எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மிஹிந்தலையில் காணாமல்போன சிறுமி நேற்று சடலமாக மீட்பு – 42 வயது நபர் கைது; தாய்க்குத் தொடர்பு?

மிஹிந் தலை பிரதேசத்தில் காணாமல் போன ஆறு வயது சிறுமி நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்ஷனிகா லக்ஷானி குணரட்ன என்ற பெயருடைய இந்தச் சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்தே நேற்றுக் காலை 9.00 மணியளவில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 06ம் திகதி சனிக்கிழமை இந்தச் சிறுமி மிஹிந்தலை கசமடாவ பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாகவும் இரண்டு தினங்களுக்குப் பின்னர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பி. குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்டுள்ள சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல்வேறு பாலியல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் இராணுவ வீரரொருவரான இச்சிறுமியின் தந்தை இராணுவத்திலிருந்தபோது விடுமுறையில் வந்து மீண்டும் சேவைக்குத் திரும்பாததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டதுடன் கடந்த பொஸன் போயா தினத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்று வந்துள்ளார். இச்சம்பவத்துடன் சிறுமியின் தாய்க்கும் தொடர்பிருக்கலாம் என சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோனின் ஆலோசனைக்கிணங்க மிஹிந்தலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வடக்கில் தற்காலிக அடையாள அட்டை

election_ballot_.jpgவடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதோடு யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 417 பேரும் வவுனியா நகர சபை தேர்தலில் வாக்களிக்க 24 ஆயிரம் பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் பலருக்கு அடையாள அட்டை இல்லை என அறிவிக்கப்படுவதால் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

இதன்படி தமது பிரதேச கிராம உத்தியோகத்தரினூடாக தற்காலிக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்குமாறு தேர்தல் செயலகம் கோரியுள்ளது. சகல தேர்தல்களிலும் அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு,  சாரதி அனுமதிப் பத்திரம், புகையிரத பருவச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை என்பன உள்ளவர்களுககு மாத்திரமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் 25 இடங்களில் நாளை மின்வெட்டு

மட்டக் களப்பு மாவட்டத்தில் 25 இடங்களில் 9 மணிநேர மின்வெட்டு நாளை வியாழக்கிழமை அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய மின்சார சபை அறிவித்துள்ளது.

காலை 8.00 மணி முதல் 5 மணி வரை சத்துருக்கொண்டான், மைலம்பாவெளி, ஏறாவூர் நகரம், மீராங்கேணி, சதாம்ஹுசைன் கிராமம், மிச்நகர், செங்கலடி, கொடுவாமடு, இலுப்படிச் சேனை, கரடியனாறு, ஆயித்திய மலை, உன்னிச்சை, கித்துள், மரப்பாலம், உறுகாமம், கொம்மாதுறை, கழுவங்கேணி, மாவடிவேம்பு, சித் தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கிண்ணையடி ஆகிய 25 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

தமிழர்கள் ஜனநாயகத்திற்கான தகுதி பெற வேண்டும். : வ அழகலிங்கம்

TULF Leader Anandasangaree Vயாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை  ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:-

“தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு  ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட்  ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை  இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.

தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன  எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய  மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள்.

ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும்  கோரலாம்.

ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத  இயக்கங்களும் தோன்றாது.  மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை.

ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின்  சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும்.

அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம்.

தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries  (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும்.

அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும்.

தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது.

ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும்  கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய  33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை.

இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ்  மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும்   வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது.

இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால்  வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார்.

இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு?

யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச்  செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும்.

இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும்.

நடப்பு 2009  ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்  திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன.  அவை  பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில்  அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது.  கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது.

அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது.

ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.  வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள்  உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.”

இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
   
ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது.  ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது.  மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக  13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன.

135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன.

உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன.

31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது.

இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர்  தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது.

வடமாகாணத்திற்கு தெருக்களையும்  றெயிற் பாதைகளையும்  அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர்  உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின்  2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கயிலே  ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும்.

இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில்  தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும்.

ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும்.

இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும்  தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில்  இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர்.  இன்றும் தமிழ்  சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.  அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும்.

உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின்  பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும்.

இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது  எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும்.

In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within.

