எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பரீட்சை மீள்மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை நுழைவை பாதிக்காது – பாராளுமன்றில் அமைச்சர் சுசில் தெரிவிப்பு

susil1111.jpgக.பொ.த.  உயர்தரப் பரீட்சைன் “இஸட்” புள்ளி பெறு பேறுகளின் அடிப்டையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று மீளாய்வு காரணமாக எந்த மாணவருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக எமக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த கவனயீர்ப்புக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: 2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பெறுபேறுகள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ‘இஸட்’ புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. முதலாவது மதிப்பீடு செய்வதற்கு நான்கு மாதங்களும் ஒன்பது நாட்களுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்பெறுபேறுகளில் திருப்தியடையாத மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீட்டு கோரிக்கையின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீடு காரணமாக 1.28 சதவீத பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பப் பத்திரங்களுக்குரிய விடைத்தாள்களே மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

ஆகவே சகல பெறுபேறுகளிலும் பாரிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பில்லை. முதலாவது மதிப்பீட்டு க்குட்பட்ட பெறுபேறு மீள்பரிசீலினையின்போது திருத்தப் படுமாயின் புள்ளிகளிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவர்கள் பெறுகின்ற தரங்களிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது ஏனைய மாணவர்கள் பெற்றிருக்கும் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

மக்கள் வங்கி உதவி முகாமையாளர் கொலை; 5 இராணுவத்தினர் கைது

கொள்ளுப்பிட்டி, லிபர்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளர் கொலையுடன் தொடர்புடைய இராணுவ கெப்டன் ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினரை சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன் ஒருவர், இரண்டு கோப்ரல்கள் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களே கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:-

கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வக்ஓயா, லபுகம வீதி, 6/1 இலக்க வீட்டுக்கு அருகிலுள்ள பாலம் ஒன்றின் அருகிலிருந்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டெடுத்தனர். உயிரிழந்தவர், அம்பலாங்கொடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றும் குணசிங்க பிரேமதிலக்க எனவும் அடையாளம் காணப்பட்ட போதிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டுவந்த கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினர் கெப்டன் உட்பட ஐந்து இராணுவ வீரர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ள கப்டன் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வான் ஒன்றில் நான்கு இராணுவத்தினருடன் முகாமையாளரையும் இணைத்துக் கொண்டு அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வானில் சென்று கொண்டிருந்த கெப்டன் இடைவழியில் இறங்கிக் கொள்ள ஏனைய நால்வரும் தமது காலில் போடும் மேஸ்களை பயன்படுத்தி வங்கி உதவி முகாமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வக்ஓயா பிரதேசத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக எஸ். எஸ். பி. தெரிவித்தார்.

உதவி முகாமையாளரின் கழுத்திலிருந்து தங்கச் செய்ன் மற்றும் கைச்செய்ன்களை இவர்கள் வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளனர் அதனையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்டவர் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்த அவர், விசாரணைகளை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் குறிப் பிட்டார்.

ரவி கருணாநாயக்கவின் கடவுச்சீட்டு முடக்கம் – ரூ. ஒரு இலட்சம் ரொக்கப் பிணை; ரூ 10 இலட்சம் சரீரப்பிணை

ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க, நாணயமாற்று கட்டுப்பாட்டுச் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவினதும் மேலும் இரு பிரதிவாதிகளினதும் கடவுச் சீட்டுக்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பிரதிவாதிகள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவித்தார்.

ரவி கருணாநாயக்க ஒரு முன்னணி அரசியல்வாதி என்பதால் அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டாமென அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அரச சட்டவாதி திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தவேண்டுகோளை நீதிபதி நிராகரித்ததுடன், நேற்று ரவி கருணாநாயக்க, கடவுச் சீட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவில்லையென அவரது சட்டத்தரணி தெரிவித்ததால், திங்கட்கிழமை அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பிரஜையான ராஜ் ராஜரட்ணமும் – கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருலப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இதனடிப்படையில் இவருக்கும் குறித்த நிறுவனத்தின் ஆலோசகர் லிங்கோன் பியசேனவுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2006 – 2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் கொழும்பு யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இந்தப் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஷியா கோப்ரேட் கொன்சல்டன்ட் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளரான ரஞ்சித் தி சில்வா நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றில் சமுகமளித்திருந்தார்.

இடம்பெயர்ந்த க.பொ.த மாணவருக்கு விசேட அடையாள அட்டைகள்- பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் நிவாரண கிராமங்கள் விஜயம்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் இடம் பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொடு ப்பதற்காக பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு செல்லவுள்ளனர்.

