு மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்றார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கும்

gl-perees.jpgசர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவி விரைவில் இலங்கைக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகப் பொருளாதார நெடிக்கடியால் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.

தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நீதியான ஊடக சுதந்திரம் அவசியம் – ரணில்

ranil-wickremasinghe.jpgதேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப நீதியான ஊடக சுதந்திரம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் வெள்ளைவான் தலைகாட்டியிருப்பதாகவும் விசனம் தெரிவித்திருக்கிறார்.  ஊடக சுதந்திரத்தை பாதுகாத்து ஜனநாயகத்தை மேம்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரஸில் வியாழக்கிழமை இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;  நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனைக் கட்டி யெழுப்புவதற்கு ஊடக சுதந்திரம் அவசியமானதாகும்.  ஊடக வியலாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊடகவியலாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளருமான போத்தல ஜயந்த கடத்தப்பட்டு ஒருபகுதி தலைமயிர், தாடி வெட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இது தொடர்பில் அரசு கவலை தெரிவித்ததுடன், விசாரணை நடத்துவதாக சொல்கின்றது. கடந்த காலங்களில் பல ஊடக வியலாளர் கொல்லப்பட்டும் தாக்கப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டுமுள்ள நிலையில், இது தொடர்பிலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதேவேளை, போத்தல ஜயந்தவின் கடத்தல் தொடர்பில் பொலிஸுக்கு தகவல் வழங்கிய ஈநியூஸ் ஊடகவியலாளரான பேர்னாட் ரூபசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்தநிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதன் அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படப் போகின்றாரென நான் கேட்கின்றேன். அவரது பிழை என்ன?  இன்று ஊடகவியலாளர் நீதியாகவும் சுதந்திரமாகவும் செயற்பட முடியாது அச்சம் அடைந்துள்ளனர். என்வே அரசாங்கம் இக்கடத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது தொடர்பில் அரசு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. நாட்டில் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு நாம் அரசுக்கு ஒத்துழைக்கத் தயார் என்றார்.

ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது

06navi.jpgஇலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது. இலங்கை மோதல்களின் போது அனைத்து தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முழுமையான விசாரணை தேவை என்று மனித உரிமைகள் ஆணையர் கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்த சர்வதேச விசாரணைகள் தேவை என்று கூறிய அவர், அதற்கான ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவின் உதவிகளை தான் ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியிருந்தார். ஆனால், அவரது இந்த கோரிக்கையை ஐ. நாவின் இலங்கைக்கான தூதுவர் தயான் ஜயதிலக நிராகரித்திருக்கிறார்.

உலகில் பல பாகங்களில் முன்னைய போர்களின் போது தோல்வியடைந்தவர்களே இப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய தயான் ஜயதிலக, அதேவேளை இலங்கைப் படையினர், தமது நாட்டு எல்லைக்குள், அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மாத்திரமே போரிட்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

வன்னியிலிருந்து 3100 கர்ப்பிணி தாய்மார் இடம்பெயர்வு – 200 கட்டிலுடன் செட்டிக்குளத்தில் நவீன மகப்பேற்று மருத்துவமனை

06images.jpgவவுனி யாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மாரின் நலன் கருதி இருநூறு கட்டில்களைக் கொண்ட சகல வசதிகளுடனான புதிய மகப்பேற்று மருத்துவ மனையொன்று செட்டிக்குளம் பிரதேசத்தில் துரிதகதியில் அமைக்கப்படவிருக்கின்றது-

இந்த மகப்பேற்று மருத்துவ மனையைத் துரிதமாக அமைப்பதற்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ளார்.

வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் 3100 கர்ப்பிணித் தாய்மார் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சிறந்த ஆரோக்கிய சேவை வழங்கவென தனியான மகப்பேற்று மருத்துவமனை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அமைச்சர் இத்துரித நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

இந்நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வடமாகாண புனர் வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடனும் கலந்துரையாடியுள்ளார்.

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் பெரும் பகுதியினர் 16, 17 வயதுகளையுடையவர்களாவர். இவர்களுக்கு விசேட ஆரோக்கிய சேவை வழங்குவது அவசியம். இதனையும் கருத்திற்கு கொண்டே இத்துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இதேவேளை இக் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்க மருத்துவமாதுகள் ஊடாக விசேட ஆரோக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மிஹிந்தலையில் 3 குளங்களில் நீராடத் தடை

poson_s.jpgஅநுரா தபுரம் மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி தீஸாவெவ, நுவரவெவ, கலாவெவ, ஆகிய குளங்களில் நீராடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொசன் குழுவின் தலைவரும் மாவட்ட செயலாளருமான எச். எம். கே. ஹேரத் தெரிவித்தார்.

பொசன் நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் நீராடுவதற்கு அபயவெவ, பாலவக்குளம், மஹாகனந்தராவ ஆகிய குளங்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் கருத்து தனிப்பட்ட கருத்து என்கிறார் இலங்கை அமைச்சர்

06srilanks_chief_judge.jpgஇலங்கையில் போர் காரணமாக இடமபெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் இடைத்தங்கல் முகாம்களின் நிலைமை குறித்து நாட்டின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா கடுமையான விமர்சனங்களை கூறியிருந்தார்.

ஆனால் அது அவரது சொந்தக் கருத்து என்று இலங்கை அமைச்சர் ஒருவர் இன்று கூறியுள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் மிகப் பெரிய கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையில் வாழ்கிறார்கள் என்று தலைமை நீதிபதி சரத் சில்வா நேற்று கூறியிருந்தார்.

நிவாரண கிராமங்களிலும் உரிய நேரத்தில் பரீட்சைகள் – கல்வியமைச்சர்

teacher.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களுக்கு 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும், க. பொ. த. (உ/த) பரீட்சையும் உரிய நேரத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். பரீட்சைகள் உரியய நேரத்தில் சகல பகுதிகளிலும் நடத்தப்படும்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரி, இந்துக் கல்லூரி உட்பட பல பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, நிவாரணக் கிராமங்களில் வழிகாட்டல் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைவிட விசேட வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறினார்.