எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மனிக்பாம், புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம்

manik.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கும் வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டார். இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளைப் பார்வையிட்டார்.

மனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களோடு தமிழில் உரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவீர்கள்” என்று கூறினார்.

புதுக்குடியிருப்பில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையி னரைச் சந்தித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவுற்றதை நினைவு கூரும் வகை யில் நினைவுத் தூபியொன்றையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இத் திடீர் விஜயம் நேற்றுக் காலை இடம்பெற்றதுடன் ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மீட்கப்பட்டுள்ள தாய் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகளில் படையினரின் முழுமையான ஒத்துழைப்புத் தமக்குக் கிட்டுமென நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:- நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக படையினரினதும் நாட்டு மக்களினதும் மன உறுதியைக் கட்டியெழுப்புவதே எமது பணியாகியது.

இதற்கிணங்க படையினர் சுதந்திர மனப்பாங்குடனும் துணிவுடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தால் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது.

படையினரின் பிள்ளைகளுக்காக பாடசாலைகளை நிர்மாணிப்பது படையினருக்கான வீடமைப்புத் திட்டம் உட்பட படையினரின் எதிர்காலம், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து முழு நாட்டையும் வெற்றியின் பாதையில் இட்டுச் செல்லும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது என்றார்.

பயங்கரவாத நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் வசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன் அவ்வாறு மீள் குடியமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா நிதியுதவி 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிக்பாமிற்கு விஜயம் செய்த அவர் தமிழில் உரையாற்றினார். ஜனாதிபதி அங்கு பேசியபோது மேலும் கூறியதாவது :-

இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பாதுகாப்பது எனது பொறுப்பு. அது எனது கடமையுமாகும். அதை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். இந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பயமின்றி, சந்தேகமின்றி சுதந்திரமாக வசிக்கமுடியும். அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலை தூக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக மேற் கொள்ளப்படாதிருந்த அபிவிருத்தி செயற் பாடுகள் வடக்கு வசந்தத்தின் மூலம் இப் போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உங்கள் அனைவருக்கும் வீட்டு வசதி உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளே உங்கள் சொத்து. அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். எதிர் காலத்தில் இந்த நாட்டில் அவர்கள் முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.

நிவாரண கிராமத்தில் உள்ள மாண வர்களுக்காக 23 ஆயிரம் தொகுதி பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி பகிர்ந்தளித்ததுடன் நிவாரண கிராமத்தில் இருந்தவர்களுடன் சுமுகமாக உரையாடினார்.

க. பொ. த. (சா. தர) பரீட்சார்த்திகளுக்கு 3 இலட்சம் அடையாள அட்டைகள் விநியோகம்

schools_stu.jpgஇவ்வருடம் நடைபெறவுள்ள க. பொ. த. (சா.தர) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோக்கப்பட்டு விட்டதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ. பி. தர்மதாஸ தெரிவித்துள்ளார். இதன்படி நேற்று முன்தினம் (08) வரை 3,10,405 தேசிய அடையாள அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும் இருவர் கட்டுப்பணம்

vote.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடு வதற்காக நேற்றும் ஒரு அரசியல் கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதன்படி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் நேற்று வரையும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாளை: ஏ எச்1என்1 பீடிக்கப்பட்ட மாணவர் பரீட்சைக்கு தோற்ற தடை

influenza-a.jpgக.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாளை 11 ஆம் திகதி ஆரம்ப மாகும்போது ஏ எச்1என்1 வைரஸ் பீடிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப் பின் அவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எனினும், இன்றுவரை அவ்வாறு எந்தவொரு மாணவரும் ஏ. எச்1என்1 வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போகும் அத்து டன் இதனால் ஏனைய பரீட்சார்த்திக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வைரஸால் பீடிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் பரீட்சைத் திணைக்களத்துக்கோ வலய கல்விப் பணிப்பாளருக்கோ அறியக்கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