03.06.2009

உலக கிண்ண போட்டிக்கான புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்கு திறந்து வைப்பு

new-stadium.pngதென்னா பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்  போட்டிக்காக அமைக்கப்பட்ட புதிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கு நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு ஐந்து புதிய கால்பந்தாட்ட விளையாட்டு  அரங்குகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட புதிய கால்பந்து அரங்கு போர்ட் எலிஸபத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. “நெல்ஸன் மண்டெலா பே” என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கு 48,000 ஆசனங்களை கொண்டுள்ளது.

இங்கு 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் காலிறுதி மற்றும் மூன்று, நான்காம் இடங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் உட்பட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் இங்கு முதல் விளையாட்டாக பிரித்தானிய அயர்லாந்து லயன்ஸ் அணிகள் மோதும் ரக்பி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தேசிய கொடி எரிப்பு-வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன்

தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை  உயர்நீதிமன்றம்  வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.

இந்த அமைப்புகளின் சார்பில், மே 24ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தமிழரசன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் எட்டு பேருக்கும் உள்ளூர் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை நீதிபதி ரகுபதி  விசாரித்தார். பின்னர் வித்தியாசமான நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்தார். அந்த வித்தியாசமான நிபந்தனை என்னவென்றால், எட்டு பேரும் ஒரு மாதத்திற்கு தங்களது வீடுகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

ஒரு வாரத்திற்கு, தினமும் 3 மணி நேரம் அனாதை இல்லத்திற்கு சென்று பொது சேவை செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு அந்தக் கொடியை ஏற்றி வர வேண்டும் என வித்தியாசமான தண்டனை கொடுத்தது நீதிமன்றத்தில் பலரையும் வியப்படைய வைத்தது.

சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா

07sivageetha.jpgமட்டக் களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மத்திய குழு தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது.

அக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர சபை முதல்வர் சிவகீதா பிரபாகரன் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

லெபனான் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி அபார வெற்றி

election_ballot_.jpgலெப னானில் நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் சாத் ஹரிரி தலைமையிலான  கூட்டணி அபார வெற்றியைப்  பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் தமது கூட்டணியான 14 மார்ச் முன்னணி தொடர்ந்தும் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்குமென அதன் ஹரிரி தெரிவித்துள்ளார். வேளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின்படி ஹரிரி தலைமையிலான கூட்டணி 128 மொத்த ஆசனங்களில் 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஹிஸபுல்லா அமைப்பு 57 ஆசனங்களையே பெற்றுள்ளதுடன் அதன் தலைவர் ஹஸன் நஸ்ருல்லா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 128 ஆசனங்களில் ஹரிரியின் கூட்டணி 70 ஆசனங்களையும் ஹிஸ்புல்லாஹ் முன்னணி 58 ஆசனங்களையும் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும்; வெற்றிபெற்ற அணி எதிர்பார்த்ததைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாக பெற்றுள்ளது.

இங்கு வெற்றி பெற்றவர் தோல்வியடைந்தவர் என எவருமில்லை. லெபனானும் ஜனநாயகமுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதெனத் ஹரிரி தெரிவித்துள்ளார். 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த அதேவேளை, 50 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லெபனானின் அதிகாரப்பகிர்வு அரசியல் முறைமையின் கீழ் பாராளுமன்றத்தின் 128 ஆசனங்களும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம்: ஆனந்தசங்கரி

007anandasangaree.jpg“தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டும். தமிழர்களின் முதல் எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே” என ஜனநாயக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீரழித்து, அவர்களை அநாதைகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோர்களாகவும் ஆக்கி அகதி முகாம்களுக்குள் முடக்கியுள்ள பாவத்தையும், பழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும்.

புலிகளின் பிடியிலிருந்த அப்பாவித் தமிழர்களை விடுவிக்க முயற்சிக்காமல் புலித் தலைமைகளைக் காப்பாற்றவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபட்டது. ஐரோப்பிய யூனியன், ஐ.நா. என்பன எவ்வளவோ வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி,பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் புலிகளின் தந்திரத்துக்குத் தாளம் போட்டது.

இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் சொத்துக்களையும், இருப்பிடங்களையும், உறவுகளையும் இழந்துள்ளனர். என்றோ ஒருநாள் முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்பும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுதலான அணுகுமுறைகளை மக்கள் புரிந்துகொள்வர். புலிகளின் பிடியிலிருந்து நாங்கள் விடுபட்டிருந்தால் இந்த இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என உணர்ந்து கொள்வர்.

