மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

Viyoogamமே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் இதழான வியூகம் சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோ, லண்டன், பாரிஸ், சூரிச் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. புலம்பெயர் சூழலில் மிக நீண்ட இடைவெளியின் பின் வெளிவரவுள்ள அரசியல் சஞ்சிகையான வியூகம் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்ட முற்போக்கு சக்திகளின் வெளிப்பாடாக வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைமாறிச் சென்றபொழுதும் அதற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு தங்களது அரசியல் கொள்கையுடன் உறுதியுடன் நின்றவர்கள் தற்பொழுது வியூகம் அமைக்க முன்வந்துள்ளனர்.

”மே 18 இயக்கம், ஒரு அரசியல் முன்னணி அமைப்பு’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றது. ”முன்னேறிய பிரிவினர் மத்தியில் காணப்படும் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனை முகம் கொடுப்பதை இலக்காக கொண்டு இந்த அமைப்பானது தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்” என மே 18 இயக்கம் தெரிவிக்கின்றது. ”வியூகம் இதழானது இந்த அமைப்பின் உத்தியோகபூர்வமான கோட்பாட்டு, அரசியல் இதழாக செயற்படும்” எனத் தெரிவிக்கும் வியூகம் அமைப்பினர், ”அந்த வகையில் எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த முக்கியமான பணியில் இணைந்து கொள்ளுமாறு எமது தேசத்தினதும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரதும் விடுதலையில் அக்கறையுள்ள அத்தனை முன்னேறிய பிரிவினரையும் வியூகம் திறந்த மனதோடு வரவேற்கிறது” என அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசியல் கோட்பாட்டு இதழ் என்ற வகையில் வியூகம் சஞ்சிகைக்கு முன் வெளியான உயிர்ப்பு சஞ்சிகை குறிப்பிடத்தக்கது. அதுபற்றி வியூகம் ஆசிரியர் தலைப்பு, ”1997 இல் தீப்பொறி அமைப்பும், அதன் கோட்பாட்டு சஞ்சிகையான உயிர்ப்பு-உம் முன்னேறிய பிரிவினர் மத்தியில் செல்வாக்கு மிக்கவையாக திகழ்ந்தன. பத்து வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக செயற்பட்டு, பல தோழர்களது உயிர்கள் உட்பட பல இழப்புக்களின் ஊடாகத்தான் இந்த குழுவானது இந்த நிலையை அடைந்தது. கணிசமான காலம், உழைப்பு மற்றும் ஏனைய வளங்கள் என்பவற்றை செலவிட்டே தனது கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த படிப்பிணைகளைப் பெற்றுக் கொண்டது. புலிகளது நேரடித் தாக்குதல் உட்பட தலைமறைவின் பலவேறு கஷ்டங்களையும் தாங்கி முன்னேறிய ஒரு அமைப்பானது, பகிரங்கமாக செயற்படத் தொடங்கியதும் உள் முரண்பாடுகளினால் சிதைந்து போவது என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” எனத் தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புகளில் செயற்பட்டவர்கள் போராட்டத்தின் போக்கு வழி தவறியபோது அவற்றிலிருந்து விடுபட்டு போராட்டத்தை மீண்டும் சரியான திசைவழி செலுத்த முயன்றனர். அதில் சில உயிரிழப்புகளும் இடம்பெற்றது. அந்தக் கடுமையான சூழ்நிலை மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தவர்கள் தற்போது வியூகம் அமைப்பதற்கான சரியான தருனமாக இதைக் கருதுகின்றனர்.

அதற்கு முன்னதாக தங்களது சுயவிமர்சனத்திற்கான நேரமாகவும் இதனைக் கருதுகின்றனர். வியூகம் ஆசிரியர் தலையங்கத்தில் அவர்களது கடந்த காலம் பற்றிய சுயவிமர்சனம் வருமாறு ஆரம்பிக்கின்றது. ”இப்போது எமது சுயவிமர்சனத்திற்கான நேரம் வருகிறது. நாம் முன்னேறிய பிரிவினரின் ஒரு பகுதியினர் என்ற வகையில் கடந்த காலத்தில், போராட்டத்தில் நேர்ந்த தவறுகளில் எமது பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு குழுக்களிலும், தனிநபர்களாகவும் செயற்பட்ட பல்வேறு நபர்களும் எம்முடன் இணைந்து கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பு என்ற வகையில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் தமிழீழ மக்கள் கட்சி இலிருந்து வந்தவர்கள் முக்கிய கூறாக அமைகிறார்கள். மாற்று அமைப்பைக் கட்ட முனைந்தவர்கள் என்ற வகையில் எமது அனுபவங்கள், படிப்பினைகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு எமது சுயவிமர்சனமும் ஏனைய முன்னேறிய பிரிவினர் மத்தியில் கட்டாயமாக வேண்டப்படும் ஒன்றாக இருக்கிறது. தீப்பொறி குழுவாக எமது தனியான அரசியலை முன்னெடுத்த நாம், பல வருட தலைமறைவு வாழ்க்கையின் பின்னால் 1998 எமது கொங்கிரசை கூட்டி தமிழீழ மக்கள் கட்சி எனும் பெயரில் பகிரங்க அமைப்பாக செயற்பட முனைந்தோம். கொங்கிரசை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த தொடங்கும் போது அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைப்பானது 2000 ம் ஆண்டில் கலைந்து போனது. இப்படியாக நேர்ந்ததில் பல்வேறு தனிப்பட்ட, மற்றும் புறநிலை சார்ந்த அம்சங்கள் தாக்கம் நிகழ்த்தியது உண்மையே என்றபோதிலும், அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்புத்துறை சார்ந்த விடயங்களில் நடைபெற்ற தவறுகள் தீர்க்கமானவையாக அமைந்தன” என்று வியூகம் தனது சுயவிமர்சனத்தை ஆரம்பித்தது.

