எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா இராணுவ முகாம் ஆயுத களஞ்சியசாலையில் திடீர் தீ விபத்து

007vauniya.jpgவவுனி யாவில் அமைந்துள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வெடித்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்து இன்று மாலை 5.15 மணியளவில் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக அரை மணித்தியாலத்திற்கு வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் நகரமே அதிர்ந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இராணுவத்தின் 211 ஆவது படை தலைமையகத்தின் ஆயுத களஞ்சிய சாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தலைமையகம் இராணுவ முகாமிற்கும் விமான படை முகாமிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டமையினால் நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் ஏற்பட்டது. நகரத்திற்கு வருகைதந்திருந்தவர்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளை நோக்கி விரைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது

புகைப்படம்: லங்காதீப

யுத்தம் முடிவடைந்துவிட்டது; ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதே அடுத்த இலக்கு – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpg“இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து இன மக்களுமே தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தத்தினால் நிம்மதி இழந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். யுத்தம் முடிவடைந்துவிட்டது. இனி எமது கடமை ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதேயாகும். அதனை நான் முன்னெடுத்தே தீருவேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கதிர்காமப் பகுதியிலுள்ள கித்துல்பவ்வ சரித்திரப் பிரசித்திபெற்ற பௌத்த விகாரையில் இடம்பெற்ற “பொசன்’ பண்டிகையில் கலந்துகொண்ட பின்னர் அங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தனது உரையில் தொடர்ந்து கூறியதாவது;

எந்தவொரு நாட்டில் ஒழுக்கக்கேடுகள் உள்ளதோ அந்த நாடு சீரழிந்துவிடும். நாங்கள் யுத்தத்தில் வெற்றிகண்டுவிட்டோம் என்று கூறிக்கொண்டு இருந்துவிட முடியாது. அதேபோல், எம்மத்தியில் அதுவும் அரச தலைவன் என்ற ரீதியில் வெற்றிகொள்வதற்காக எத்தனையோ சவால்கள் என்முன்னே இருக்கின்றன. அவைகளுள் ஒன்றுதான் நாட்டின் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.

முதலில் சகல மதகுருமார்களுக்கும் அதேபோல், வயோதிபர்களுக்கும் மரியாதை செய்து அவர்களுடன் மக்கள் அனைவரும் கௌரவத்துடன் செயற்பட்டு இந்த நாட்டை ஒழுக்கமுடைய நாடாக மாற்றி அமைப்பேன். கித்துல்பவ்வ விகாரை அன்று கவன்திஸ்ஸ அரசனின் பரிபாலத்தின் கீழ் இருந்தது. எதிரிகள் அதனை அழிக்க முற்பட்டபோது, பௌத்த குருமார்களே பாதுகாத்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள தங்க வேலியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். பகல் 12 மணிவரை இங்கு தங்கியிருந்து பௌத்த மக்களுடன் ஜனாதிபதி பொசன் பண்டிகை சமய வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதேநேரம், சனிக்கிழமை மாலை கதிர்காமம் வந்த ஜனாதிபதி இங்குள்ள முருகன் ஆலயம் மற்றும் கிரிவிகாரை என்றழைக்கப்படும் சூரன் கோட்டைக்கும் சென்று வழிபட்டார்.

முருகன் ஆலயத்தில் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். ஜனாதிபதியுடன் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரும் பூஜைகளில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை இந்திய பிரதமருடன் சந்திப்பு

007tna.jpgஇரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்ட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் சென்றுள்ள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திர பொன்னம்பலம் ஆகியோர் அணமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை நிலவரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, தமிழர் மறு வாழ்வு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.

யசூசி அகாஷியின் வருகையின் நோக்கங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

yasusiakasi.jpgஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி பதினெட்டாவது முறையாக இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் அகாஷி வந்துசென்ற ஒவ்வொரு முறையின் பின்னரும் அவரது வருகை நோக்கங்கள் தொடர்பில் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் விளக்கமின்மை நிலவி வந்துள்ளது என்பதை ஜப்பானிய அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள ஜப்பானிய தூதுவரும் புரிந்துகொள்ளவேண்டும் என மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷியின் வருகை தொடர்பாக மனோ எம்.பி.மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார பங்காளி நாடு ஜப்பானாகும். இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஜப்பானின் இலங்கை தொடர்பிலான நோக்கங்கள் பொருளாதார ஒத்துழைப்பிற்கு அப்பால் இருக்கின்றதா என்பது பற்றி எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

தீராத தேசிய இனப்பிரச்சினை காரணமாகவும் போர்ச் சூழல் காரணமாகவும் இலங்கையிலே வேறு எந்தவொரு பிரிவினரையும் விட அதிக துன்பங்களை அடைந்துள்ளவர்கள் தமிழ் மக்களே என்ற அடிப்படை உண்மையை சமாதானத்திற்கான விசேட தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொண்டுள்ளாரா என்பது பற்றி எமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

வர்த்தக பொருளாதார தூதுவராக அல்லாமல் சமாதானத் தூதுவர் என்ற அடிப்படையில் யசூசி அகாஷியின் பயணங்கள் அடையாளப்படுத்தப்படுவதால் எமக்கு இந்த சந்தேகங்களை எழுப்புவதற்கு உரிமை இருக்கின்றது. ஜப்பான் ஒரு பௌத்த நாடு. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதேவேளையில், இலங்கை நாட்டில் பௌத்தர்களுடன் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் வாழ்வதை ஜப்பான் அறிந்துகொள்ளவேண்டும். எனவே, இலங்கை பற்றிய நோக்கங்கள் முழுநாட்டிலும் வாழும் அனைத்து மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டவையாக அமைவது அவசியமானதாகும்.