போருக்கான நோபல் பரிசு கொ(கெ)டுப்பு! : நோர்வே நக்கீரா

obama-nobel.jpgசுவீடன் நாட்டில் அல்பிரெட் நோபல் என்பவர் 21.10.1833இல் இமானுவேல் அல்பிரட்டுக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு தந்தையை அதிகம் பிடிக்காது. தாயின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்தார். இரசாயனவியலில் திறமைகளைக் கொண்டு இவரே டைனமைட்டை கண்டுபிடித்தார். இதனூடாக பெருந்தொகையான செல்வம் குவிந்தது. அப்பணத்தின் ஒருபகுதி சுவீடனில் இரசாயனவியல், பௌதீகவியல் போன்றவற்றுக்கான நோபல் பரிசாகக் கொடுக்கப்பட்டாலும் சமாதானத்துக்கான பரிசை நோர்வே நாடுதான் கொடுக்கவேண்டும் என அல்பிரட் நோபல் அவர்கள் முன்மொழிந்திருந்தார். நோவேயிய ஆட்சிமன்றத்தால் தெரிவு செய்யப்படும் குழுவே சமாதானத்துக்கான நோபல் பரிசை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

ஒபாமாவுக்கு எதற்கு?
2009ம் ஆண்டுக்கான 108 ஆவது சமாதானப்பரிசை ஏன் அமெரிக்க அதிபர் பராக் உபாமாவுக்கு கொடுக்கிறோம் என்பதை நோபல்குழு நோகாமலே சொன்னது. அதாவது சர்வதேச ரீதியாக இராஜதந்திரத்தைப் பலப்படுத்தியதற்காகவும் மனித ஒத்துழைப்பை ஊக்குவித்ததற்காகவுமே இப்பரிசு இவ்வருடம் வழங்கப்படுகிறது. முக்கியமாக அணுவாயுதமற்ற உலகை உருவாக்குவதற்கான ஒபாமாவின் நோக்கமும் இதில் அடங்குகிறது.

இப்பரிசுக்கான முன்மொழிவைக் கேட்டதுமே பலர் அதிர்வடைந்தனர். இது காலமுதிர்வுக்கு முன்னரே கொடுத்து விட்டார்கள் ஒபாமா வாக்களித்தபடி எதையுமே செய்யவில்லை என்று பல நோவேயிய மக்கள் குழம்பிக் கொண்டனர்.

ஒபாமா தகுதியுடையவரா?
எதையும் மிகச்சுலபமாகச் சொல்லலாம் ஆனால் செய்வது என்பதுதான் கடினமானது. சர்வேதேச ரீதியில் இராஜதந்திரத்தை ஏற்படுத்தினார் என்றால் எங்கே, எப்போ என்பதற்கான போதிய தகுந்த ஆதாரங்கள் கிடையாது. கூடிப்பேசலாம் ஆனால் நடந்தது என்ன? ஈராக்போர் முடிந்ததா? ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுகிறதா? புஸ்சினால் தொடக்கி வைக்கப்பட்டு சர்வதேச சித்திரவதை முகாம் முற்றாக செயலிழந்ததா? சிலவேளை இவரது இராஜதந்திரம் இலங்கையில் பலித்திருக்கிறது எனலாம். கடைசி நேரத்தில் புலிகளுக்குக் கைகொடுப்பேன் என்று கைவிட்டது ஒரு நல்ல இராஜதந்திரி தானே. இதுபற்றி நோர்வே உயர்மட்ட இராஜதந்திரிகள் தான் நன்கறிந்திருப்பார்கள். இவர்கள் ஒபாமாவுக்கு பரிசளிப்பது ஆச்சரியத்துக்குரியது அல்லவே. இந்தப்பரிசு தனக்குத் தகுதியுடையதா? இல்லையா என்பதை உணரமுடியாத ஒபாமாவுக்கு இது பரிசல்ல, பரிசுகெடுப்பாகும். தன் சொந்தநாட்டிலே தான் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். இவரது சுகாதார மீழ்கட்டமைப்பு ஊர்ந்து கொண்டிருக்கிறது.

ஒபாமா இப்பரிசை மறுத்துரைத்து தான் சொன்னதை, சமாதானத்துக்கான பங்களிப்பை செய்த பின்பு எனக்கு இந்த சமாதானப்பரிசைத் தாருங்கள் என்று கூறியிருந்தால் ஒபாமா மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவரே. நோபல் குழுவாவது தன்பிழைகளை உணர்ந்திருக்கும். தான் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும், இதனால் கடைசிவரையும் கிடைக்க முடியாத ஒன்றை எப்படியாவது எடுத்து விடவேண்டும் என்று எண்ணினாரோ என்னவோ?

