எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை : திருப்பூரில் பரபரப்பு

வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள். 

முசலியில் 442 தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள்; சொந்த இடங்களில் மீள் குடியேற்றம்

1111musaly.jpgமன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 8 கிராமங்களில் 442 தமிழ் – முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 1898 பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடிய மர்த்தப்பட்டுள்ளனர். முசலியில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது 2007 ஆம் ஆண்டு மோதல்கள் காரணமாக கொக்குபுடையான் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பகுதியில் தங்கியிருந்த 94 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

முசலி பிரதேச செயலகத்தின் வேப்பங்குளம், பண்டார வெளி, பூநொச்சிக்குளம், பெரிய புல்லச்சி, பொற்கேணி, பூலான்குளம், புதுவெளி, மேத்தன்வெளி பகுதிகளிலிருந்து 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 348 குடும்பங்களைச் சேர்ந்த 1551 முஸ்லிம்களும் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் புத்தளத்தில் அகதிகளாக தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளை, முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கமைய முதலாவதாக சிலாபத்துறையிலும், முசலி பிரதேச பிரிவிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றன. முசலி பிரதேச செயலகத்தின் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெறும். தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றும் வேலைகள் நடத்தப்படுகின்றன.

முசலி பிரதேச செயலகத்திலுள்ள எட்டு கிராமசேவகர் பிரிவுகளிலும் நேற்று முன்தினம் மீள்குடியேற்றப்பட்ட மக் களுக்கு, உலர் உணவுகள், சமையல் பாத்திரங்கள், தற்காலிக கூடாரங்கள் போன்றவை நேற்று வழங்கப்பட்டன.யுனிசெப் நிறுவனம், உலக உணவுத் திட்ட நிறுவனம் உட்பட தொண்டர் நிறுவனங்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கின.

வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கிலானி, ஷபாஸ் ஷெரீப்பை கொல்ல தாலிபான்கள் திட்டம்

shahbazsharif.jpgபாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சரும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரைக் கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தின் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலைக்கிடையேயும், மேற்கூறிய கொலைத்திட்டத்தை தாலிபான்கள் வகுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 50 பேரை தாலிபான் இயக்கம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

பலமான நிலையில் இங்கிலாந்து

cri0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ஒட்டங்கள் எடுத்து 545 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ள போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஆஸ்திரேலியா – நேற்று இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ஆட்டமுடிவின் போது விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன்  ஆட்டம் இழக்காமல் 31 ஒட்டங்கள் கடிச்  ஆட்டம் இழக்காமல்  42 ஒட்டங்கள்  பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து – முதலாவது இன்னிங்ஸ் – 90.5 ஓவர்கள்  332 ஒட்டங்கள் 
ஆஸ்திரேலியா – முதலாவது இன்னிங்ஸ் – 52.5 ஓவர்கள்  160 ஒட்டங்கள் 
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் –  95 ஓவர்கள்  373 ஒட்டங்களுக்கு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – இரண்டாவது இன்னிங்ஸ்  – 20 ஓவர்கள்  விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள்

ஆஸ்திரேலியா வெற்றி இழக்கு 546 ஒட்டங்கள்

20 வருடங்களின் பின்னர் யாழ். தென்மராட்சியில் 1700 ஏக்கரில் நெற்செய்கை

north-governor.jpgயாழ். தென்மராட்சி பகுதியில் கடந்த 20 வருடங்களாக செய்கைபண்ணப்படாமலிருந்த சுமார் 1700 ஏக்கர் வயற் காணிகள் செய்கை பண்ணப்படவுள்ளன.

மேற்படி வயற் காணிகளின் உரிமையா ளர்கள் 500 விவசாயிகளின் பங்களிப்புடன் அடுத்த வாரம் ஏர்பூட்டு விழாவை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். வடமராட்சியின் தனங்கிளப்பு, மறவன்புலவு பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக மக்கள் நடமாட்டம் இன்றி விளைநிலங்கள் தரிசு நிலங்களாக கிடந்தன.

அடுத்த சிறுபோகத்தின் போது 1700 ஏக்கர் வயற்காணி யிலும் செய்கை பண்ணக்கூடிய விதத்தில் அடுத்தவாரம் ஏர்பூட்டு நிகழ்வை விழாவாக கொண்டாடவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் தலைவரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றிற்கான ஜனாதி பதியின் விசேட செயலணியின் தலைவருமான பெசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் வடமராட்சி தனங்கிளப்பு, மறவன்புலவு ஏர்பூட்டு விழா நடைபெறும்.