அடுத்தவாரம் செல்லும் இவர்களுடன் புகைப்படப் பிடிப்பாளர்களும் செல்லவுள்ளனர்.

வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் சுமார் 1500 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புலிகளால் பலவந்தமாக படைக்கு சேர்க்கப்பட்டு தற்போது சரணடைந்துள்ளவர்களுள் சுமார் 300 பேரும் இவ்வுயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களுக்கும் இவ்விசேட அடையாள அட் டையை பரீட்சை திணைக் களம் வழங்கவுள்ளது. எல்லா நிவாரணக் கிராமங்களிலு முள்ள மாணவர்கள் பரீட்சை க்குத் தோற்றும் விதத்தில் பரீட்சை நிலையங்கள் அமை க்கப்படவும் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க நேற்று தெரிவித்தார்.

உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை 8.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

tourism.jpgஇலங் கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி அதிகார சபையின் இயக்குணர் நாயகம் கலைச்செல்வம் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தகவல் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 363 வெளிநாட்ட உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்தனர். இவ்வருடம் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 729 ஆகக் குறைந்தது. குறிப்பாக மேற்கு ஐரோப்பாää தெற்காசிய நாடுகளிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

எனினும் இவ்வருடம் மே மாதம் இலங்கையில் பயங்கரவாத  நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தொகையான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாகவே கடந்த வருடத்தை விட இவ்வருடம் இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் முதல் அதிகரித்துள்ளது.

இலங்கையில் உள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டல்களில் சகல அறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடம் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வருவார்கள் என்றும் அதன் மூலம் பெரும் இலாபம் அடைய முடியும் எனவும் எதிர்பார்கிறோம் எனவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி நகருக்கு இருவாரங்களில் மின்சாரம் – ரூ. 600 மில்லியன் ஒதுக்கீடு

கிளிநொச்சி நகரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் மின்சார வசதி அளிக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. கிளிநொச்சி நகரத்துக்கு மின்சார வசதி அளிக்கும் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வட பகுதிக்கு மின்சார வசதி அளிக்க 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரத் தொகுதி அமைக்கப்பட்டு வருவதோடு மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுவதாக அமைச்சு கூறியது.

இது தவிர கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக அமைச்சு கூறியது.

கிளிநொச்சி நகரத்திற்கு மின்சார வசதி அளிப்பது தொடர்பான ஆரம்ப வைபவம் அண்மையில் மின்சார சபை தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது இரணமடு குளத்திற்கருகில் வைத்து முதலாவது மின்மாற்றி பொருத்தப்பட்டது.

வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு மின்சார வசதி அளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

வடக்கு, கிழக்கு மாணவர் 30வருட காலம் இழந்ததை மீளப்பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடு – ஜனாதிபதி

mahinda-rajapa.jpgவடக்கு, கிழக்கு மாணவர்கள் கடந்த 30 வருட காலமாக இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீளக் கிடைத்த பிரதேசங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியைப் போல், கல்வியையும் விளையாட்டையும் சமமாக மேம்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் மறைந்து கிடக்கும் திறமைகளைத் தேடி வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்றும் நேற்று (09) மாலை பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

இன்று பெற்றோர்களுக்கு அச்சம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் மறைந்து கிடக்கும் வளங்களைத் தேடிச் செல்லும் தருணம் பிறந்துள்ளது. 30 வருடங்களாக இல்லாமற் போனதை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.

துள்ளி விளையாட வேண்டிய குழந்தைகளின் கரங்களில் துப்பாக்கிகளைக் கொடுத்தார்கள். துப்பாக்கிகளைக் கழற்றிப் பூட்டக்கூடிய 11, 12 வயது பிள்ளைகள் இன்று முகாம்களில் இருக்கிறார்கள. இவர்கள் அனைவரும் இழந்தவற்றை மீளப்பெற்றுக் கொடுப்போம். எதிர்வீரசிங்கம் போன்ற விளையாட்டு வீரர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உருவானார்கள். அவ்வாறானவர்களை மீண்டும் நாம் உருவாக்குவோம். அபிவிருத்தியை ஒரு பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்றார்.

இலங்கை-பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு – வெளிவிவகார அமைச்சு தகவல்

bangladeshi_fm.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி டிபு மொனி இன்று பிற்பகல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது இணையத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் சார்க்நாடுகளின் சிறுவர் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் எனக் கூறினார்.