அல்பிரெட் நோபலின் சமாதானப் பரிசுக்கான முன்மொழிவில் முக்கியமானது இராணுவம், இராணுவத் தளபாடங்கள், இராணுவப்பலக் குறைப்பு என்பது. இதை ஒபாமா செய்தாரா? ஈராக்கில் இருந்து தன் இராணுவத்தை வெளியில் எடுப்பேன் என உறுதியளித்தவர் இன்னும் அதற்காக பெருமுயற்சியை செய்யவில்லை, மாறாக 15 000 அமெரிக்கப் போர்வீரர்களை நவீன இராணுவத் தளபாடங்களுடன் அனுப்பி வைத்துவிட்டு நோர்வேக்கு நோபல்பரிசு வாங்க வருகிறார். இவர் எந்தவிதத்திலும் மற்ற அரசியல்வாதிகளில் இருந்து வித்தியாசப்படவில்லை. இது பரிசளிப்பா? பரிசு அழிப்பா? பரிசு கெடுப்பா? இப் பரிசுகெட்ட பரிசைவாங்க ஒரு பரிசளிப்பு விழாவா?

ஒரு சமாதானத்துக்கான பரிசை வாங்கவரும் ஒருவரின் பாதுகாப்புக்காக பலமில்லியின் குரோண்கள் பாவிக்கப்படுகிறது. தெருவிலே கிடக்கும் அள்ளுறுகளின் வாய்மூடிகள் உலோகங்களால் ஒட்டப்படுகிறது. பலமுக்கிய வீதிகள் போக்குவரத்துக்குத் தடைசெய்யப் படுகின்றன. ஒஸ்லோவின் முக்கிய இடங்களில் நுழைவனுமதி மறுக்கப்படுகிறது. இவர் தங்கியிருக்கும் கிராண் கொட்டல் முற்றாக வெற்றிடமாக்கப்பட்டு ஒபாமாவுடன் வந்திருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொட்டலுக்கு வெளியே ஒபாமா வந்து கையசைக்கும் வேளை யாரும் சுடாதிருக்க குண்டுகள் துளைக்கா கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக அமெரிக்காவிலிருந்து தனிவிமானத்தில் எடுத்து வரப்படுகிறது லீமுசீன் எனும் மோட்டார் வண்டி. இந்த மோட்டார் வண்டியை எந்தச் சன்னமும் துளைக்காது. குண்டுகள் உடைக்காது. 13மிமீ தடிப்புடைய சிறப்புத் தயாரிப்புக் கார் கண்ணாடியை பசுக்காவே நொருக்காது. இப்படியான பாதுகாப்புகளுடன் வரும் ஒபாமாவுக்கு ஏன் மில்லியன் பணச்செலவில் பாதுகாப்பு. பரிசை எல்லாம் வெள்ளை மாளிகையில் கொடுத்துவிட்டு செலவுசெய்யும் பணத்தைப் பிரயோசனமாக வறியநாடுகளின் வளர்ச்சிக்கோ ஏன் அமெரிக்காவில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் கறுப்பின மக்களின் தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்தியிருக்கலாமே.

இவர் வந்து இறங்கும் விமானநிலையத்தில் இருந்து ஒஸ்லோ வரை இராணுவப்பாதுகாப்பு. இப்பகுதிகளில் அசையும் கதலிகள் (இராடார்கள்) இராணுவ வாகனங்களில் பூட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த விமானமும் எல்லைக்குள் நுழையுமுன்னரே முன்னரே சுட்டுவிழுத்தக் கூடியவாறு பீரங்கிகள் மூக்கை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. இவ்வளவும் எதற்கு? சமாதானப்பரிசு பெறவரும் ஒபாமாவால் நோர்வே போர்கோலம் பூண்டிருக்கிறது எனலாம்.

