எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
இலங்கையின் வடகிழக்கில் விவசாய பணிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட எம்.எஸ்.சுவாமிநாதன் மறுத்துவிட்டதை அடுத்து வேறு குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. போர் நடந்த வடகிழக்கு பகுதியில் விவசாய பணிகளை சீரமைக்கும் நோக்கில் இலங்கை அரசு வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை துவக்க முயற்சித்து வருகிறது.
இந்த திட்டத்துக்கு உதவ வேண்டும் என இலங்கை அரசு, இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை கேட்டு கொண்டது. அவரும் ராஜபக்சேவை சந்தித்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தமிழ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் வடகிழக்கில் தமிழர்களின் துயர் தீரும் வரை அந்த திட்டத்துக்காக நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என எம்.எஸ். சுவாமிநாதன் உறுதியாக கூறிவிட்டார்.
இதையடுத்து தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகளை கொண்ட குழுவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இலங்கையில் விளைச்சலுக்கான சீசன் துவங்குவதாலும், வட கிழக்கு பகுதியில் கன்னிவெடிகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருவதாலும் இந்த குழுவினர் இந்த மாத இறுதியில் இலங்கை செல்வார்கள் என கூறப்படுகிறது.
அவர்கள் வடகிழக்கில் மண்ணின் தரம், விவசாய வசதிகள், வானிலை ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை தர இருக்கிறார்கள்.
அரசியல் கருத்தொருமைப்பாட்டை மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்குவார்களேயானால் இலங்கையின் விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆகியோரின் தலைவிதியே மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஏற்படுமென்றும் நேபாள காங்கிரஸ் தலைவரும் 22 கட்சி கூட்டணியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.
நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயநேந்திராவின் நிலைமையே தற்போது நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 2 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரிஜா பிரசாத் கொய்ராலா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.
2008 ஜனவரி 2 இல் பிரசண்டாவின் ஒலிப்பதிவு நாடா பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதன்மூலம் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக எமது சர்வதேச நண்பர்கள் கொண்டிருந்த இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டனர். நாங்கள் கருத்தொருமைப்பாட்டு அரசியலில் இணைந்து கொள்ளுமாறு மாவோயிஸ்ட்டுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவர்கள் இதுவரை அதனை நிராகரித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செய்வார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அவர்களின் தலைவிதி இலங்கை தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நிலைமையை ஒத்ததாக அமையும்.
மாவோயிஸ்ட்டுகளோடு கருத்தொருமைப்பாடு , ஒத்துழைப்பு, ஐக்கியம் என்பனவற்றை உள்ளடக்கிய அரசியலைக் கொண்டுவருவதற்கு நான் காலத்திற்கு காலம் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தேன். பிரசண்டாவுடன் ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சித்து வந்தேன். அவரின் இரட்டைத் தனமான பேச்சும் இரட்டைத்தனமான தன்மையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கருத்தொருமைப்பாட்டு அரசியலை உடைப்பதாக அது உள்ளது என்று கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியதாக நேபாள ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
குவைத்தின் ஜஹ்ரா மாவட்டத்தில் ஒரு திருமண பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது.
திருமண விருந்து நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாயினர்.
தீ பரவியதும் அங்கிருந்த கூட்டத்தினர் தப்பிக்க முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் பலரும் கீழே விழுந்து மிதிபட்டு மயங்கினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பலியாகிவிட்டனர்.
மட்டக் களப்பு கல்லடி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரேயுள்ள வெற்று காணியில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் நேற்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் காணியில் வழமை போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உர பையொன்று நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அந்த உரப் பைக்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசாரால் மனித எச்சங்களைக் கொண்ட குறிப்பிட்ட உரப் பை தோண்டியெடுக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த காலங்களில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவருடைய மனிய எச்சங்களாக இவை இருக்கலாம் என பொது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் நிலவுகின்றன.
உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் பாடசாலை மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக இவர்களை வேறும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு- கறுவாத்தோட் டம் பகுதியில் இரண்டு இளம் பெண்களின் சடலங்களை நேற்றுக் காலை (15) பொலிஸார் மீட்டுள்ளனர். பெளத்தாலோக மாவத்தையில் உள்ள வாகனத் தரிப்பிடத்தை அண்மித்த கழிவுக்கான் பகுதியிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து கறுவாத்தோட் டம் பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இரண்டு பெண் களும் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருப்பதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விருவரும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்து போடப்பட்டார்களா, அல்லது வாகனத் தரிப்பிடப் பகுதியில் கொல்லப்பட்டார்களா என்பதைப்பற்றித் தகல் வெளியாகவில்லை.
இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் கறுவாத்தோட்ட பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் டாக்டர் பட்டங்களை வழங்கி வந்த பத்து நிறுவனங்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கக் கூடாது என தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உபகுழுவின் பரிந்துரைகளுக்கு அமைய போலி டாக்டர் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என்ற வகையில் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
புனர் வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் சிறுவர் போராளிகளை பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளையே பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்தார்.
அத்துடன் இனம், மதம், அரசியல் என்ற வர்க்க வேறுபாடுகளை பொருட்படுத்தாது நாட்டின் அமைதிக்காக அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் ஒலி/ ஒளிபரப்புச் சேவைகளை மேம்படுத்தும் வகையில் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை மீண்டும் நிர்மா ணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவ ட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்பு கோபுர த்திற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை இதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெறவுள்ளது. சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 172 மீற்றர் உயரத்திற்கு இக்கோபுரம் கட்டப்படவுள்ளது.
கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் 1990ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் திகதி புலிகள் தொலைத்தொடர்பு கோபுரத்தை தாக்கி இப்பகுதியை கைப்பற்றியிருந்தனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கையினூடாக படையினர் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.