பல்வேறு அரசியல் பின்னணிகளில் இருந்தவர்களையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் முன்னைய தொடர்ச்சியாக இல்லாமல் புத்வேகத்துடன் ஆரம்பிப்பதற்காக மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மே 18 2009 ஒரு மிக முக்கியமான திருப்புமுனை. அதிலிருந்து முகிழ்த்துள்ளது மே 18 இயக்கம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து அனைவரையும் அழித்தொழித்து தங்களையே ஏகபிரதிநிதிகளாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18 2009 உடன் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்டனர். அழித்தொழிக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது தவறான அரசியலுமே அன்றி தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளோ அல்லது அவர்களது உரிமைப் போராட்டமோ அல்ல என்பதை அறிவிக்கின்ற வகையில் வியூகம் தனது முதலாவது அரசியல் கோட்பாட்டு இதழை வடிவமைத்துள்ளது.

அதேசமயம் வெறுமனே புலி எதிர்ப்பு அரசியலை வியூகம் மேற்கொள்ளவில்லை. அதன் ஆசிரியர் தலையங்கம் தாங்கள் உட்பட போராட்டத்தின் பல்வேறுபட்ட சக்திகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. வியூகத்தின் ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி ”….. ஆகவே பிரச்சனை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் – சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்தத் தோல்விகளில் வெளிப்பட்டதாகும்.”

200 வரையான பக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்விதழில்
தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்….. : தேசபக்தன்
சூறையாடப்படும் தமிழீழ வளங்கள் : அருந்ததி
எட்டினமோ இலக்குகளை : தாமிரா
விடுதலைப் போராட்டமும் புலிகளும் : ஏகலைவன்
ஆகிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தள்ளது.

இச்சஞ்சிகையின் முதலாவது வெளியீட்டு நிகழ்வு கனடாவில் டிசம்பர் 13 மாலை 3:30 மணிக்கு நடைபெற ஏற்பாடாகி உள்ளது. நூல் மதிப்பீடும் கலந்துரையாடலும் இங்கு நடைபெறும்.
Sunday – Dec 13 2009, 3:30pm
Mid Scarborough Community Center
2467 Eglinton Ave East
(Nearest Subway: Kennedy Subway)

லண்டன், பரிஸ், சூரிச் நிகழ்வுகளின் விபரம் விரைவில் அறியத்தரப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • sanakiyan
    sanakiyan

    வியூகம் போட்டு மீண்டும் தமிழ் மக்களை புது மாத்தளனுக்கு கூட்டிச் சென்று பலிகொடுக்காமல் இருந்தால் சரி.

    Reply
  • Suresh
    Suresh

    பழைய புளொட் பெருசாளிகள், அது தீபொறி ஆனல் என்ன, தமிழ் ஈழ கட்சி ஆனால் என்ன, நீங்கள் முதலில் plot இல், நடந்த படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் சம்பந்தமாக, வெளிப்படையான சுயவிமர்சனத்தை பகீரங்கமாக, முன்ன்வையுங்கள். தீபொறி காரர்களே! நீங்கள் உட்கட்சி ஜனனயகத்திக்கு போராடியது உண்மைதான். ஆனால், தலைமை மட்டும் தான் எல்லா அஜாகரங்களுக்கும் பொறுப்பு என்ற கருத்தை ஏற்றுகொள்ள முடியாது! உதாரணமாக, தீபொறிகாரர் என்ன்பதல் அவர் பரிசுத்தவான் அல்ல. இவரின் தனிப்பட்ட நடத்தையால் பாதிக்கப்பட்ட அப்பாவி தோழர்கால் பலர் ஐரோபாவிலும், இங்கு கனடாவிலும் உள்ளனர்.

    ஜெயபாலன், உயிர்ப்பு வெளிவந்த வேளை 200 குறைவாநவார்கலே வாசித்தார்கள். அதில் 20 பேர் நீங்கள் சொல்லவது போல்”வளர்த்தவர்கள்”. மகா உத்தமன் தமது ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழில், எழுதிய கட்டுரைகளே உயிர்ப்பில் வெளிவந்தன. அது அவரது மேதாவித்தனத்தை வெளிகாட்ட மட்டுமே உதவியது. ஆனால், அதேநேரம் வெளிவந்த மனிதம், தூண்டில் போன்றவை பரந்து பட்ட அளவில் முற்போக்கான அணியினரை ஒன்றுபடுத்தியது. இவ் இரு சஞ்சிகைகளும், பிற்பாடு தமிழ் ஈழ மக்கள் கட்சியல் உள்வாங்கப்பட்டது, என்பது வரலாறு …. தொடரும்….