இராணுவத்தையோ துப்பாக்கிகளையோ தெருவில் காணாத எமது பிள்ளைகள் பயப்படுகின்றனர். இப்படியான இராணுவ பொலிஸ் நடமாட்டத்தைக் கண்டு நோபல் பரிசே அழுகிறது, நாறுகிறது. சமாதானப் பரிசுக்கே போர் பயம் என்றால் சமாதானம் எங்கே? இது பரிசா? பரிசு கெடுப்பா? ஒருவனின் வருகைக்காக நாடே போர் வேடம் தாங்குகிறது என்றால் அவன் போரைக் கொண்டுவாறான் என்றுதானே அர்த்தம். இந்தப் பரிசு கெடுப்பை எப்படி யாரிடம் சொல்லுவது. பரிசைக் கொடுத்து சமாதானத்தைப் பரிசு கெடுக்கிறார்களே.

Related News: அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

சர்வதேச மனித உரிமைகள் தினம்.- International Human Rights Day : புன்னியாமீன்

every-human-has-rightsசர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள்,  மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக்குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம்  ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும்,  செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.

இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும்,  மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான  தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
 
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.

மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.

மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,”  கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்”; கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு  பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.

முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது.  இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது,  என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும்,  மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத  உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.

மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது.  இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு  வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.

every-human-has-rightsசர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

உறுப்புரை 1
சமத்துவ உரிமை – சகல மனிதர்களும்   சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

உறுப்புரை 2
ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம்,  பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!

உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

உறுப்புரை 4 
அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.

உறுப்புரை 5
சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

உறுப்புரை 6
சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு

உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை 8
ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.

உறுப்புரை 10
நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய,  சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.

உறுப்புரை 12 .
அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.

உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை 

உறுப்புரை 14
ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும்,  துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும்,  நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.

உறுப்புரை 15
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.

உறுப்புரை 16
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும்,  ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.

உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும்,  கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.

உறுப்புரை 18
மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.

உறுப்புரை 19
கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும்,  பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.

உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.

உறுப்புரை 21
அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 22 
சமூகப்  பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை –

உறுப்புரை 23
தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.

உறுப்புரை 24
இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை –
இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.

உறுப்புரை 25
நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1. ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.

உறுப்புரை 26
கல்விக்கான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.

உறுப்புரை 27
தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும்
உரிமை –
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.

உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.

உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.

உறுப்புரை 30
இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.

மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.

தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே. இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய்,  சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”

1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.

மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும்,  பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது. இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல்,  தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

முஸ்லிம் தமிழ் சிங்கள சமூகங்களின் உதவியுடன் சிறிலங்கா இஸ்லாமிக் போறம் மேற்கொள்ளும் கண் சிகிச்சை முகாமுக்கான நிதி திரட்டும் வைபவம்

Naja Mohamadஇலங்கையின் வடபகுதி மக்களுக்கு சிறிலங்கா இஸ்லாமிக் போறம் (யுகே) ஏற்பாடு செய்துள்ள கண் சிகிச்சை முகாமுக்கான நிதிசேகரிப்பு வைபவம் லண்டன் மொஸ்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 12ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்  நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஸ்ரீபன் ரிம்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

