யசூசி அகாஷியின் வருகையின் நோக்கங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும்

yasusiakasi.jpgஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி பதினெட்டாவது முறையாக இலங்கை வந்துள்ளார். கடந்த காலங்களில் அகாஷி வந்துசென்ற ஒவ்வொரு முறையின் பின்னரும் அவரது வருகை நோக்கங்கள் தொடர்பில் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் விளக்கமின்மை நிலவி வந்துள்ளது என்பதை ஜப்பானிய அரசாங்கமும் இந்நாட்டிலுள்ள ஜப்பானிய தூதுவரும் புரிந்துகொள்ளவேண்டும் என மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷியின் வருகை தொடர்பாக மனோ எம்.பி.மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையின் மிகப்பெரிய பொருளாதார பங்காளி நாடு ஜப்பானாகும். இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால், ஜப்பானின் இலங்கை தொடர்பிலான நோக்கங்கள் பொருளாதார ஒத்துழைப்பிற்கு அப்பால் இருக்கின்றதா என்பது பற்றி எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

தீராத தேசிய இனப்பிரச்சினை காரணமாகவும் போர்ச் சூழல் காரணமாகவும் இலங்கையிலே வேறு எந்தவொரு பிரிவினரையும் விட அதிக துன்பங்களை அடைந்துள்ளவர்கள் தமிழ் மக்களே என்ற அடிப்படை உண்மையை சமாதானத்திற்கான விசேட தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொண்டுள்ளாரா என்பது பற்றி எமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

வர்த்தக பொருளாதார தூதுவராக அல்லாமல் சமாதானத் தூதுவர் என்ற அடிப்படையில் யசூசி அகாஷியின் பயணங்கள் அடையாளப்படுத்தப்படுவதால் எமக்கு இந்த சந்தேகங்களை எழுப்புவதற்கு உரிமை இருக்கின்றது. ஜப்பான் ஒரு பௌத்த நாடு. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதேவேளையில், இலங்கை நாட்டில் பௌத்தர்களுடன் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் வாழ்வதை ஜப்பான் அறிந்துகொள்ளவேண்டும். எனவே, இலங்கை பற்றிய நோக்கங்கள் முழுநாட்டிலும் வாழும் அனைத்து மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டவையாக அமைவது அவசியமானதாகும்.

வடக்கிலே இன்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொல்லொணா துன்பங்களை நீக்கும் பாரிய மனிதநேய பணியில் பங்களிப்பு செலுத்தும் அதேவேளையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவருவதில் பிரதான அக்கறையை ஜப்பான் வெளிப்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்விற்கு ஜப்பான் அரசாங்கத்தின் பங்களிப்பு இதுவரை இருந்ததைவிட வெளிப்படையாக அமையவேண்டும்.

இலங்கையிலே போருக்கும் சமாதானத்திற்கும் இடையிலே மதில் சுவராக இருப்பது நேர்மையான அரசியல் அதிகார பகிர்வின்மை என்பதை ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி புரிந்துகொள்ளவேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    மகாகணேசனின் சந்தேகம் சரியானதுதான்! ஆனால் எந்தநாடு வெளிப்படையாக செயற்படுகின்றது! அந்தளவிற்கு இலங்கையின் கதவுகள் வெளிநாட்டு (காலனித்துவத்திறகு) விருந்தாளிகளுக்கு எப்போவோ திறந்து விடப்பட்டாச்சு!

    Reply