    Reply
  • pandithar
    pandithar

    மே 18 இயக்கம் எந்த நோக்கத்தில் ஆரம்பிக்கட்டது என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும். அது உண்மைத் தன்மையாகவும் இருக்க வேண்டும்.

    இப்படித்தான் முன்பும் பல தடவைகள் இவர்கள் வந்தார்கள். இளங்கோ என்ற முன்னாள் புலி உறுப்பினரை ஐனநாயக முற்போக்கு சக்தி என அறிமுகப்படுத்திக் கொண்ட தீப்பொறி புலம்பெயர் முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரையும் இளங்கோவின் சதி வலைக்குள் விழ்த்தி விட எத்தனித்தவர்.

    யார் இந்த இளங்கோ?… தன்னை முற்போக்கு சிந்தனையாளனாக இவர் காட்டிக்கொண்டாரே தவிர இவர் தமிழ் மக்களுக்கு துப்பாக்கியால் நெற்றியில் பொட்டு வைத்ததாலும் பல தமிழ் பெண்களை கணவன்மாரை கொன்றொழித்ததால் அவர்களது பொட்டு அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்ததாலும் பொட்டம்மான் என்று பெயர் எடுத்துக்கொண்ட புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளரின் நேரடி ஏஐண்ட் தான் இந்த இளங்கோ!

    இந்த இளங்கோ தான் நினைத்ததையெல்லாபம் சாதித்து விட்டு தகவல்களை திரட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இப்போது மே 18 இயக்கத்திற்குள் இளங்கோ 2009 என்று யாரைத்தான் அறிமுகப்படுத்தப் போகின்றாரோ தெரியாது.

    எதற்கும் அனுபவப்பட்டவர்களே விழிப்புடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

    பூசாரியாக இருக்கும் வரை மணி கிலுக்க வேண்டும்; நாயக இருக்கும் வரை குரைக்க வேண்டும் மாக்சீய சிந்தனையாளனாக இருக்கும் வரை புரட்சி குறித்து அழகழகாக எதையாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும். இதுதான் சிலரது நோக்கம் போலும்; உண்மையில் இவர்களது முயற்சியால் புரட்சி நடக்கப்போவதில்லை என்பது உண்மை. அவ்வாறு புரட்சி நடந்து விட்டால் இவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள்.

    காரணம்…. அட…நாங்களே எதிர்பார்க்காமல் புரட்சி நடந்து விட்டதே என்ற ஏக்கத்தில் இவர்கள் மரணித்து விடுவார்கள்.

    இப்படிக்கு
    பண்டிதர்

    Reply
  • BC
    BC

    தலைவர் வியூகம் வகுக்கிறார் என்று அடிக்கடி கேள்விப்பட்டதால் வியூகம் என்றாலே பயப்பட வேண்டியுள்ளது.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    நண்பர்களே!
    நாம் ஓன்றும் செய்யாமலிருக்கும் பொழுது பிறரின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கக் கூடாது என நினைப்பது நியாயமானது…
    இருப்பினும் சில காலம் மேற்குறிப்பிட்ட கட்சியில் அங்கத்தவராக இருந்து செயற்பட்டதன் அடிப்படையில் நான் ஏன் அக் கட்சியிலிருந்து விலகினேன் என்பதை கடிதம் மூலம் 10 வருடங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்… அது இப்பொழுதும் பொருந்தும் என நம்புவதால் இங்கு மீண்டும் இணைக்கின்றேன்… மாற்றம் வெளியில் மட்டும் ஏற்படுத்துவதல்ல ஒவ்வொரு மனிதரிலிருந்தும் அவர்களது உள்ளாந்த தன்மையிலிருந்து வரவேண்டும் என நம்புகின்றவன் நான்…. தொடா;ந்தும் வாசிக்க…

    (புரட்சிகர) தமிழீழ மக்கள் கட்சி அரசியலிலிருந்து ஏன் விலகினேன்?

    இங்கு நான் எழுதும் அனுபவங்களும் கருத்துக்களும் என்னுடையவை அல்ல. அனைத்தும் பிறருடையது. தர்க்கரீதியாக நிறுபிக்கப்படுபவற்றை அல்லது நம்பத்தகுந்த தர்க்கங்களை ஏற்றுக் கொள்வது என்பது நமது வாழ்வு தொடர்பான புரிதலினடிப்படையிலமைந்தது. மேலும் இதை நீங்கள வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு தங்களது நிறுவனப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட மனதை அருகில் சிறிது நேரம் தள்ளி வைத்துவிட்டு வெறுமையான திறந்த மனதுடன் ஆரம்பிப்பின் எனது கருத்துக்களின் நோக்கத்தை அல்லது கூறவரும் விடயத்தை தங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றேன். இதை மட்டுமல்ல எந்த ஒரு விடயத்தையும் தேடும் பொழுதோ அல்லது வாசிக்கும் பொழுதோ இத்தகைய நிலையில் இருப்பது ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கலாம். நாம் வாழும் சமூகம் ஆணாதிக்க சிந்தனைகளால் ஆதிக்கம் பெற்றது. நமது வாழ்வில் மட்டுமல்ல நமது மொழிகளிலும் மிகவும் ஆழமாக இந்த ஆதிக்க சிந்தனைகள் பதிந்துள்ளன. இதிலிருந்து முறித்துக்கொண்டு பொதுவான ஒரு மொழியை உருவாக்கும்வரை இந்த மொழியையே பயன்படுத்த வேண்டியது தவிர்க்கமுடியாதது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

    சமூக மாற்றம் இது நமது குறிகோள். ஆனால் சமூகத்தை மாற்ற புறப்பட்ட நமக்கும் சமூகத்திற்க்குமான உறவு குறித்து புரிந்து கொண்டோமா என்பது கேள்விக்குறி.

