வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று முன்தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வேயில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளõர். ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பியிருந்தனர். தற்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில் (லண்டன்) தங்கியிருக்கின்றார்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இராணுவம், கடற்படை, பொலிஸ் ஆகியன தனித்தனியே மேற்கொண்ட தேடுதலின்போது நேற்றைய தினம் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக் குடியிருப்புக் கிழக்கில் எட்டாம் அதிரடிப்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது 20 கிலோ நிறைகொண்ட சி 4 வெடி பொருட்கள், 69 – நிலக்கண்ணி வெடிகள், 13 புலிகளினால் தயாரிக்கப்பட்ட குண்டுகள், 125 டெட்டனேட்டர்கள், 1231 – 5.56 ரவைகள் ஆகியன கைப்பற்றப் பட்டுள்ளன.
இதேவேளை, புதுக்குடியிருப்புக் கிழக்கில் இராணுவத்தினரும் கடற்படை யினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது மேலும் ஒரு தொகுதி வெடிபொருட்களான ரி-81 ரக ஆயுதம், 03 கிலோகிராம் சி4 வெடிபொருட்கள், 400 – 12.7 ரக ரவைகள், 700 எம். பி. எம். ஜி. ரவைகள், 2.5, 5 மற்றும் 10 கிலோ நிறைகொண்ட மூன்று கிளேமோர்கள், 08 – “தமிழன்” கைக்குண்டுகள், 01 – எம். பி. எம். ஜி. இணைப்பு, 2000 – எம். பி. எம். ஜி. ரவைகள், 2250 – ரி – 56 ரக ரவைகள் ஆகியனவும் மீட்கப்பட்டு ள்ளன.
கிளிநொச்சி, அடம்பன் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹேலோ ட்ரஸ்ட் அமைப்பு அப் பகுதியிலிருந்து ஒரு நிலக்கண்ணி வெடியினையும் இரணைமடுவிலிருந்து இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஏழு கண்ணி வெடிகளை கண்டுபிடித்திருப்ப தாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
நாட்டில் தற்போது ஏ.எச்1.என்1 என்ற பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால் அதற்கான மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெறுவதற்கு சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த நோயினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம், இந்த நோய் பல்வேறு மாவட்டங்களிலும் வேகமாகப் பரவியும் வருவதால் இதற்கான இந்த மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு வந்து சேரவுள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மருந்து இங்கு வந்ததும் நாட்டில் உள்ள சகல ஆஸ்பத்திரிகளுக்கும் அவை விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றதாக அமெரிக்கா விடுத்துள்ள குற்றச்சாட்டு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை அடுத்த மாத (டிசம்பர்) இறுதியளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமெரிக்காவின் மேற்படி குற்றச்சாட்டு அறிக்கை பத்திரிகை செய்திகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் சமரசிங்க கூறினார்.
அமெரிக்க காங்கிரஸ் இந்த அறிக்கையை இலங்கை அராசங்கத்திடம் கையளித்ததை யடுத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான அசாத்சாலி தெரிவித்தார். இது தொடர்பில் கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி மக்களுக்குத் தெளிவுபடுத்தப் போவதாக அசாத் சாலி கூறினார்.
பொன்சேகாவைத் தோற்கடிக்க வேண்டுமென்ற தமது நிலைப்பாடு குறித்து, பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் தம்முடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், ஐ. தே. க. ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் உண்மை நிலையை விளக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக மக்களின் தீர்மானத்தையே ஏற்பதாகவும் அவர் கூறினார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப்பதானால் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பீர்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அசாத் சாலி ‘அவ்வாறென்றால் அதன் மறு பக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து அந்தக் கூட்டத்திலிருந்து அசாத்சாலி வெளிநடப்புச் செய்தார். இதனையடுத்து, அசாத்சாலி ஐ. தே. க. செயற் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதேவேளை ஐ. தே. க. குருநாகல் மாவட்ட எம். பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு ஐ. தே. க. எடுத்த தீர்மானத்தை கண்டித்து செயற்குழுவிலிருந்து வெளியேறியதோடு, ஐ. தே. க. அமைப்பாளர் பதவியையும் இராஜினாமாச் செய்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக ‘அன்னம்’ சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,”பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார்.மேலும், நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
”பிரபாகரனின் உரைகள் அடங்கிய இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியானதாக உள்ளது. தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். தற்போது என்னால் பல விவரங்களை வெளியே கூற முடியாவிட்டாலும் காலம் வரும்போது அனைத்தும் வெளியே வரும். போரின்போது தனக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் தனது உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் தனக்கருகில் போராளிகளை வைத்திருந்தவர் பிரபாகரன். ஆனால், அவரின் உடலை முள்ளிவாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று இலங்கை அரசு கூறும் கதையை குழந்தைகள் கூட நம்பாது. இலங்கை தென்பகுதி மக்களையும், இந்தியாவையும் நம்ப வைக்க நடத்தப்பட்ட நாடகம் தான் அது.” என்று எஸ். ஜெயானந்தமூர்த்தி பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி
நிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.
புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு, மன்னக்குளம், கனகராயன்குளம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கில் இன்னும் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள் ளனர். இங்குட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இங்கு அரச அலுவலகங்கள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதுடன் கனகராயன் மகா வித்தியாலயம், புளியங்குளம் வித்தியாலயம் ஆகிய இரண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீளத் திறக்கப்படுமென்றும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல். அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.
நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்குத் தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது.
இப்போது யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் நியாயமான தீர்வொன்றைத் நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக்கூடாது. அதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் கட்சியினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை வைக்கத் தமிழ் மக்கள் தயாரில்லை என்பதால் இவர்கள் இருவரில் ஒருவரை ஆதரிக்க முடியாத நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.