“இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து இன மக்களுமே தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தத்தினால் நிம்மதி இழந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். யுத்தம் முடிவடைந்துவிட்டது. இனி எமது கடமை ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதேயாகும். அதனை நான் முன்னெடுத்தே தீருவேன்’ என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கதிர்காமப் பகுதியிலுள்ள கித்துல்பவ்வ சரித்திரப் பிரசித்திபெற்ற பௌத்த விகாரையில் இடம்பெற்ற “பொசன்’ பண்டிகையில் கலந்துகொண்ட பின்னர் அங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தனது உரையில் தொடர்ந்து கூறியதாவது;
எந்தவொரு நாட்டில் ஒழுக்கக்கேடுகள் உள்ளதோ அந்த நாடு சீரழிந்துவிடும். நாங்கள் யுத்தத்தில் வெற்றிகண்டுவிட்டோம் என்று கூறிக்கொண்டு இருந்துவிட முடியாது. அதேபோல், எம்மத்தியில் அதுவும் அரச தலைவன் என்ற ரீதியில் வெற்றிகொள்வதற்காக எத்தனையோ சவால்கள் என்முன்னே இருக்கின்றன. அவைகளுள் ஒன்றுதான் நாட்டின் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதாகும்.
முதலில் சகல மதகுருமார்களுக்கும் அதேபோல், வயோதிபர்களுக்கும் மரியாதை செய்து அவர்களுடன் மக்கள் அனைவரும் கௌரவத்துடன் செயற்பட்டு இந்த நாட்டை ஒழுக்கமுடைய நாடாக மாற்றி அமைப்பேன். கித்துல்பவ்வ விகாரை அன்று கவன்திஸ்ஸ அரசனின் பரிபாலத்தின் கீழ் இருந்தது. எதிரிகள் அதனை அழிக்க முற்பட்டபோது, பௌத்த குருமார்களே பாதுகாத்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள தங்க வேலியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். பகல் 12 மணிவரை இங்கு தங்கியிருந்து பௌத்த மக்களுடன் ஜனாதிபதி பொசன் பண்டிகை சமய வழிபாடுகளில் கலந்துகொண்டார். அதேநேரம், சனிக்கிழமை மாலை கதிர்காமம் வந்த ஜனாதிபதி இங்குள்ள முருகன் ஆலயம் மற்றும் கிரிவிகாரை என்றழைக்கப்படும் சூரன் கோட்டைக்கும் சென்று வழிபட்டார்.
முருகன் ஆலயத்தில் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார். ஜனாதிபதியுடன் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரும் பூஜைகளில் கலந்துகொண்டனர்.