    தனி மனித சேர்க்கையின் ஒரு கற்பனை வடிவமே சமூகம். அதாவது தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் இடைவெளி அதிகம் என்பதை நாம் ஒருபோதும் கவனித்ததில்லை. தனிமனிதர் யதார்த்தமான உண்மை. சமூகம் தனிமனிதரின் பொய்யான கற்பனை. இதன் நீட்சியே நாடு தேசம் என்ற கற்பனைகள் எல்லாம். பொய்யான கற்பனையை உருவாக்குவதற்காக மனிதர் என்ற யதார்த்தமான உண்மையை பழியாக்குகின்றோம். அதன் உள்ளார்ந்த தன்மையை அறியத் தவறுகின்றோம். ஒரு உயிருள்ள மிருகமாகவே மதிக்கத் தவறுகின்றோம். ஆனால் நமது கொள்கைகள் இலட்சியங்கள் எல்லாம் தனிமனிதர்களைக் கவர்ந்து இழுப்பதற்கான அழகான கவர்ச்சியான சொற் கலவைகள். மனிதர்களைவிட இவற்றுக்கு அதிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றோம். இங்குதான் நாம் இன்று எதிர்நோக்கம் பல்வேறு பிரச்சனைகளுக்கமான காரணங்கள் தோன்றுகின்றன.

    குடும்பம், சமூகம், தேசம், நாடு, சமயம் என்ற நிறுவனங்களின் உருவாக்கங்கள் மனிதரின் பிரக்ஞையான செயற்பாடுகளை அழித்துவிட்டன. மாறாக தமது சிந்தனைகளை கருத்துக்களை நம் ஆழ் மனதில் உறுதியாகவும் ஆழமாகவும் பதித்துள்ளன. நம் பிரக்ஞையற்ற மனது இதை அறியாமல் புரியாமல் அதன் வழி செயற்படுகின்றது. இன்று மனித செயற்பாடுகள் என்பவை இயந்திரத்தனமானவை. இந்த இயந்திரத்தனமான செயற்பாடுகளின் விளைவே இன்றைய உலகம் எதிர்நோக்கும் கொடூரம். நாம் வாழும் பிரபஞ்ஞத்தில் உண்மையானதும் இயற்கையானதும் இந்த உலகம். மற்றும் இதில் வாழும் தாவரங்களும் விலங்குகளுமே. இதில் மனித விலங்கு மட்டும் தனது பிரக்ஞையால்(?) மற்ற மிருகங்களிலிருந்து விலகி தனித்துவமாக விளங்குகின்றது. இந்தப் பிரக்ஞை எப்பொழுது மங்குகின்றதோ அப்பொழுது மனிதரும் மிருகமாக மாறுகின்றார். நமது பிரக்ஞையின் அளவைப் பொறுத்து நமது மிருகத்தனம் கூடிக் குறைகின்றது. முழுயைான பிரக்ஞையுடைய மனிதரிடமே நாம் உண்மையான மனித வாழ்வை எதிர்பார்க்கலாம்.

    இதுகாலவரை நாம் சமூக மாற்றத்திற்காக விஞ்ஞான அனுகுமுறையை மேற்கொள்வதாகவே கூறிவந்தோம். நாம் பின்பற்றியது விஞ்ஞான அனுகுமுறையல்ல. மாறாக ஒரு பைபிளைப்போல. பகவத்கீதையைப்போல, குரானைப்போல சமூகமாற்றத்திற்கான செயற்பாட்டிற்கும் மாக்ஸினதும் லெனினினதும் பத்தகங்களை அப்படியே பின்பற்றுகின்றோம். நமது கொள்கைகளிளோ நடைமுறைகளிளோ பாரிய மாற்றங்களையோ முறிவுகளையோ காணமுடிவதில்லை. கட்சி கட்டும் முறை நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அதேமுறை. புரட்சிகர இராணுவத்தைக் கட்டும் முறையும் அதே பழைமையானது. ஆனால் மக்களினதும் புரட்சிகர சக்திகளினது ஆதரவைப் பெற அடிக்கடி விஞ்ஞானமுறையையே நாம் பின்பற்றுகின்றோம் எனக் கூறிக்கொள்ளத் தவறுவதில்லை. விஞ்ஞான முறை என்றால் என்ன என்பது தொடர்பான நமக்கு விளக்கம் குறைவாக இருப்பினும் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றோம்.