வடக்கிலே இன்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொல்லொணா துன்பங்களை நீக்கும் பாரிய மனிதநேய பணியில் பங்களிப்பு செலுத்தும் அதேவேளையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவதில் பிரதான அக்கறையை ஜப்பான் வெளிப்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்விற்கு ஜப்பான் அரசாங்கத்தின் பங்களிப்பு இதுவரை இருந்ததைவிட வெளிப்படையாக அமையவேண்டும்.

இலங்கையிலே போருக்கும் சமாதானத்திற்கும் இடையிலே மதில் சுவராக இருப்பது நேர்மையான அரசியல் அதிகார பகிர்வின்மை என்பதை ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொள்ளவேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வன்னி ஆயுத படை தலைமயகத்தின் ஆயுத கிடங்கில் தீ விபத்து

வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழுமையான சுதந்திர மனநிலையுடன் காணப்படுகின்றனர் – பாராளுமனறத்தில் பிரதமர் ரத்தனசிறி விக்ரமநாயக்க

06arliament.jpgபல தசாப்த காலமாக தீவிரவாதத்தினால் துன்பப்பட்டு வந்த மக்கள் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால்  வீதிகளில் குழுமி ஆரவாரம் செய்தனர். அவர்கள் தற்போது முழுமையான சுதந்திர மனநிலையுடன் காணப்படுகின்றனர்  என்று பிரதமர் ரத்தனசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில்  இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபேதே பிரதமர் இதனைக் கூறினார்.

நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய  அரசாசாங்கம் ஆரம்பித்துள்ள அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். தற்போது நிலவும் அமைதியான  சூழ்நிலையைப்பாதுகாக்க  அரசாங்கத்தால் மாத்திரம் முடியாது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இந்தப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சகல சக்திகளையும் அழிப்பதற்கு அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இந்தியாவிலுள்ள புலி சார்பு இலங்கையர்களின் வீசாக்களை ரத்துச் செய்யவும்

subramanian_swamy__.jpgஇந்திய ஆள்புல எல்லையில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள இலங்கை பிரஜைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, இவர்களின் வீசாக்களை இந்திய அரசு ரத்துச் செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருப்பதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவ்வாறு இந்திய அரசுக்கு எதிராகக் கோஷமிடுபவர்களில்  பெரும்பாலானவர்கள் புலிசார்பு பிரசாரர்களாகும். இந்தியர்கள் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு இந்திய அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்தால் நாம் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம். மேலும் எமது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்குத் திட்டமிடுவதாக வெளிநாட்டு அரசாங்கங்களை சந்தேகப்படுவோம். எனவே இவ்வாறான விடயங்களில் நாம் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியாது.

ஜனநாயக நாடான இலங்கை,  சார்க் அமைப்பின் ஓர் அங்கத்துவ நாடாகவும் காணப்படுகிறது. இலங்கைப் பிரஜைகளுக்கு இலங்கையிலிருந்துகொண்டு எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

06arliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள்  வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை. 

யசூசி அகாசி நலன்புரி நிலையங்களுக்கு விஜயம்

yasusiakasi.jpgயப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி இன்று (09.06.2009) வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை பார்வையிட்டுள்ளார். அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆராய்த அவர் மக்களின் குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். இவரின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான இரு பிரேரணைகள் மீதான விவாதம் இன்று

parliament.jpgமத்திய மாகாண சபைக்கு உட்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற இரண்டு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாணசபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை இந்தச்சபையின் விவாதத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இன்று தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது பாரிய பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பட்ச சம்பளமே கிடைத்து வருகின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்ந்து பல்வேறுவகையில் ஏனைய சமூகங்களை விட பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. இந்த நாட்டுக்கு பொருளாதார வளத்தினைப் பெற்றுத்தருகின்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டுமென்பதை மத்திய மாகாணசபையின் ஊடாக அழுத்தமொன்றைக் கொண்டு வருவதற்குத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன், அரசாங்கத்தின் எந்தவொரு வறுமை நிவாரணமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 32 வீதமான வறுமையுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அரசாங்க வரவுசெலவுத்திட்டப் பிரேரணையிலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படாதுள்ளமை பாரியதொரு அநீதியாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவதற்கு மத்திய மாகாணசபையின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொண்டு வரும் வகையில் மேலும் ஒரு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். ஆகவே, இந்தப் பிரேரணைகளை மத்திய மாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் முன்வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.