இடம்பெயர் மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்கிய ஒப்பந்தக்காரர்கள் வவுனியா செயலகத்தில் நிலுவையாக உள்ள பணத்தைத் தாமதமின்றி வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா செயலக வளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவு பெறப்பட்டு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டு வந்தது.  சுமார் 4 மாதங்கள் இவ்வாறு சமைத்த உணவு வழங்கப்பட்டதாகவும், நாளொன்றுக்கு, ஒருவருக்கு 130 ரூபா பெறுமதியான 3 வேளை உணவு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டு, அதற்காக ஒரு தொகைப் பணம் தங்களுக்கு வவுனியா செயலகத்தினால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் தற்போது நிலுவையாக உள்ள பணத்தில் முழுச்சாப்பாடு 100 ரூபாவாகவும் அரைச்சாப்பாடு 80 ரூபாவாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது உடன்பாட்டுக்கு விரோதமானது என்றும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.  தங்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதனை வழங்குவதற்கு தற்போது அதிகாரிகள் சாக்கு போக்குகள் கூறுவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரச சுற்று நிருபத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத்தின்படியே கொடுப்பனவுகளை வழங்க முடியும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. சமைத்த உணவு வழங்கிய வகையில் சுமார் 250 மில்லியன் ரூபா நிலுவையாக இருப்பதாகவும், இதில் ஒரு பகுதி நிதி தற்போது கிடைத்திருப்பதாகவும், இதனை வழங்குகையிலேயே ஒப்பந்தக்காரர்களிடமிருந்து சமைத்த உணவுக்கான கட்டணம் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கொலை மற்றும் தலையை வெட்டிக் கொல்ல முற்பட்ட 10 பேருக்கு சிறைத் தண்டனை!!!

Murder_Weaponநோர்வேயில் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட நோர்வேத் தமிழர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

யூலை 9ல் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு 3 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரை ஒவ்வொருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பாரிய உடற்காயங்களை விளைவித்த மேலும் ஐவரும் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைக் குழுக்கள் தமிழ் சமூகத்தினுள் பயப் பீதியை ஏற்படுத்தி உள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போது நோர்வேயில் வெளியாகிய செய்திகளை அருகில் உள்ள இணைப்பில் காணலாம்.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=174946
http://www.vgtv.no/player/index.php?id=10749

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள கல்பக்கன் எனும் இடத்தில் ஓகஸ்ட் 12 2007ல் இடம்பெற்ற குழு மோதலில் செலிக்கன் ரஞ்சன் என்ற 19 வயது இளைஞர் கொல்லப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார். நேர்வேயில் தமிழ் சமூகத்திடையே இடம்பெற்ற மோசமான ஒரு மோதல் சம்பவமாக இது இருந்தது.

ரமணன் விவேகானந்தன் (20) என்பவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் பல பாகங்களில் இருந்தும் ஒஸ்லோவின் கல்பக்கன் பகுதிக்கு கத்தி, வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் துப்பாக்கியும் தாங்கி வந்துள்ளனர். அனைவரும் ஒஸ்லோவில் கூடி கல்பக்கன் பகுதியில் இருந்த ரமணன் விவேகானந்தன் மீது பதுங்கி இருந்து தாக்கி உள்ளனர். அப்போது ரமணன் விவேகானந்தனுடன் ஐவர் இருந்துள்ளனர். ரமணன் விவேகானந்தனின் தலையிலும் உடலிலும் துப்பாக்கிச் சூடுபட்டு அவர் நிலத்தில் வீழ்ந்த போது அவருடைய தலையைத் துண்டிக்க முற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் கண்ணன், குகன் ஆகிய இருவரும் சூட்டுக்காயம் மற்றும் வாள்வெட்டுக் காயங்களினால் எற்பட்ட அதிக இரத்தப் போக்குடன் மிக ஆபத்தான நிலையில் உளவல் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Murder_Weaponசம்பவம் இடம்பெற்ற மைதானப் பகுதியில் இருந்து ஒரு பிஸ்டலையும் ஒரு வாளையம் பொலிஸார் மீட்டனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாகப் பலர் பின்நிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து ஒஸ்லோவிற்கு இந்த நோக்கத்திற்காக வந்திருந்ததாகவும் ஒஸ்லோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Yogarajah_Balasinghamஇம்மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எல்ரிரிஈ உடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஒஸ்லோவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் உரிமம் தொடர்பில் எழுந்த சர்ச்சையே இந்தத் தாக்குதலைத் தூண்டியதாகவும் செய்திகள் அப்போது வெளியாகின. ஆனால் அப்போது நோர்வே பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் யோகராஜா இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்திருந்தார். எல்ரிரிஈக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்திருந்தார்.