எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிழக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணிகள் நேற்றுடன் நிறைவு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கான தனது சேவையை நேற்றுடன் முடித்துக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியை மட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களை மூடிவிடத் தீர்மானித்திருந்தது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிராந்திய காரியாலயங்களையும், மூதூர் மற்றும் அக்கரைப்பற்று உப அலுவலகங்களையும் இம்மாதத்துடன் மூடி விட்டு கிழக்கிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளது. நேற்று முதல் மக்களுக்கான சேவைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக சங்கத்தின் திருகோணமலை மாவட்ட பிராந்திய செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அலுவலகங்களும் மூடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1990ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறவினர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்துதல், மருத்துவ சேவை, கப்பல் பயணத்திற்கான வழித்துணை உட்பட பல்வேறு வகையில் மக்களுக்கான சேவைகளை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு ஒழிப்பு: இலங்கையில் பக்டீரியா பயன்பாடு; 175 பேர் பலி; 6979 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கு அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு வருகை தருகின்றனர்.

இம்மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடியதும் டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய பக்டீரியா நுண்ணங்கியை இலங்கைக்குக் கொண்டு வருவதற்குத் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகே நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டில் பி. ரி. ஐ. என்ற பக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலமான பயன்கள் தாக்கங்கள் குறித்து இலங்கை வரும் கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்படும். அக்கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு குறித்த பக்டீரியாவைத் துரிதமாக இலங்கைக்குக் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, சுகாதார பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால குறிப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் 14 ஆம் திகதி வரையும் டெங்கு காய்ச்சலுக்கு 17 ஆயிரத்து 860 பேர் உள்ளாகியுள்ளனர். இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடத்தில் ஜூன் மாதத்தில் தான் இந்நாட்டில் அதிகளவானோர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளனவர்களாக இனம் காணப்பட்டனர் என்றாலும் இப்போது இக்காய்ச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. ஜூன் மாதத்தில் 6979 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்ட போதிலும், இம்மாதத்தின் முதல் 14 நாட்களிலும் 1904 பேரே இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருக்கின்றனர்.

இக்காய்ச்சல் கொழும்பு, கண்டி, கம்பஹா, கேகாலை, களுத்துறை, குருநாகல், இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே தீவிர நிலையில் காணப்படுகின்றது. இக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சு விரிவான அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

A(H1 N1) பாதிக்கப்பட்டோர் தொகை 40 ஆக அதிகரிப்பு – வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்தே தொற்று

புதிய இன்புளுவென்ஸா ஏ(ஏச் 1 என் 1) என்கிற பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இலங்கையில் 40 பேர் இனம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால நேற்றுத் தெரிவித்தார். இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இந்நாட்டில் இனம் காணப்பட்டுள்ள சகலரும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டிருப்பவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, ஹொங்கொங், சவூதிஅரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் :-

இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த 28 பேரும், பிரித்தானியாவிலிருந்து வருகை தந்த 5 பேரும், அமெரிக்காவிலிருந்து வந்த 4 பேரும், ஹொங்கொங்கிலிருந்து வந்த இருவரும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிலையம் இவர்கள் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருகை தரும் சகல பயணிகளும் தேர்மல் ஸ்கேனரில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இப்பரிசோதனை மூலம் காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பவர்கள் இனம்காணப்பட்டதும் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று நோய்கள் தவிர்ப்பு ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஆறாயிரம் பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்கு புதிய இன்புளுவென்ஸா பரிசோதனையில் டாக்டர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதற்குத் தேவையான மருந்துகள் எம்மிடம் கையிருப்பில் உள்ளன என்றார். இக்காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 708 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 546 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காய்ச்சல் 143 நாடுகளில் காணப்படுகின்றது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கூறினார்.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிப்பு!

அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது

முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியவர்களில் இலங்கையர்கள் இரண்டாம் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இரண்டாவது அதிகபடியான புகலிடம் கோரல் விண்ணப்பங்கள் இலங்கையர்களிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய குடிவரவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

2009ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் 8400 பேர் புகலிடம் கோரியுள்ளனர் கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 40வீத உயர்வைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது எரித்திரியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான புகலிடம் கோரியோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை. நைஜீரியா. ஈராக். மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முறையாக இரண்டாம் மூன்றாம் நான்காம். மற்றும் ஜந்தாம். இடங்களை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

நைஜீரியர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட புகலிடம் கோரல் மனுக்களில் 73 வீதமானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

இலண்டன் ரைம்ஸ் செய்தியை சுகாதார ஸ்தாபனம் நிராகரிப்பு – நிவாரணக் கிராமங்களில் உயிரிழப்புகள் அதிகமென பொய்ப்பிரசாரம்