    விஞ்ஞான முறை என்பது ஒன்றைக் கண்டுபிப்பதற்கோ அல்லது அடைவதற்கோ பல்வேறு முறைகளை பரிசோதனை ரீதியாக அணுகுவது. ஓவ்வொரு பரிசோதனை அணுகுமுறையும் தவறும் பொழுதும் புதிய பரிசோதனையை அணுகுவது. ஏத்தனை பரிசோதனைகளை மேற்கொள்வது என்பது நாம் எதை விளைவாக எதிர்பார்க்கின்றோம் என்பதிலையே தங்கியுள்ளது. மேலும் குறிப்பிட்ட விளைவைப் பெறுவதற்காக விஞ்ஞானிகள் தம் பரிசோதனையில் உள்ள ஈடுபாடும் அக்கறையும அவர்களுடைய வாழ்வுமுறையும் மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கது. ஆனால் புரட்சியாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் நாம் நமது நோக்கத்தில் எவ்வளவு ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ளோம் என்பது முக்கியமாக கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

    கடந்த நூற்றாண்டு காலமாக சமூகமாற்றத்திற்காக நாம் பின்பற்றியது அடிப்படையில் ஒருமுறையே. பல்வேறு புரட்சிகர போரட்டங்கள் இதுவரை ஒரே அணுகுமுறையில் நடைபெற்றுள்ளன. சகல போராட்டங்களினது வெற்றியும் அவை எதிர்பார்த்ததை அடையவில்லை. அரைகுறையில் முடிவடைந்தன. அல்லது தோல்வியை அடைந்தன. வெற்றி எனக் கூறப்படுபவை ஆட்சிமாற்றம் மட்டுமே. அடிப்படை மாற்றம் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. ஒரே அணுகுமுறையில் பல்வேறு தடவைகள் தோல்வியை கண்ட பின்பும் மீண்டும் அதே அணுகுமுறையைக் கையாள்வது விஞ்ஞான முறையாகாது. ஆனாலும் நாம் இன்றும் அவ்வாறுதான் கூறுகின்றோம். கட்சியிலிருந்து விலகும் எனது முடிவுக்கு இது ஒரு அடிப்படைக் காரணம். இந்த அடிப்படைக் காரணத்தை அடியொற்றி பல்வேறு காரணங்கள் உருவாகின்றன என்பதை நீங்கள் மேலும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

    இரண்டாவது முக்கிய காரணம் தனிமனிதர் தன்னைப் பற்றி அறியாமையிலிருப்பதும் பிறரைப்பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பதும். இது பல தவறுகளுக்கு இறுதியில் இழுத்துச் செல்கின்றது. தன்னை அறியாமல் இருப்பதற்கான காரணங்களே பிறரை அறியமுடியாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது. தன்னை அறிந்து கொள்வது என்பது முழமையான பிரக்ஞையில் இருப்பது எனக் கூறலாம். முழமையான பிரக்ஞையில் செயற்படுவதற்கு உள்நோக்கிய தேடலில் ஈடுபடுவது அவசியமானது வெளி நோக்கிய தேடலில் ஈடுபடுவதற்கு எவ்வாறு பரிசோதனை அணுகுமுறையை மேற்கொள்கின்றோமோ அதோபோல் அனுபவ அணுகுமுறையை உள்நோக்கிய தேடலுக்கு கையாளலாம். தனிமனிதர் என்று தனது இயந்திரத்தனமானதும் முகமூடி அணிந்ததுமான வாழ்வை முறித்துக்கொண்டு பிரங்க்ஞைபூர்வமாக வாழ ஆரம்பிக்கின்றாரோ அன்று தனது தன்முனைப்பை (நபழ) ஆதிகாரத்தின் மீதான ஈர்ப்பை (pழறநச pழளளநளளiஎந) தனது உளவியலை இதுபோன்ற பல விடயங்களில் தன்னைப்பற்றி புரிந்துகொள்ளலாம். இந்தப் புரிதலானது பிறரைப் புரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கலாம். இது தனிமனிதரையும் அவர் உறவுகளை மேன்மைப்படுத்தும் என்றால் மிகையல்ல.

    இதற்கு பிரங்ஞை என்றால் என்ன என்பது தொடர்பாக நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானது. நாம் பிரங்க்ஞை பூர்வமாக செற்படுகின்றோம் என்ற சொற்றோடரை மட்டும் பயன்படுத்துவது புரிந்துகொண்டதன் அர்த்தமல்ல.

    புதிய சிந்தனை தேவைப்படுகின்றது! புதிய சிந்தனையை உருவாக்குவதற்கு முதல் !சிந்தனை!யின் அடிநாதம் என்ன என்பதை புரிந்துகொள்வோம். இதன் அடிநாதத்தைப் புரிந்துகொள்வதற்கு நமது பிரக்ஞை அவசியமானது. முதலில் நாம் முழமையான பிரக்ஞையுடன் வாழப்பழகுவோம். இதன்பின்பே பிரக்ஞையான செயற்பாட்டை முன்னெடுக்கலாம். கற்பனையில் வாழாமல் யதார்த்தமாக வாழப்பழகுவோம். இதற்காக கற்பனை அவசியமில்லை எனக் கூறவில்லை. கற்பனையே யதார்த்தமான வாழ்வாகிவிடக் கூடாது. இரண்டுக்குமிடையில் பிரக்ஞைபூர்வமான புரிதல் இருப்பது அவசியமானது. இதற்கு முடியமனதுடன் இருப்பதை விடுத்து திறந்த இவெறுமையான மனதுடன் இருக்கப்பழகுவோம்.