சிறீலங்கா இஸ்லாமிய ஒன்றியம் (இலண்டன்) ஆரம்பித்துள்ள முதல் முயற்சி இலங்கையின் வடபகுதியில் உள்ள கண் நோயாளர்களின் தேவை கருதி முதற் தொகுதியாக 500 நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக 20 சிகிச்சை முகாம்கள் வட பகுதியின் 5 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைக்கான நோயாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாவது கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளில் 500 நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். இச் சிகிச்சைக்கு நோயாளி ஒருவருக்கு தலா £50 ஸ்ரேர்லிங் பவுண்கள் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்த மக்களுக்கான தேசம்நெற் நூல் திட்டத்திற்கு முக்கிய பங்களித்த அகிலன் பவுண்டேசன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற கண் சிகிச்சை முகாமிலும் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளனர். அகிலன் பவுண்டேசன் 25 பேருக்ககான கண் சிகிச்சைக்கான செலவை வழங்க முன் வந்துள்ளது. மேலும் லண்டனில் உள்ள முக்கிய சைவ ஆலயம் ஒன்றும் இக் கண் சிகிச்சை முகாமுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இவ்வைபவத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் தமிழ் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இவ்வேலைத் திட்டத்திற்குப் பங்களிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா இஸ்லாமிக் போறத்தின் தலைவர் நஜா மொகமட் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நிகழ்வில் பெரும்பாலும் 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனத் தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் வேலைத் திட்டம் இலங்கையிலுள்ள Serendib Foundation எனப்படும் மன்றத்தினால் அபிவிருத்தி மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் இடம்பெறுகிறது. இதற்கான சிகிச்சை வசதிகளை இலங்கையிலுள்ள குவைத் வைத்திய மன்றம் (Kuwait Hospital Foundation) மேற்கொள்கிறது. இம் மன்றம் ஏற்கெனவே சுமார் 4000 இற்கு மேற்பட்ட கண் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை கடந்த 3 வருடங்களில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கண் சிகிச்சை மூகாம் கண் பார்வையை தெளிவாக்குவதற்கான முகாம் மட்டுமல்ல சமூகங்களிடையே பரந்த பார்வையை ஏற்படுத்துவதற்கும் உதவும் என நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார். தமிழ் முஸ்லீம் சிங்கள சமூகங்கள் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவது இரட்டிப்பு நன்மையை ஏற்படுத்தம் எனவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் பல வழிகளிலும் தாயக மக்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்த கவுன்சிலர் போல் இக்கண்சிகிச்சை முகாமை மேற்கொள்ளவும் தங்கள் உதவிகளை புலம்பெயர்ந்தவர்கள் வழங்குவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

CATARACT SURGERY CAMPS IN NORTHERN SRI LANKA INTIATED BY
SRI LANKA ISLAMIC FORUM UK TRUST

FUND RAISING EVENT

On Saturday 12th December 2009
From 3.00 p.m. to 7.00 p.m

at the
London Muslim Centre
Main Conference Hall
46-92  Whitechapel Road, London E1 1JX 

CHIEF GUEST:
Rt. Hon. Stephen Timms, M.P.

GUEST OF HONOUR:
H.E. Mr. Nihal Jayasinghe,
High Commissioner for Sri Lanka in the UK

SPECIAL GUESTS
Religious Dignitaries of all Faiths
Local Councillors
Representatives of Community Organizations

Sri Lanka Islamic Forum UK Trust has initiated a project to conduct cataract operations for 500 people in the North of Sri Lanka which will be done in two stages. The first stage will be to conduct 20 screening camps in the five districts of the Northern Province to identify patients needing surgery. 500 patients will be selected in the second stage for treatment.

The project is the brain-child of Serendib Foundation for Relief & Development, Sri Lanka. It will be implemented by Kuwait Hospital Foundation, Sri Lanka, which has a special unit dedicated for cataract surgeries. Kuwait Hospital Foundation, Sri Lanka, has already treated free of charge more than 4000 cataract patients in other parts of Sri Lanka within the last three years.

The cost for treatment and post surgery care is estimated to be around £50 per patient.

SLIF UK Trust has organized a fund raising event on Saturday, 12th December 2009, from 3.00 to 7.00 pm at the London Muslim Centre, Whitechapel, and London, to collect the fund needed for the project.

Representatives of the three communities, Sinhalese; Tamils & Muslims,  local Councilors, Professionals, Community Leaders, Religious Dignitaries of all faiths, officials from UK Department of International Development, UK Foreign & Commonwealth Office,  Sri Lanka High Commission, and representatives of INGOs and Media personnel are expected to participate in the event.

