எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேசிய உணவு வாரம் இன்று ஆரம்பம்

“தேசிய உணவு வாரம்” இன்று (22 ஆம் திகதி) தொடக்கம் இம் மாதம் 28 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உள்நாட்டு உணவு உற்பத்தியையும், நுகர்வினையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் உணவு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

“நாம் பயிரிடுவோம் – நாட்டை முன்னேற்றுவோம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக உள்நாட்டு உணவு உற்பத்தி தொடர்பாக தேசிய மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான சட்டமூலத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தண்டனைகள், அபராதங்கள் போன்றவற்றை மேலும் கடுமையானதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புதிய திருத்த சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன் சர்வதேச போதை தடுப்பு தினமான இம்மாதம் 26ம் திகதி அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் ஜனாதிபதியின் மூலமாக அதற்குப் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப்படு மென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித் தார்.

அத்துடன் சட்டம், ஒழுங்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமை ச்சின் கீழுள்ள ஐந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய வேலைத் திட்டமொன்றை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

எதிர்வரும் 26ம் திகதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றி ஊடகங்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடு பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை, குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி (மத்தடதித்த) திட்டம் மட்டுமே போதுமானதல்ல, சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுகக் முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதெனவும் தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது, புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் தடுப்பு அதிகார சபையின் தலைவர் மென்டிஸ் இதுபற்றி விளக்குகையில் :- இன்று நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரைக்கும் முன்னர் புலிகள் போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளனர்.

இப்போது இது நிறுத்தப்பட்டுள்ள போதும் மீன் பிடிப் படகுகளின் மூலம் இப்போதும் இக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த மாதத்தில் மாத்திரம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 1,202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 80 லொறிகளில் உணவுப் பொருட்கள் தயார் நிலையில்

a-9-loorys.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதிவழியாக 84 லொறிகளில் கடந்தவாரம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 80 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டு அனுராதபுரத்தில் இராணுவ பாதுகாப்பு சோதனைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திலிருந்து இந்த லொறிகள் இன்று அல்லது நாளை இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்படலாம் என்று கொழும்பு வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறிகளில் 3லட்சம் கிலோ சின்ன வெங்காயமும், சுமார் ஒரு லட்சம் கிலோ வரையிலான புகையிலை 8 லொறிகளிலும், பச்சை மிளகாய், நண்டு, றால் உட்பட்ட கடலுணவுப் பொருட்கள் என்பனவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஏற்றி வரப்பட்டிருப்பதாக கொழும்பு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 4 லொறிகளில் வெற்று மென்பான போத்தல்களும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பன்றிக்காய்ச்சல்:தொற்றுக்குள்ளான ஐந்தாவது நபர் இனங்காணப்பட்டார்

19swine-flu.jpgபத்தர முல்ல பகுதியில் ஐந்தாவது பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர் இனங்காணப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து சிங்ப்பூர் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்த ஒன்பது வயது சிறுமியொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் கீதானி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி-யாழ் ஏ 9 வீதியில் எட்டு எரிபொருள் நிறப்பும் நிலையங்கள் – அமைச்சர் பௌசி தகவல்

fawzi_minister.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கண்டி யாழ்ப்பாணத்துக்கான ஏ 9 வீதியில் புதிதாக எட்டு எர்பொருள் நிறப்பும் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்ர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான 180 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு அமைய இந்த நிலையங்கள் இமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்துக்காக 150 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

வணங்காமண் நிவாரணபொருட்களை தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க வேண்டும் – பழ. நெடுமாறன்

ships000.jpgஇலங்கை அரசு திருப்பி அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணங்காமண்’ என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருட்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கையில் அப்பொருட்களை இறக்க முடியாது.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருட்கள் வீணாகிப் பழுதடைந்து போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

பன்றிக் காய்ச்சல் அபாயத்தையடுத்து கொழும்பு சர்வதேச விமான நிலையம், துறைமுகம் உஷார்

19swine-flu.jpgதமது ஆரோக்கிய நிலைமையை உறுதிப்படுத்தும் பிரகடனப் படிவத்தைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு வெளிநாட்டவரையும் நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாமென விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

காதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுச் செயலாளர் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய சகல குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளையும் அறிவூட்டும் வகையில் விசேட சுற்றறிக்கையொன்றை உடனடியாக வெளியிடுவதற்கு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நேற்று நடவடிக்கை எடுத்தார்.

இதேவேளை இலங்கைக்குள் வருகை தரும் சகல வெளிநாட்டவரும் விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர். தேர்மல் ஸ்கேனர் இயந்திரம் மூலம் இலங்கைக்குள் வருகைதரும் சகலரும் பரிசோதிக்கப்படுவர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

புதிய இன்புளுவென்சா ஏ. எச்.1 என் 1 வைரஸ் என்கிற பன்றிக் காய்ச்சல் மேலும் இலங்கைக்குள் வந்து சேர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ் தொடர்பான பரிசோதனை தினமும் 24 மணி நேரமும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.