இலங்கை கிரிக்கெட் அணி 202 ஓட்டங்களால் வெற்றி

thilakarathna-dilshan.jpgஇலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 202 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

30/1 என்று  5-ஆம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூஸீலாந்து அணி மென்டிஸ், முரளிதரன், துஷாரா ஆகியோர் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறி நியூஸீலாந்து உணவு இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

குப்டில் 18 ஓட்டங்களுக்கும், டெய்லர் 16 ஓட்டங்களுக்கும், மேகின்டோஷ்  ஓட்டங்கள்  எதுவும் எடுக்காமலும், ஓரம் 21  ஓட்டங்களுக்கும் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இந்த 4 விக்கெட்டுகளையும் குலசேகரா, துஷாரா, மென்டிஸ், ஜெயவர்தனே ஆகியோர் வீழ்த்தினர்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் 24  ஓட்டங்கள்  எடுத்த ரைடர், முரளிதரன் பந்தில் வீழ்ந்தார். அதன் பிறகு மெக்கல்லம் 29  ஓட்டங்களையும் படேல் 22  ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கேட்ப்டன் டேனியல் வெட்டோரி மட்டும் ஒரு முனையில் மிகச்சிறப்பாக விளையாடி 67  ஓட்டங்கள் எடுத்து மென்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 71.5 ஓவ ர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியில் முரளிதரன் 3 விக்கெட்டுகளையும், மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும், துஷாரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

திலகரத்னே தில்ஷான் முதல் இன்னிங்சில் 72 பந்துகளில் 92  ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி 123  ஓட்டங்களையும் எடுத்து இலங்கை வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாய்கன் விருது கிடைத்துள்ளது.

இந்த தொடரை இலங்கை 2- 0 என்று கைப்பற்றி, ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்திடம் ஆஷஸ் தொடரை 1- 2 என்று இழக்க நேரிட்டால் இலங்கை டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று: 3 இலட்சம் மாணவர்கள் தோற்றுவர்

sri-lankan-students.jpgநாடு முழுவதும் இன்று நடைபெறும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் வவுனியா நிவாரணக் கிராமங்கள் உட்பட நாடு பூராவும் 3 இலட்சத்து 101 மாணவர்கள் தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் நடை பெறும் இப்பரீட்சைக்கு சிங் கள மொழிமூலம் 2 இல ட்சத்து 24 ஆயிரத்து 818 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 69, ஆயிரத்து 984 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்.

நாடு முழுவதும் 2602 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் 471 நிலையங்கள் பரீட்சை இணைப்பு நிலையங்களாக இயங்கும் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

யாழ்பாணத்துக்கு சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு

0000sri-lanka-map.jpgவடக்கின் வசந்தம் கருத்திட்டத்தின்கீழ் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சர்வதேச விளையாட்டரங்காக புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான  நிதியை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் வசந்தம் கருத்திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யாழ். முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா கடந்த 1975 ஆம் ஆண்டு புலிகளின் துப்பாக்கிக்குப் பலியானார். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது அரசியல்வாதி இவரே. இதன் நினைவாகவே யாழ். விளையாட்டரங்குக்கு இவரது பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலிபான்களுக்கு புதிய தலைவர்

பாகிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹகிமுல்லா மெஹ்சுத் நியமிக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் தலிபான்களின் துணை தலைவரான மெளல்வி ஃபக்விர் மொஹமது தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் ஹகிமுல்லா மெஹ்சுத் முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத்துடன் நெருக்கமானவராக இருந்தார் என மெளல்வி ஃபக்விர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கின்ற ஒரக்சாய் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உயிரோடு இருப்பதாக கூறி வரும் தலிபான்கள், தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆப்கான் தேர்தலில் முறைகேடுகள் – கண்காணிப்பாளர்கள் புகார்

vote000.jpgஆப்கா னிஸ்தானில் கடந்த வியாழன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்திய கண்காணிப்புக் குழுவான்று, வாக்குப் பெட்டிகளை நிரப்புதல், ஒருவர் பல வாக்குகளை அளித்தல், உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் பரவலாக இடம்பெற்றமைக்கு சான்றுகள் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வாக்குப் பதிவு வீதத்துக்குப் புறம்பாக, ஆப்கன் மற்றும் மேற்கத்திய அதிகாரிகள் இந்த தேர்தலை வெற்றிகரமானது என அறிவித்துள்ளனர்.ஹெல்மான்ட் போன்ற மாகாணங்களில் பதிவான 5 வீதம் போன்ற குறைந்தளவான வாக்குப் பதிவுகளால் இந்த தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகியுள்ளதாக காபூலில் உள்ள பி.பி.சி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.