Organizations and individuals willing to support this humanitarian effort and also for invitations to participate in the Fund Raising event may contact:

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரியும் தொலைபேசி இலக்கமும்:

SLIF UK Trust by E-mail: slif.uk@gmail.com
Najah Mohamed (0044 79 833 41181 0r 0044 79 833 41181)
Marzook (0044 79 405 76701 or 0044 79 405 76701)

Sri Lanka Islamic Forum UK Trust

3rd Floor LMC Business Wing,
38-48, Whitechapel Road
London E1 1JX
United Kingdom

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

Viyoogamமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் இதழான வியூகம் சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோ, லண்டன், பாரிஸ், சூரிச் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. புலம்பெயர் சூழலில் மிக நீண்ட இடைவெளியின் பின் வெளிவரவுள்ள அரசியல் சஞ்சிகையான வியூகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்ட முற்போக்கு சக்திகளின் வெளிப்பாடாக வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைமாறிச் சென்றபொழுதும் அதற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு தங்களது அரசியல் கொள்கையுடன் உறுதியுடன் நின்றவர்கள் தற்பொழுது வியூகம் அமைக்க முன்வந்துள்ளனர்.

”மே 18 இயக்கம், ஒரு அரசியல் முன்னணி அமைப்பு’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றது. ”முன்னேறிய பிரிவினர் மத்தியில் காணப்படும் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனை முகம் கொடுப்பதை இலக்காக கொண்டு இந்த அமைப்பானது தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்” என மே 18 இயக்கம் தெரிவிக்கின்றது. ”வியூகம் இதழானது இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான கோட்பாட்டு, அரசியல் இதழாக செயற்படும்” எனத் தெரிவிக்கும் வியூகம் அமைப்பினர், ”அந்த வகையில் எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த முக்கியமான பணியில் இணைந்து கொள்ளுமாறு எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையில் அக்கறையுள்ள அத்தனை முன்னேறிய பிரிவினரையும் வியூகம் திறந்த மனதோடு வரவேற்கிறது” என அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் கோட்பாட்டு இதழ் என்ற வகையில் வியூகம் சஞ்சிகைக்கு முன் வெளியான உயிர்ப்பு சஞ்சிகை குறிப்பிடத்தக்கது. அதுபற்றி வியூகம் ஆசிரியர் தலைப்பு, ”1997 இல் தீப்பொறி அமைப்பும், அதன் கோட்பாட்டு சஞ்சிகையான உயிர்ப்பு-உம் முன்னேறிய பிரிவினர் மத்தியில் செல்வாக்கு மிக்கவையாக திகழ்ந்தன. பத்து வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக செயற்பட்டு, பல தோழர்களது உயிர்கள் உட்பட பல இழப்புக்களின் ஊடாகத்தான் இந்த குழுவானது இந்த நிலையை அடைந்தது. கணிசமான காலம், உழைப்பு மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை செலவிட்டே தனது கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த படிப்பிணைகளைப் பெற்றுக் கொண்டது. புலிகளது நேரடித் தாக்குதல் உட்பட தலைமறைவின் பலவேறு கஷ்டங்களையும் தாங்கி முன்னேறிய ஒரு அமைப்பானது, பகிரங்கமாக செயற்படத் தொடங்கியதும் உள் முரண்பாடுகளினால் சிதைந்து போவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” எனத் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புகளில் செயற்பட்டவர்கள் போராட்டத்தின் போக்கு வழி தவறியபோது அவற்றிலிருந்து விடுபட்டு போராட்டத்தை மீண்டும் சரியான திசைவழி செலுத்த முயன்றனர். அதில் சில உயிரிழப்புகளும் இடம்பெற்றது. அந்தக் கடுமையான சூழ்நிலை மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள் தற்போது வியூகம் அமைப்பதற்கான சரியான தருனமாக இதைக் கருதுகின்றனர்.