    ஆன்மீகம் என்பது நமது ஆன்மாவுடன் தொடர்புடையது. இதற்கும் சமய நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை. மாறாக இந்த சமய நிறுவனங்களும் சமூக நிறுவனங்களும் இவற்றின் ஆதிக்கசிந்தனைகளும் நமது ஆன்மாவை கருவிலையே சிதைத்துவிட்டன. இதை அறியாமலே நாம் அடிமைகளாகவே பிறந்து இயந்திரமாக வாழ்கின்றோம். நாம் எம்மைப் பற்றி முதலில் அறிந்து கொள்வதைவிட வெளியைப் பற்றி அறிவதில் ஆர்வமாக இருக்கின்றோம். ஆகவே முதலில் நம்மிலிருந்து ஆரம்பிப்போம்.

    நான் இதுவரை பல்வேறு தவறுகளை செய்துள்ளதுடன் தவறுகள் நடைபெறுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளேன். எனது அரைகுறை பிரக்ஞையின் அல்லது பிரக்ஞையற்ற செயற்பாட்டின் விளைவே இவற்றுக்கு காரணம் என்பதை இன்று நான் புரிந்துகொள்கின்றேன். நான் இதில் எழுதிய விடயமாகட்டும் அல்லது முன்பு எழுதிய விடயமாகட்டும் அனைத்தும் நான் அனுபவித்துப் பெற்ற அறிவல்ல. எல்லாம் கடன் வாங்கி எழுதியவையே. அவை என்னுடையவையல்ல. யார் யாரோ வாழ்ந்து கண்ட உண்மைகள் அல்லது கடன் பெற்று கடன் வழங்கிய அறிவுகள். யாரோ கூறியதை அல்லது எழுதியதை நான் மீள எழுதியுள்ளேன் அல்லது கூறியுள்ளேன். இச் எழுதிய அனைத்து விடயங்களுக்கும் இது பொருந்தும். எனது சொந்த அறிவு என்று ஒன்றுமில்லை. இன்றைய எனது வாழ்க்கைப் பயணம் முதலில் என்னை அறிந்துகொள்வதே.

    பிரக்ஞையற்று வாழ்பவர் என்றும் அடிமையே.
    அதுவும் தான் அடிமை என்று அறியாத அடிமை.
    இது மிகவும் கவலைக்குரியது.
    பிரக்ஞையுடன் வாழ்பவர் அனைத்திலிருந்தும் விடுதலையடைந்து
    சுதந்திரமாக வாழ்பவர்..

    -இது நான் செயற்பட்ட புரட்சிகர கட்சிக்கு 2000ம் ஆண்டு எழுதிய விலகல் கடிதத்தின் திருத்திய வடிவம்

    மீராபாரதி

    Reply
  • Suresh
    Suresh

    மீரா and பண்டிதர் , உங்களுக்கு நன்றி.

    இளங்கோ பல தோழர்களின் கொலைக்கு காரனமானவர். அத்துடன் தமிழ் ஈழ கட்சியின் அழிவுக்கும் அவர்தான் காரணம். நானும் இக்கட்சியில் இருந்தேன். புலியால் கொலை செய்யப்பட்ட தோழர்களின் குடும்பங்கள் இன்றும் கஸ்ரபடுகிரார்கள். யாருகாவது, இளங்கோ இப்போது எங்க என்று தெரியுமா ? தயவு செய்து எழுதவும் ! !

    Reply
  • meerabharathy
    meerabharathy

    நண்பர்களே!
    அமைப்பு ஒன்றில் நடந்த தவறுகளுக்காக தனிநபர் ஒருவரை மட்டும் தாக்குவது சரியான பாதையல்ல….தனிநபர் ஒருவர் இழைக்கும் தவறுக்கு காரணம் அந்த அமைப்புமே…மேலும் அதுவும் ஒரு சமூகப் பிரச்சனையே…

    ஒருவர் மீது குற்றம் காண்பது நமது முதுகை பாதுகாக்கவே உதவும்…மாறாக பிரச்சனையை இனங்கானவோ அல்லது தீர்க்கவோ உதவாது…

    மேலும் தனிநபர் மீது குற்றம் சாட்டும் நபர் தனது தவறுகளை மறந்துவிடுகின்றார் அல்லது மறைத்து விடுகின்றார்…

    இது தொடர்பாக தொடா;ந்தும் பின்னோட்டம் இடுகின்றவா;கள் தங்களை இனங்காட்டுங்கள்…புனைபெயராயினும் நீங்கள் யார் என்று கூறுங்கள்…அப்பொழுதான் நீங்கள் கூறுவது நியாமானதாக இருக்கும்…

    ஒரு நபர் தவறு செய்தார் அவர் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என ஒருவர் மீது மட்டும் பழி போடுவது மற்றவர்கள் நல்லவா;கள் ஒன்றும் தெரியாத ;அப்பாவிகள் ஆக்கிவிடுகின்றது…அல்லது மடையா;களாக்கிவிடுகின்றது…யதார்த்தத்தில் அவ்வாறு இல்லை என்பதை நாம அனைவரும் அறிவோம்…

    ஆகவே இவ்வாற பிரச்சனைகளே தனி நபர் சார்ந்த்தாக இருப்பினும் ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்ப்போம்…முழுமையான கண்ணோட்டத்தில் பார்ப்போம்…இதுதான் உண்மையான சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களின் பங்களிப்பாக இருக்கும்…
    நாம் எல்லோரும் ஏதோர ஒரு சந்தர்ப்பத்தில் நம்மையும் அறியாமல் தவறு இழைத்திருக்கின்றோம் என்பதை நாம் ஒருவரும் மறக்க கூடாது…

    நன்றி

    மீராபாரதி

    Reply
  • pandithar
    pandithar

    மே 18 இயக்ககாரர்களே!