இப்பணியில் ஈடுபடவென நான்கு டாக்டர்களும், நாற்பது பொது சுகாதாரப் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் ஆறு மணித்தியாலயங்கள் சுழற்சி முறைப்படி கடமையாற்றுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைக்குள் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ¤டன் வருகை தந்தவர்கள் பயணம் செய்த விமானப் பயணிகள் 185 பேரும் அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் காண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் இவர்களிடம் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.புதிய இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் நால்வர் இற்றைவரையும் இனம் காணப்பட்டுள்ளனர் என்றாலும் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய மாத்திரைகளும் பாணி மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாகவும் இவ்வதிகாரி மேலும் கூறினார்.

குடாநாட்டு உற்பத்திப் பொருட்களுடன் 29 லொறிகள் கொழும்பு வருகை

a-9-loorys.jpgயாழ்ப்பா ணத்திலிருந்து உள்ளூர் விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை 29 லொறிகள் ஏ9 வீதி வழியாக கொழும்புக்குப் புறப்பட்டதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார்.
சோதனையிடப்பட்டு லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்ட பின்னர் எந்தவித தரிப்பிடமுமின்றி அவை நேரடியாக கொழும்பு சந்தைக்குக் கொண்டுவரப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் 30 லொறிகளில் குடாநாட்டின் விளைபொருட்கள் ஏற்றப்படுவதாகவும் இவை ஞாயிற்றுக்கிழமை புறப்படுமெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

ஏ9 வீதி வழியாக இரண்டு நாளைக்கு ஒரு தடவை குடாநாட்டுக்கு கொழும்பிலிருந்து தனியார் லொறி சேவை தொடர்ச்சியாக நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக கொழும்பிற்குப் பயணிகள் பஸ்சேவை நடத்துவது குறித்தும் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் சேவையை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

டாக்டர் ஜயலத் இன்று யாழ். விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று  22 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் 23 ஆம் திகதி வவுனியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரமுள்ள பிரதிநிதியாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள ஐ.தே.க.வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியாவில் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகளையும் சந்தித்து அப்பிரதேசங்களின் நிலைமைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

பட்டினியால் வாடுவோர் உலகில் 100 கோடி

world-maps.jpgசர்வதேச பொருளாதாரப் பின்னடைவால் பட்டினியால் வாடுவோரின் தொகை 100 கோடியை எட்டிவிட்டதாகவும் இது சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. வின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலுள்ள மக்களில் 6 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் யுத்தம், வரட்சி, அரசியல் ஸ்திரமின்மை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு,வறுமை, பட்டினி என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பட்டினியால் வாடும் மக்கள் தொகை 10 கோடியால் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு எப்.ஏ.ஒ. தெரிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு பகுதியும் இதிலிருந்து தடுக்கப்படவில்லையெனவும் அனைத்துப் பிரதேசங்களும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவு ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நெருக்கடி மனிதாபிமானம் சார்ந்தவொன்று மட்டுமன்றி அரசியல் விடயமாகவுமுள்ளது. பட்டினி மற்றும் உளவியல் தொடர்பான அழுத்தங்கள் தொடர்பாக ரோமிலுள்ள இந்நிறுவனம் வெளியிட்ட அளவீட்டில் கடந்த வருடத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருட்களின் விலையேற்றம் என்பனவும் உள்ளடக்கப்பட்டன.

இது தொடர்பாக ஐ.நா.வின் முகவர் நிலையமொன்றான உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்;

பட்டினியான உலகம் மிகவும் ஆபத்தானது. மக்களுக்கு உணவு இல்லாது போகும் போது அவர்களுக்கு 3 வழிகளே உள்ளன. அவர்கள் கலகம் செய்யலாம், நாட்டை விட்டு வெளியேறலாம் அல்லது மடிந்து போகலாம். இம் மூன்றுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய தெரிவுகளல்ல என்றார்.

உணவு விவசாய அமைய அறிக்கையின் பிரகாரம் கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது உணவு விலை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் தொடர்ந்து சந்தைகளில் கட்டுக்கடங்காது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போசாக்கின்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமை குழந்தைகளை பலி வாங்கலாம் என கிழக்கு ஆபிரிக்க சர்வதேச சுதந்திர செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மையில் தெற்கு எதியோப்பியாவிற்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த அவர், கென்ய எல்லைப்பகுதியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார். அங்கு மலேரியா காய்ச்சலில் குழந்தையை இழந்த குடும்பமொன்றினைச் சந்தித்ததாகவும் போதிய போசாக்கின்மையாலேயே குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியாது போனதாயும் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 91 கோடி 50 இலட்சம் பில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோர் தொகை 11 வீதத்தால் அதிகரித்து 100 கோடி 2 இலட்சத்தை அடைந்துள்ளதாக ஒவ்.ஏ.ஓ. தெரிவித்துள்ளது. இக்கணிப்பீடு அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டது.

மேலும் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விட பட்டினியால் வாடுவோர் தொகை அதிகரித்துச் செல்வதாக எவ்.ஏ.ஓ. தெரிவிக்கின்றது. இது தொடர்பான தரவுகளை வழங்காவிடினும் இரு வருடங்கள் முன்பிருந்தே இப்போக்கு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் 64 கோடி 20 இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் இத்தொகை கடந்த வருடத்தை விட 10.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபிரிக்காவில் 26 கோடி 50 இலட்சம் மில்லியனாக இத்தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.