எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தரிசனம்! : நோர்வே நக்கீரா

criticsதரிசனம் – (தத்துவார்த்தக் கவிதை)

உன்முகத்தையே தரிசிக்க முடியாத நீயும்
என்றுமே உன்முகத்தையே தரிசிக்கும் நானுமாகத்தானே
இந்த உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.
நீ உனக்குரியவனே அல்ல.

முகத்தையே தரிசிக்க முடியாத நீ
அகத்தை எப்படித் தரிசிப்பாய்?
என்விமர்சனங்கள் மட்டுமே
உன் தரிசனம்.

கண்ணாடி முன்னாடி நின்று
பின்னாடியல்லவா தேடுகிறாய்
முன்னாடி நிற்பவனே!

அலங்காரம் செய்கிறாய்
யார் யாருக்கோ அழகாய் இருக்க.
உனக்காக நீ
எப்போ அழகாய் இருக்கப்போகிறாய்?

அது நீயே அல்ல
மாயையின் விம்பம்
நீயாக நீ நினைக்கும்
உன் எதிரி

கண்ணாடியின் பின்னாடி நிற்பவனை
எட்டி அடித்துப்பார்
மறுகையால் உன்னை அறைவான்.
இனியாவது புரிந்து கொள்வாயா
உனக்கு நீயேதான் எதிரி

நீ கண்ணாடியில் காண்பதெல்லாம்
நிதர்சனமே இல்லா தரிசனங்களே.

சுயவிமர்சனம் செய்
மனக்கண்ணாடியாவது தெழிவாகும்

உன்விம்பத்தை காண்பதற்கே
கண்ணா! உனக்கு
கண்ணாடியின் சேவை தேவை.
உன்னை நீ காண்பதற்கு
சுயவிமர்சனம் தேவை.

யார் யாரோ அழகுபார்க்க
மனச்சாட்சியைக் கொன்று
அலங்காரம் செய்யும் நீ
மனமெனும் கோயிலில்
மனச்சாட்சி முன் நின்று
உனக்கு நீயே அழகு செய்
சுயவிமர்சனம் எனும் பூசை செய்

உனக்கு நீயே பூசை செய்
செய்த பாவங்களுக்கு
கண்ணீரால் அபிசேகம் செய்;
சுயமாகும்; நிதர்சனம்
உன் சுயதரிசனம்.

ஆம் நீதானே கடவுள்
நீயே தான் கடவுள்.
கடந்தும் உள்ளவன் தானே கடவுள்
கடப்பாய் உன்னை கடவுளாக.

நோர்வே நக்கீரா
4.12.2009

ஐ.தே.க.வின் சுயரூபம் அம்பலம்: அமைச்சர் யாப்பா கண்டனம்

anura.jpgஐ.தே.க. மாநாட்டில் நேற்று ஊடகவி யலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலின், மூலம் ஐ.தே.க.வின் ஊடக சுதந்திரம் தொடர்பான நிர்வாணம் மீண்டும் முழு உலகிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடு நடந்த போதும் ஏனைய அனைத்து சந்திப்புகளின் போதும் தாம் விரும்பியவாறு செய்திகளை வெளியிடுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்நாட்டில் ஊடக சுதந்திரமில்லையெ னக் கூறி ஐ.தே.க. தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிரசாரம் இன்று அவர்களிடமே சுற்றி வந்துள்ளதோடு, உண்மையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் யார் என்பது நேற்றைய தாக்குதல் மூலம் தெரியவந்து ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு ள்ளார்.

ஜனநாயகம் பற்றிப் பெரிதாகப் பேசும் ஐ.தே.க. தமது மாநாட்டு வளாகத்திலேயே ஊடகவியலாளர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியதையும் அவர்கள் உபகரணங்களை சேதப்படுத்தி யதையும் ஜனநாயகத்தை விரும்பும் எவரும் விரும்பமாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் பிரசார ஆரம்பத்தின் போது வன்மமாகவும், மிலேச்சத்தனமாகவும் செயற்பட்டு ஐ.தே.க. மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தேர்தலில் ஈடுபட முயல்கிறார்கள் என்பது புலனாகின்றது. இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் குரல் எழுப்ப வேண்டுமெனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

செலியூலர் தொலைபேசியூடாக ரயில்களில் ஆசன முன்பதிவு – எதிர்வரும் 9 இல் ஆரம்பம்

handphone.jpgசெலியூலர் தொலைபேசிகளூடாக ‘365’ என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக ரயில்களில் உங்கள் இருக்கைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறை எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

முதற்கட்டமாக கொழும்புக் கோட்டை முதல் கண்டி வரையிலும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையுமான கடுகதி ரயில் சேவையில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கோட்டை நிலையத்தில் ஆசனப்பதிவு பிரிவு கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கக் கூடியது. முன் ஆசனப்பதிவு பகுதி இயங்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் பயணம்

ranil.jpgஎதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈரோஸ் முடிவு

ஈரோஸ் (ஈழவர் ஜனநாயகக் கட்சி) ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஈரோஸ் தலைவர் ‘தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரினாலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் என்பது பூஜ்யம். இத்தகைய ஒருவரினால் ஒரு ஜனநாயக நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும். முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு மக்களின் வாழ்வில் நிம்மதியைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