தமிழர்களின் உயிர்களும் உடைமைகளும் காவு கொள்ளப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொள்ள எவ்வித அருகதையும் கிடையாது. அவ்வாறு இணைந்தால் உயிரிழந்த, காயமடைந்த, அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, புலிகளை ஏகப் பிரதிநிதிகளாகக் கொண்டோர் குறையாக எடைபோடக்கூடாது. மேயர் பதவிகளுக்காகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவோ தமிழ்க் கூட்டமைப்பைப் போல் விலைபோக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு தடியால் தொடுவதற்குக் கூட நாங்கள் தயாரில்லை.

புலிகள் அழிந்துவிட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஐந்து வருடம் தனியாக நின்று போராடினேன். இதனால் துரோகி என விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் இன்று சரியான பாதையில் உள்ளேன். அதை நிரூபித்தும் விட்டேன்” என்றார். 

வடமாகாண முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் ரவூப் ஹக்கீம் பின்னால் ஒருபோதும் செல்லமாட்டார்கள்

rizad_baduradeen1.jpgவட மாகாண முஸ்லிம்கள் மீது உண்மையான பற்றும் பாசமும் உள்ள அவர்களின் எதிர்கால வாழ்வில் அக்கறையும் தன்மானமுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்லமாட்டார்களென தெரிவித்துள்ள மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன், எதிர்க் கட்சியில் இருந்து நாம் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் எமது சமூகம் எங்கு சென்றிருக்கும் எனவும் கேள்வியெழுப்பினார்.

புத்தளம் வேப்பமடு றஹ்மத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்படைகளினதும் பொலிஸாரினதும் கௌரவிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு கூறினார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விழா, கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடியாது என்று வெளிநாட்டு சக்திகளின் தயவை நாடி சில கட்சிகளும் அமைப்புகளும் செயற்பட்ட போது அதற்கு எதிராகப் பயங்கரவாதிகளைத் தேடி அழிக்கும் பணியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்று செயற்பட்டதன் பிரதிபலனை எமது மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.  மூதூரிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், கந்தளாய் பிரதேசத்தில் தஞ்சமடைந்தனர். இம் மக்கள் வெளியேறி வந்த போது பட்ட துன்ப, துயரங்களை நான் நேரடியாகக் கண்டவன்.

இம் முஸ்லிம் மக்களின் நிலையை நான் ஜனாதிபதிக்கு நேரடியாக எடுத்துக் கூறியதையடுத்து அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட போது இவர்களைக் குடியமர்த்த வேண்டாம். முதலில் சாம்பூர் மக்களைக் குடியேற்ற வேண்டும் என்றே ரவூப் ஹக்கீம் பேசினார். முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை, உரிமைகளை உணர்ந்து கொள்ள முடியாத தலைமைத்துவமான ஸ்ரீ.ல.மு.கா. எப்படி வடமாகாண முஸ்லிம்களினதும் விடிவுக்கு செயற்படப் போகின்றது? தமது பதவியையும் அரசியல் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கும் சுயநலப் போக்குக் கொண்ட தலைமைத்துவத்தின் பின்னால் நாம் சென்றிருப்போமெனில் வடமாகாண முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றப்பட்டிருப்பார்கள்.

பிரதேசவாதமும், ஊர்வாதமும், தெளிவற்ற கொள்கையும், பேசி மக்களை ஏமாற்றி, ஒற்றுமையைக் குலைத்து அதன் மூலம் சுய நலத்தைத் தக்க வைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.

எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பைப் பேணி அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தும் போது தனிப்பட்ட சுயநலன்களை அடைந்து கொள்ளும் வகையில் சமூகத்தின் விடிவுக்காக பாடுபடுவதைப் போன்று முகம் காட்டுபவர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய தேவை சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும் மதிப்பிடப்படமுடியாதவை அவற்றுக்கு எதனைக் கொடுத்தாலும் ஈடாக மாறிவிடாது. எவ்வித அரசியல் அதிகாரமுமின்றி எதிர்க் கட்சியில் அமர்ந்து கொண்டு ரவூப் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்துக்கென சாதித்தவை பெற்றுக் கொடுத்தவை, எதுவும் இல்லை.

மறைந்த தலைவர் அஷ்ரப் தமது ஆளுமையினால், இலங்கை அரசியலில் முக்கியமான நிலையில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிய பணிகள் பல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோரம் போகும் தற்போதைய ஸ்ரீ.ல.மு.கா. தலைமைத்துவம் தவறான பாதையில் செல்கின்றது என்பதை அறிந்தும் அதன் பின்னால் செல்வதில் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.