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறி இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த சில வெளிநாட்டு ஊடகங்கள் முயற்சி செய்வதாகச் சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்தலியனகே நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் வாரமொன்றுக்கு 1400 பேர் உயிரிழந்ததாக லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையுமே இல்லை என்று இச்செய்தியாளர் மாநாட்டில் பங்கு பற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி டாக்டர் பிர்தெளஸி மேத்தா கூறினார்.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் டாக்டர் அத்துல கஹந்த லியனகே இது தொடர்பாக மேலும் கூறுகையில், வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் அதிக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுவும் ஜூலை மாதம் 10ம் திகதி முதலான ஒருவார காலத்தில் 1400 பேர் இவ்வாறு உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்த நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இடம்பெறுகின்ற சகல உயிரிழப்புக்களையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு குறிப்பிட்டிருக்கின்றோம். இம்மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென பிரதம சட்ட வைத்திய அதிகாரியை இணைப்பாளராக நியமித்துள்ளோம்.

இந்த அடிப்படையில் ஜூன் மாதம் 15ம் திகதி முதல் ஜுலை மாதம் 14ம் திகதி வரையும் இக்கிராமங்களில் 163 பேர் தான் உயிரிழந்துள்ளனர். இதுவே பொலிஸ் பதிவாகும். இதன்படி இக்கிராமங்களில் தினமும் 5.62 சதவீதமான மரணங்கள் தான் இடம்பெறுகின்றன.

இதன்படி லண்டன் ரைம்ஸ் மற்றும் ரெலிகிராப் பத்திரிகைகள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அளித்துவரும் சிறந்த சுகாதார சேவைக்குச் சேறுபூசவுமே முயற்சி செய்கின்றன. அப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியை நாம் முழுமையாக மறுக்கின்றோம். சர்வதேச பிரமாணங்களுக்கு அமைய வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 65 ஆயிரம் மக்கள் மத்தியில் 6.6 சதவீதத்திற்கும் 13.2 சதவீதத்திற்குமிடைப்பட்ட வீதத்தில் தான் உயிரிழப்புக்கள் நிகழ வேண்டும். ஆனால் அங்கு 5.6 சதவீத உயிரிழப்புக்களே நிகழுகின்றன. ஆகவே எமது சுகாதார சேவைகள் சிறப்பாக இருப்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதம சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்த சமரசேகர குறிப்பிடுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் புலிகளின் பிடியில் பல வருடங்கள் இருந்தவர்கள், அதனால் அவர்கள் அனேகர் தீவிர போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படுவது மிகவும் இலகுவாகும். அதனால் தான் இந்நிவாரணக் கிராமங்களில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பாக உடனுக்குடன் அமைச்சுக்கு அறிய கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்றார்.

சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் – வானிலை அவதான நிலையம் அறிவிப்பு

170709rain.jpgநாட்டின்  மேற்கு, மத்திய, சபரகமுக பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று  அடிக்கடி மழை பெய்யக்கூடிய சீரற்ற கால நிலை காணப்படும் என வானிலை அவதான நிலைய பிரதி இயக்குநர் எஸ். ஆர். ஜயசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசங்களில் இன்னும் சில தினங்களுக்கு இதே கால நிலை தொடரும் எனவும் இடைக்கிடை பலத்த காற்று வீசும் எனவும் அவர் மேலும் கூறினார்

ஊவா பகுதியில் 6500 குடும்பங்களுக்கு ரூ.171மில். செலவில் வீடமைப்பு வசதிகள்

relief-work.jpgதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தினூடாக 6500 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்துகொடுக்க முடிந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கத்தால் செலவு செய்த மொத்த தொகை 171 மில்லியன் ரூபாவாகுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 4244 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக வீடமைப்புக் கடனாக 51 மில்லியன் ரூபாவும் வீடமைப்பு உதவியாக 05 மில்லியன் ரூபாவும் பெருந்தோட்ட வீடமைப்புக்காக 35 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக மொனராகலை மாவட்டத்தில் 2200 குடும்பங்களுக்கு மூன்று வருட காலத்தில் வீட்டு வசதிகளைச் செய்துகொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழி செய்துள்ளதுடன், அக்குடும்பங்களுக்காக வீடமைப்புக் கடனாக மொத்தம் 50.4 மி. ரூபா வழங்கப்படுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்திய வீடமைப்பு உதவியாக 5.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளதுடன், பெருந்தோட்ட வீடமைப்புக்காக வெளியார் பங்களிப்பாக 25 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இவ்வரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் மஹிந்த சிந்தனை தேசிய கொள்கையின் கீழ் நடைமுறைப்படுத்திய ஜனசெவன தேசிய வீடமைப்பு திட்டத்திற்கேற்ப தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய மிக முக்கியமான வேலைத்திட்டம் கமநெகும வேலைத்திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தின் கீழ் 03 வருடங்களுக்குள் கமநெகும வேலைத் திட்டத்தினூடாக ஊவா மாகாணத்தில் 1800 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டள்ளதுடன், அவற்றுள் 890 பதுளை மாவட்டத்திலாகும். மேலும் 810 குடும்பங்கள் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காகும்.

ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்திய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது நிலையானதொரு வீட்டை நிர்மாணித்துக் கொள்ள எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு நிரந்தரமான கூரையைப் பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்யும் நடவடிக்கையாகும். இவ்வேலைத்திட்டமானது பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 3800 குடும்பங்களுக்கு கூரைக்கான தகரங்கள் வழங்கப்பட்டன.

இதன்படி பதுளை மாவட்டத்தில் 38000க்குமதிகமான கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதுடன், மொனராகலை மாவட்டத்தில் 5200 கூரைத் தகரங்கள் வழங்கப்பட்ட தோடு, இதற்காகச் செலவிடப்பட்ட மொத்த தொகை 43 மில்லியன் ரூபாவாகும்.

கண்டி உதவி இந்திய தூதரகத்தினால் நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

school-books.jpgகண்டி உதவி இந்திய தூதுவராலயத்தில் மத்திய மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.

சிறுவர்களுக்கு பயன்தரும் நூல்கள் அடங்கிய தொகுதி இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. காலை 10.30 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் நூல்களைப் பெறும் பாடசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் அல்லது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆசிரியர் வருகை தந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கொட்டதெனிய ரூ.10 கோடி கொள்ளைச் சம்பவம்; சிங்கப்பூர் தப்ப இருந்த வேளை சூத்திரதாரி மடக்கிபிடிப்பு

கொட்டதெனிய 10 கோடி ரூபா கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரியான நகை மாளிகை உரிமையாளரொருவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற வேளை, அம்பலாங்கொடையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 92 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார்.

பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியோடிய இருவருள் ஒருவரே இவரென்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அம்பலாங்கொடையில் வைத்து ரொயொட்டா வீஓஎல் காரில் கொள்ளையிட்ட பணத்துடன் சென்று கொண்டிருக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார். கபில டி சில்வா என்ற இந்த நபர் சிங்கப்பூருக்குச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டைத் தயார்படுத்தியிருந்ததாகவும், அவரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

விமானப் படையில் இருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தப்பியோடிய அவர், அம்பலாங்கொடையில் நகைமாளிகை நடத்தி சுகபோகமாக வாழ்ந்து வருபவரென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஸ். எஸ். பீ. தெரிவித்தார்.

குருநாகலில் இரண்டு தனியார் வங்கிக் கிளைகளில் சேகரிக்கப்பட்ட 10 கோடி ரூபா பணத்துடன் நிறுவனத்தின் காவலர்கள் கிரியுல்லை வழியாகக் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கொட்டதெனியவில், பொலிஸ் சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்த ஆயுததாரிகள் அறுவர் அந்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியுள்ளனர். உடனே வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட வேளை, அவர்களைப் பிடித்துக் கட்டிப் போட்ட ஆயுததாரிகள் பண மூடைகளை ஏற்கனவே தயாராக வைத்திருந்த வாகனங்களில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விடயம் உடனடியாக குருநாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கொள்ளையர்களைத் துரத்திச் சென்றுள்ளனர். அதன் போது எட்டரை கோடி ரூபா பணத்துடன் நால்வரை பொலிஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். எனினும் இருவர் ஒன்றரை கோடி ரூபாவுடன் தப்பிச் சென்றுவிட்டனர். அதில் ஒருவரே அம்பலாங்கொடையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம் பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவுறுத்தல்

housemaids.jpgசட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாமென பொது மக்களிடம் அரசும் பொலிஸ் தலைமையகமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  கடந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற நபர்கள் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நபர்களின் ஒரு பகுதியினர் அவுஸ்திரேலியா அதிகாரியினால் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் மக்களுக்கு பொய் உத்தரவாதங்களை வழங்கி அவர்களை ஏமாற்றி இவ்வாறாக சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஊக்கமளிக்கின்றனர். இவ்வாறான வஞ்சக நபர்களிடம் அவர்களின் வார்த்தைகளினால் ஏமாறுபவர்கள் பெரும் பணத்தொகையினை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன், தமது வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

எனவே இதன் பின்னராவது சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டாம் என அரசாங்கமும் பாதுகாப்பு பிரிவினரும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.