சந்திரிக்காவின் புதல்வர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தேர்தலில் களமிறக்கப்படக் கூடிய சாத்தியம்?

vimukthi.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் புதல்வர் விமுக்தி கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விமுக்தி குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமுக்தி குமாரதுங்க தற்போது இங்கிலாந்தில் மிருக வைத்தியராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் வெடி விபத்து; 102 பேர் பலி; 135 காயம்

ரஷ்யாவின் பெர்ம் நகரின் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர், 135 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 85 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விடுதியின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிபொருட்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மனைவியின் எலும்புகளோடு உறங்கிவருபவர்: வியட்நாமில் வியப்பு தகவல்

வியட்நாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒருவர் இறந்த தனது மனைவியின் எலும்புக்கூட்டோடு படுத்து உறங்கி வருகிறார் என்ற தகவல் அந்நாட்டில் பரவலாக அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.  ஐம்பது வயதைத் தாண்டிய வான் என்ற இந்நபர், தனது மனைவியின் சடலத்தை சவக்குழியிலிருந்து தோண்டி எடுத்து தனது மனைவியைப் போன்ற ஒரு மெழுகு பொம்மை செய்து, அதனுள் அவரது எலும்புகளை வைத்து, அந்த பொம்மைக்கு ஒப்பனை எல்லாம் செய்து உடன் வைத்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளளார்.

மனைவியின் உருவத்தின் அருகே லி வானும் அத்தம்பதியருடைய 12 வயது மகனும் உடலை அனைத்துக்கொண்டு படுத்திருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ, இப்படியான சம்பவங்களைத் தடுப்பதற்கோ தங்களிடம் அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி – ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர்.

delan-shaly.jpgபொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதன் மூலம் கட்சியின் ஆதரவாளர்களின் கண்களை கட்டி காட்டுக்குள் தள்ளி விட்டுள்ளனர். கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியுடன் நிப்போன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். .நான் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் , கட்சிக்கு ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் அரசியலிருந்து வீட்டுக்கு செல்வதா? ஓய்வெடுப்பதா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வருவேன் என்றும் அவர் சொன்னார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, .கட்சியின் செயற்குழுவிற்குள் ஜனநாயகம் இல்லை. ஜனநாயக ரீதியில் தலைவரை நியமிக்குமாறு கோரினோம் அதற்கும் செவிசாய்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கட்சியையும் யானை சின்னத்தையும் மாற்றவேண்டாம் என்று கோரினோம். .தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சியின் பெயர் விற்கப்பட்டு விட்டது. தேர்தலில் ரணில் முன்வந்தால் தோல்வியடைவார் என்று தெரியும். அதனால் தான் எஸ்.பி போட்டியிடுவதற்கு தயராக இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடுவதற்கு கட்சிக்குள் பலர் இருக்கின்றனர். கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் அரசியலிருந்து வீட்டுக்கு போவதா? ஓய்வு பெறுவதா? அல்லது அரசாங்கத்துடன் இணைவதா? என்பது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும். அரசாங்கத்தில் பதவிகளை ஏற்பதாயின் பலர் செல்வதற்கு முன்னரே நான் பதவியேற்றிருப்பேன் என்றார். .

மாநாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது; செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதை இட்டு நான் சந்தோஷமடைகின்றேன் அதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது சிங்கள நாடு, பௌத்த சிங்களவர்களுக்கே உரித்துடையது. சிறுபான்மையினர் எதனையும் கேட்கமுடியாது அவர்கள் வெளியிலிருந்து இங்குவந்தவர்கள் என்று கூறியிருந்தார்..

அவரின் கூற்று தொடர்பில் அரசாங்கத்திலிருக்கு அமைச்சர்கள், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினர் அல்லது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்கள் குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன் அது நடைபெறவில்லை.. இதனையடுத்தே 12 கட்சிகளை இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு நான் தலைமையேற்றேன். கடந்த தேர்தல்களில் யானை சின்னத்திற்கு சிறுபான்மையினர் கண்ணை மூடிக்கொண்டு புள்ளடியிட்டனர் ஆனால் இன்று யானை சின்னமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, கட்சியின் தலைவரோ தேர்தலில் இல்லை. .இது வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயமாகும் என்றார்.

தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை

telo mp jivajilingam
வீரகேசரி நாளேடு 12/5/2009 9:05:44 AM – இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழ் வேட்பாளரை கூட்டமைப்பு தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேற்சையாக களமிறங்கி போட்டியிடுவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(telo) யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஜிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவும், முன்னாள் தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்ஷவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படு கொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.

ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.

இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.