    உங்கள் சின்னம் என்ன கோடாலியோ?….
    உங்கள் அரசியல் ஆலோசகர் யார் இளங்கோவோ?….

    முப்டையும் வைத்திருந்த பிரபாகரனுக்கே
    கோடாலிக்கொத்து!

    எப்படையும் இல்லாமல் சொர்ப்பனத்தில்
    தூங்கும் உங்களுக்கு ஈக்கில் ஒன்றே போதும்!….

    சும்மா புலுடா விட்டு எமது மக்களையும் அழித்து
    உங்களையும் அழித்து விடும் அவலங்களை நீங்கள் உருவாக்குவது ஆபத்து!

    சிலு சிலுப்பு வேண்டாம் பலகாரம் வெண்டும்.

    இனியாவது எமது மக்களை வாழ விடுங்கள்

    Reply
  • Kishi
    Kishi

    ஜான்(காந்தன் புளட் இயக்கப்பெயர்) மாஸ்டர் என்ற புலி உளவாளிக்கு மீளவும் குருதி தேவையாக இருக்கிறது. தம்மைத்தாமே முற்போன்கெனப் பிரகடனப் படுத்திக்கொண்டு புலம்யெர் மக்களை மட்டுமல்ல அரும்புகின்ற அனைத்து அணியையும் உடைக்க முனையும் இந்தக் கூட்டம் மிக அபாயகரமானது. புலிக்கு வேவுபார்த்தபடி தீப்பொறியாய் உலா வந்தது. இப்போது ரீல் விடுதல் “தலைமறைவு” வாழ்வென…

    தமிழீழம் சஞ்சிகையில் புலிக்கு முண்டுகொடுத்துப் புலியை தேசிய-தேச இராணுவமாகப் பிரகடனப்படுத்தியது-மக்களைக் காயடித்தது. இதன் முக்கிய நபர் காந்தன் (ரகுமான் ஜான்). உயிர்ப்பு இத்தகைய உளவு-புலிக்கு முண்டு கொடுப்பதற்குப் புலியை விமர்சித்தபடி அனைத்து மாற்றுச் சக்தியையும் ஏமாற்றிப் பிளந்தது. கூடவே வேவு பார்த்துப் புலிக்குப் போட்டுக்கொடுத்துப் பலரைக் கொன்றது…

    இக் குழுத்தான். இப்போது அதே குழு வியூகமெனச் சொல்லி அதே புலிப்பாணி அரசியலைக் குறுந்தேசியவாதத்துக்கூடாக நகர்த்துகிறது.மே 18 எனும் அடையாளத்தின் ஊடாகச் சொல்வது மறைமுகமான குறுந்தேசிய வாதமே.இதன் வழி மீளம் தமிழ் விதேசிய வாதத்தில் குளிர்காய முனைகிறது காந்தன் கூட்டம்.இவர்களைத்தான் முதலில் இலங்கையரசிடம் கையளிக்க வேண்டுமென எவராவது நினைப்பாரானால் அவர்கள் முட்டாள்கள். ஏனெனில் இவர்களை இயக்குவதே இலங்கை அரசு உட்பட அந்நியச் சக்திகளே. மீளவும் கொலைக் கரத்தை நமக்குள் பதியம்பொட வந்த இக்கூட்டை ஜெயபாலன் அம்பலப்படுத்துங்கோ.

    Reply
  • Vasu
    Vasu

    இந்த அமைப்பில் இருந்து தேசத்துரோகி என்று ஒரு கடிதத்தின் மூலம் முத்திரை குத்தி கலைக்கப்பட்ட நண்பர்களில் நானும் ஒருவன்! இளங்கோ + மகா உத்தமன் கூட்டு சுவிஸ் மகா நாட்டில் நடந்து கொண்ட விதம் 1987இல் நான் விட்டு விலகிய புலிகள் அமைப்பையே மீண்டும் எனக்கு நினைவுறுத்தியது! இவர்களிடம் அன்று துப்பாக்கி இருந்திருந்தால் நாங்கள் இன்று புதைகுழிக்குள் இருந்திருப்போம்! புனை பெயர்களில் வருவதை விடுத்து உங்கள் சொந்த பெயரில் வெளியில் வந்து விமர்சனங்களை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்! சுயவிமர்சனத்தை பாதிக்கப்பட்ட தோழர்களிடம் முதலில் தொடங்குங்கள்! தனி நபர் மீதான சாடல்களை முதலில் நிறுத்துங்கள்! குறிப்பாக லண்டன் குட்டி நீங்கள் பொட்டம்மான் செய்த உளவு வேலையை திரும்ப திரும்ப செய்யாது நேர்மையாக முன்னை நாள் தோழர்களுடன் குறைந்த பட்சம் ஒரு விவாதத்திற்கு அழைப்பு விடுங்கள்! ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும் தனி நபர் மீதான தாக்குதலையும் முதலில் நிறுத்தி விட்டு உங்களை பற்றிய சுயவிமர்சனத்தை பகிரங்கமாக தேசம் இணையத்தில் விடுங்கள்!