அதற்கு முன்னதாக தங்களது சுயவிமர்சனத்திற்கான நேரமாகவும் இதனைக் கருதுகின்றனர். வியூகம் ஆசிரியர் தலையங்கத்தில் அவர்களது கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனம் வருமாறு ஆரம்பிக்கின்றது. ”இப்போது எமது சுயவிமர்சனத்திற்கான நேரம் வருகிறது. நாம் முன்னேறிய பிரிவினரின் ஒரு பகுதியினர் என்ற வகையில் கடந்த காலத்தில், போராட்டத்தில் நேர்ந்த தவறுகளில் எமது பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு குழுக்களிலும், தனிநபர்களாகவும் செயற்பட்ட பல்வேறு நபர்களும் எம்முடன் இணைந்து கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பு என்ற வகையில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் தமிழீழ மக்கள் கட்சி இலிருந்து வந்தவர்கள் முக்கிய கூறாக அமைகிறார்கள். மாற்று அமைப்பைக் கட்ட முனைந்தவர்கள் என்ற வகையில் எமது அனுபவங்கள், படிப்பினைகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு எமது சுயவிமர்சனமும் ஏனைய முன்னேறிய பிரிவினர் மத்தியில் கட்டாயமாக வேண்டப்படும் ஒன்றாக இருக்கிறது. தீப்பொறி குழுவாக எமது தனியான அரசியலை முன்னெடுத்த நாம், பல வருட தலைமறைவு வாழ்க்கையின் பின்னால் 1998 எமது கொங்கிரசை கூட்டி தமிழீழ மக்கள் கட்சி எனும் பெயரில் பகிரங்க அமைப்பாக செயற்பட முனைந்தோம். கொங்கிரசை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த தொடங்கும் போது அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைப்பானது 2000 ம் ஆண்டில் கலைந்து போனது. இப்படியாக நேர்ந்ததில் பல்வேறு தனிப்பட்ட, மற்றும் புறநிலை சார்ந்த அம்சங்கள் தாக்கம் நிகழ்த்தியது உண்மையே என்றபோதிலும், அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த விடயங்களில் நடைபெற்ற தவறுகள் தீர்க்கமானவையாக அமைந்தன” என்று வியூகம் தனது சுயவிமர்சனத்தை ஆரம்பித்தது.

பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அனைவரையும் அழித்தொழித்து தங்களையே ஏகபிரதிநிதிகளாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18 2009 உடன் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்டனர். அழித்தொழிக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது தவறான அரசியலுமே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளோ அல்லது அவர்களது உரிமைப் போராட்டமோ அல்ல என்பதை அறிவிக்கின்ற வகையில் வியூகம் தனது முதலாவது அரசியல் கோட்பாட்டு இதழை வடிவமைத்துள்ளது.

அதேசமயம் வெறுமனே புலி எதிர்ப்பு அரசியலை வியூகம் மேற்கொள்ளவில்லை. அதன் ஆசிரியர் தலையங்கம் தாங்கள் உட்பட போராட்டத்தின் பல்வேறுபட்ட சக்திகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. வியூகத்தின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி ”….. ஆகவே பிரச்சனை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் – சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்தத் தோல்விகளில் வெளிப்பட்டதாகும்.”

200 வரையான பக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்விதழில்
தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்….. : தேசபக்தன்
சூறையாடப்படும் தமிழீழ வளங்கள் : அருந்ததி
எட்டினமோ இலக்குகளை : தாமிரா
விடுதலைப் போராட்டமும் புலிகளும் : ஏகலைவன்
ஆகிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தள்ளது.

இச்சஞ்சிகையின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு கனடாவில் டிசம்பர் 13 மாலை 3:30 மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் இங்கு நடைபெறும்.
Sunday – Dec 13 2009, 3:30pm
Mid Scarborough Community Center
2467 Eglinton Ave East
(Nearest Subway: Kennedy Subway)

லண்டன், பரிஸ், சூரிச் நிகழ்வுகளின் விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

பிரபாகரனின் ஆயுதம் சாதிக்க முடியாததை டொலர் சாதிப்பதற்கு இடமளியோம் தேசிய இணக்கச் சபை தின நிகழ்வில் ஜனாதிபதி

mahinda0.jpgதேசிய போராட்டம் எதிர்கொள்ளும் இறுதி சவாலை சந்திக்கின்ற தருணமிது. பிரபாகரன் ஆயுதம் மூலம் செய்ய முடியாமற் போனதை டொலர்களினால் சாதிக்க முற்படும் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி இலங்கை மாதாவின் பிள்ளைகளாக அச்சமின்றி சகலரும் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து செயற்படுவது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் பேதங்களை உருவாக்க சில சக்திகள் முயல்கின்றன. இதனை நாட்டு மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நம்மை விட நம் தாய் நாட்டை நேசிப்பவர்களாக சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

தேசிய இணக்கச் சபை தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் அனுஷ்டிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியிலிருந்து இணக்கச் சபைகளின் உறுப்பினர்கள் 4,000 க்கும் மேற்பட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களான மிலிந்த மொரகொட, சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் வரலாற்றை நோக்குகையில் அரசர் கால தீர்ப்புகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.

ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அந்த ஊருக்கே தண்டனை வழங்கிய காலம் அது. தவறாக ஒருவர் உருவாக்கப்பட்டதால் அவ்வூருக்கே தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அக் காலத்தில் மிகக் குறைந்த குற்றங்களே இடம் பெற்றன. நாம் வழங்கும் தீர்ப்புக்கு இணக்கமா? என இரு தரப்பினரையும் கேட்கும் நீதிமன்ற யுகம் மாற்றமடைந்து, நீ குற்றவாளியா – அல்லது சுத்தவாளியா எனக் கேட்கும் யுகம் உருவாகியுள்ளது.

சாதாரண நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு இன்றுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பொன்றிற்கிணங்க ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டபோது, முழு உலகமும் அழுத்தங்களைப் பிரயோகித்த சம்பவமொன்றையும் கூற முடியும். இந்த வகையில் நீதிமன்றத் தீர்ப்புக்கே அழுத்தம் கொடுக்கும் யுகமிது.

சாதாரண குடும்பப் பிரச்சினைகள் போன்றவை இனி நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதே எமது கருத்து. எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கின் சகல பகுதிகளுக்கும் இணக்கச் சபைகளை விரிவாக்குவதே எமது நோக்கம்.

புலிகளுக்குக் கப்பம், வரிகளைச் செலுத்திய காலமும், பாதாள உலக அச்சுறுத்தல் மற்றும் போதை காரணமாக விளைந்த பாதிப்புகளையும் எம்மால் முடிவுக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.  சட்டத்தை மதிக்கின்ற சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். மக்கள் நலன் கருதிய தீர்மானங்களை எச்சந்தர்ப்பத்திலும் நாம் மாற்றத் தயாரில்லை.

இது தேர்தலுக்காகவோ அல்லது எமது அதிகாரத்திற்காகவோ எடுக்கும் தீர்மானமல்ல நாட்டு மக்களின் நலனைக் கொண்டது.  கல அரசியல் கட்சிகளும் எமது அமைச்சரவையில் உள்ளன. நாம் ஒருபோதும் அரசியல் பலிவாங்கலில் ஈடுபடுபவர்களல்லர். எந்த செயற்பாடுகளிலும் நகரம் – கிராமம் என்ற பேதத்துடன் செயற்படுபவர்களில்லை. நாம் அனைவரும் ஒரே நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு வர வேண்டும்.

இதற்கு சமூகத்திலுள்ள அரசியல் வைராக்கியத்தை இல்லாதொழிக்க வேண்டும். தாய் நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதில் இணைந்து செயற்பட்டது போல் அச்சம் – சந்தேகமற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நாம் கைகோர்த்துச் செயற்படுவோமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

புலிகள் இயக்க சொத்துக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் – பிரதமர்

ratna.jpgபுலிகள் இயக்கத்தின் பெயரில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று அவற்றை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகளின் சொத்துகள் தொடர்பில் தற்போது புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், விசாரணைகள் நிறைவடைந் ததும், தகவல்கள் பாராளுமன்றத்தில் வெளியிடப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

2009 மே மாதம் 18 ஆம் திகதி புலிகள் இயக்கம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த இயக்கத்தின் தங்கம் உள்ளிட்ட பெருமளவு சொத்துகள் கைப்பற்றப்பட்ட தாகவும் அவை தொடர்பான தற்போதைய நிலவரம் யாதென்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, மே மாதம் 18 ஆம் திகதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் சொத்துக்களை மீட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்ட சொத்துகள் குறித்து புலன் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கே. பீ. மூலம் புலிகள் இயக்கத்தின வெளிநாட்டுச் சொத்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்குச் சொந்தமான பல கப்பல்களில் சிலவற்றைக் கடற்படையினர் அழித்துள்ளனர். எஞ்சிவை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வெளியிப்படும்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.