தமது ஆரோக்கிய நிலைமையை உறுதிப்படுத்தும் பிரகடனப் படிவத்தைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு வெளிநாட்டவரையும் நாட்டுக்குள் பிரவேசிக்க இடமளிக்க வேண்டாமென விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுச் செயலாளர் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய சகல குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளையும் அறிவூட்டும் வகையில் விசேட சுற்றறிக்கையொன்றை உடனடியாக வெளியிடுவதற்கு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நேற்று நடவடிக்கை எடுத்தார்.
இதேவேளை இலங்கைக்குள் வருகை தரும் சகல வெளிநாட்டவரும் விமான நிலையத்தில் விசேட பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர். தேர்மல் ஸ்கேனர் இயந்திரம் மூலம் இலங்கைக்குள் வருகைதரும் சகலரும் பரிசோதிக்கப்படுவர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
புதிய இன்புளுவென்சா ஏ. எச்.1 என் 1 வைரஸ் என்கிற பன்றிக் காய்ச்சல் மேலும் இலங்கைக்குள் வந்து சேர்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ் தொடர்பான பரிசோதனை தினமும் 24 மணி நேரமும் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.
இப்பணியில் ஈடுபடவென நான்கு டாக்டர்களும், நாற்பது பொது சுகாதாரப் பரிசோதகர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் ஆறு மணித்தியாலயங்கள் சுழற்சி முறைப்படி கடமையாற்றுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கைக்குள் புதிய இன்புளுவென்சா ஏ வைரஸ¤டன் வருகை தந்தவர்கள் பயணம் செய்த விமானப் பயணிகள் 185 பேரும் அமைச்சின் நோய் பரவுகைத் தடுப்பு பிரிவின் காண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் இவர்களிடம் இக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.புதிய இன்புளுவென்ஸா ஏ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் நால்வர் இற்றைவரையும் இனம் காணப்பட்டுள்ளனர் என்றாலும் இக்காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய மாத்திரைகளும் பாணி மருந்துகளும் கையிருப்பில் இருப்பதாகவும் இவ்வதிகாரி மேலும் கூறினார்.