    Reply
  • pandithar
    pandithar

    மே18 காரர் தங்களை ஏதோ நக்சல்பாதியில் இருந்து புறப்பட்ட நக்சலைட்டுக்கள் போல் கற்பனையில் மிதக்கிறார்கள் புரட்சி குறித்த கனவுகளில் மட்டும் மிதப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கலிஸ்டுக்கள் என்று தங்களை வெளிப்படையாக குறிப்பிடலாமே…

    எதிரியின் குருதியை கைகளில் நனைக்காதவன் புரட்சிவாதி அல்ல என்று கூறிய நக்சலைட்டுக்கள் தங்களை சிவப்பு சித்தாந்த ஏடுகளோடு கட்டுப்படுத்தி விட்டார்கள். அவர்களாவது தளத்தில் நின்று மக்களிடம் கற்றார்கள். மே 18 காரர் பனிநாடுகளின் குளிர்வனப்பை இரசித்துக்கொண்டு
    எங்கோ இருக்கும் இலங்கைத்தீவில் தனிநாடு கேட்பது புலுடா வேலை!

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    நீண்ட காலமாகவே புனைகதைகளுக்குப் பழகிப்போன நமது மனம் நிசத்தை நம்ப மறுக்கிறது. உண்மை எதுவெனத் தெரிந்தும் ஒத்தக்கொள்ளமுடியாத இயலாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில் இருக்கிறது நமது இனம். இது நல்லதொரு மாற்றத்தை ஒருபோதும் நமக்குத் தந்துவிடப் போவதில்லை.
    தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் “தமிழ் மக்களுக்கு இருக்கின்ற கடைசி நம்பிக்கை விடுதலைப் புலிகள் தான். இலங்கை அரசிடம் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது விடுதலைப் புலிகள் காலத்தில் தான் முடியும்” என்று சொன்ன வார்ர்தைகள் இன்று எப்படிப் பொய்த்துப் போனது? இலங்கை அரசுடன் பலமேசைகளில் பேச்சுவார்த்தை நடாத்தியவர்களை இனி ஒருவித அரசியலிலும் இயங்க முடியாதபடி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதற்கு காரணம் யார்? இவற்றிற்கு நாம் விடையை எப்போது தேடுவது?
    வெறும் ஏமாற்றுத் தனங்களையே நீண்டநாட்களாக செய்து கொண்டிருக்க முடியாது. வெறும் தமிழ்த் தேசிய வெறியூட்டலில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதருணம் வந்து விட்டது. ஒவ்வொரு அரசியல் நிகழ்வுமீதும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இன்று அவசியமாகிறது. முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டிவைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கதையாடல் இன்று நம் கண்முன்னால் உருக்குலைந்துள்ளது. இங்கிருந்து நமது கடந்தகாலத் தவறுகள் குறித்த மீள்பார்வையைத் தொடங்கமுதல் இனிவரப்போகும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பரந்த மனதளவில் இருந்து எதிர்கொள்ள வேண்டியது மிகமுக்கியமானதாகும். முதலில் விடப்பட்ட தவறுகளை நாம் எல்லோருமே அவரவர் நிலை சார்ந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமானது.
    தங்களுடைய வருமானங்களுக்காக தமிழ் மக்களது வாழ்வைக் கேலிக்கூத்தாக்கியவர்கள் இந்தத் தமிழ்த்தேசியவெறியர்கள். இவர்களே இன்னும் எஞ்சியிருக்கும் மக்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள்.
    தமிழீழ விடுதலையை நேசித்தவர்கள் அதற்காக தன்பிள்ளைகளை காவுகொடுத்த அந்த வன்னிமக்கள் விடுதலைப்புலிகளாலேயே கணக்கில்லாமல் கடைசி நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னால் இங்கை அரசினது வன்முறை பற்றியும் புதிய புரட்சி பற்றியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகள் அந்த மக்களுக்கு வகுப்பெடுப்பது என்பது எவ்வளதூரம் கொடுமையான கேவலம்.

    Reply
  • pandithar
    pandithar

    மே 18 இயக்கக்காரரே!

    உங்கள் இயக்கத்தின் முன் தோன்றிய மூத்த தலைவர் இளங்கோ சுவிஸில் இரகசிய கட்டுரை வரைந்து சூடு கிளப்பிய வரலாறு எமக்கு தெரியும். இந்த இளங்கோவும் உங்கள் உறுப்பினரா?… அல்லது தலைவரா?…

    மாற்று அமைப்பு உறுப்பினர்கள் பலரையும் பொட்டம்மானுக்கு அடகு வைத்து ஏமாற்று வித்தை காட்டிய இளங்கோவோடு எங்களிடம் நீங்கள் வந்து விடாதீர்கள்.

    அந்த இளங்கோ இப்போது ராஐபக்கவிற்கு தூதுவிட ஈ.பி.டி.பி யை நாடியுள்ளதாக தகவல். அன்று பொட்டம்மான் பக்கம். இன்று பக்சம்மான் பக்கம். எது உண்மை சொல்லுங்கள்?….

    இரு தரப்பு அம்மான்களையும் நம்பி தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில்…
    மாற்றுக்கட்சியினரே மறந்தும் கூட இளங்கோ என்ற சுத்தத சந்தர்ப்பவாத சக்திகளை ராஐபக்சவுடன் இணையாதிருக்க வழி செய்து விடவேண்டாம்.

    Reply