எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பல்கலைக்கழகங்களில் மோதல்களை தவிர்க்க தேசிய கொள்கை தயாரிப்பு

university.jpgபல்க லைக்கழக மாணவர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்படும் மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை தயாரித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஹரிச்சந்திர அபேகுணவர்தன தெரிவித்தார்.

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டிக் கிளையின் 36 ஆவது பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்தத் தகவலைத் தெரிவித்த அவர் தொடர்ந்து தன துரையில்; நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் நெருக்கமான உறவுகளைக் கட்டியெழுப்புவதனூடாக மாணவக் குழுக்கள் மத்தியில் தோன்றும் மோதல்களை கட்டுப்படுத்த முடியும். மாணவர்களிடையில் ஏற்படும் முரண்பாடுகளை சட்டங்கள் மற்றும் தண்டனைகள் மூலம் தீர்க்க முடியாது. எனவே பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழு தேசிய கொள்கையொன்றை உருவாக்கி வருகின்றது. இதனை சகல பல்கலைக்கழகங்களிலும் அமுல்செய்யும் போது சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்.

க. பொ. த (சா/த) பரீட்சை நாடு முழுவதும் இன்று ஆரம்பம் : பரீட்சைகள் – 11ஆம் திகதி முதல் 22 வரை

anura.jpg2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடை பெறுகிறது. நாடு முழுவதும் 4098 பரீட்சை நிலையங்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 714 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைக்கு சகல பரீட்சார்த்திகளும் காலை 8.00 மணிக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.

பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளோ அல்லது பரீட்சை மண்டபத்தினுள் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொண்ட பரீட்சார்த்திகளோ எக்காரணம் கொண்டும் தொடர்ந்தும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதி அட்டை ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய, பரீட்சை திணைக்களம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள ஏதேனும் ஆளடையாள அட்டையை உடன் எடுத்துவர வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும் இப்பரீட்சைக்கு இடம்பெயர்ந்தோர், நிவாரணக் கிராமங்கள் நீங்கலாக, 5 இலட்சத்து 45 ஆயிரத்து 132 பரீட்சார்த்திகள் 4040 பரீட்சை நிலையங்களில் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 875 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்

2017 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கனவில் ரணில். தொலைக்காட்சி பேட்டியில் எஸ்.பி.

sb-dissanayake.jpg2017  இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் வரும் போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அனுமதி கிடைக்காது.  எனவே, 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமென்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஆனால் அவ்வாறு நடைபெறப் போவதில்லையென ஐ. தே. க. வின் முன்னாள் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.

ITN தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஒரு கட்சியில் இருக்கும் வரை அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சியில் ஒருமைப்பாடு அவசியம். இதனால் தான் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவு தர நான் முன்வந்தேன்.  அவரை தோளில் சுமந்து சென்று வெற்றிபெற வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினேன். ஆனால் உண்மையை கூறுவதென்றால் ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றி பெறமாட்டார். அவர் தோல்வியை தழுவியதும் ரணில் விக்ரமசிங்க கட்சியினரைப் பார்த்து நீங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தோற்றுவிட்டார்.  எனவே மீண்டும் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத்தான் உள்ளது என்று தலைவர் பதவியில் இருந்து கட்சியை தொடர்ந்து நடத்திச் செல்வார்.

அவரால் நியமிக்கப்பட்ட செயற்குழுவும் அதனை ஆமோதிக்கும். இதன் பின் 2017 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வரும்போது அதில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனுமதி கிடையாது. எனவே 2017 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கனவு காண்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த திறமைசாலி, முக்கியஸ்தர்கள் பலர் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறினர். ரணில் விக்கிரமசிங்கவை கட்சியில் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தவர் சிரிசேன குரே, ஆனால் அவர் தான் கட்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டார். சரத் அமுனுகம, நந்தா மத்தியூ, விஜேபால மெண்டிஸ் போன்ற அனுபவசாலிகளும் வெளியேற்றப்பட்டனர். விஜேபால மெண்டிஸ் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருந்தவர். ஆனால் அவரும் கூட கட்சியில் நிலைத்திருக்க முடியவில்லை.

அதன் பிறகு நான் கட்சியில் இருந்த போது கரு ஜயசூரிய தலைமையில் 17 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்டனர். ஆனால் நான் அப்போதும் கட்சியிலேயே தொடர்ந்தேன். கட்சியை சரியான வழியில் கொண்டு செல்லலாம் என்ற நோக்கத்திலேயே நான் தொடர்ந்து கட்சியில் இருந்தேன். ஆனால் அவ்வாறு முடியாது என்று நிச்சயமாக தெரிந்ததை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நான் வெளியேறினேன்.

ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டின் மிகப் பெரிய கட்சி. 63 வருட பாரம்பரியத்தை கொண்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களினதும் பிரதிநிதிகளாகக் கொண்ட கட்சி. அக் கட்சியின் ஸ்தாபகர் முதல் இருந்து வந்த தலைவர்கள் திறமைசாலிகள்.

ஆனால் இப்போது அக்கட்சி அதன் பலத்தை இழந்து வருகிறது. இதற்கு கட்சியின் தலை மைத்துவமே காரணம். அக் கட்சிக்குள் இப்போது ஜனநாயகம் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி. எஸ். சேனநாயக்க முதல் விஜேதுங்க வரை கட்சியின் தலைவர் கட்சியின் வரு டாந்த மாநாட்டில் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் மூலமே தெரிவாவார். ஆனால் இப்போது அந்த நடைமுறை இல்லை. கட்சியில் தீர்மானங்களை எடுப்பது கட்சியின் செயற் குழுவாகும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்களே உள்ளனர். கட்சி யின் செயற் குழுவுக்கு ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே திறமையற்ற அனுபவமற்ற, தனது பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவர்களையே நியமிக்கிறார். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க கட்சியில் தனியொரு சர்வாதிகாரி போல் செயற்பட முடிகிறது.

இம்முறை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் போது கட்சியில் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் தலைவர் விக்கிரமசிங் கவை வெற்றி பெறும் வகையில் சந்தைப் படுத்த முடியாது என்று கூறிவந்தனர். ரணிலும் அதனை ஏற்றுக் கொண்டார். அதனால் இம்முறை கட்சியில் இருந்து போட்டியிடும் ஆற்றல் மிகுந்த ஒருவரை செயற்குழு தேர்வு செய்திருக்க வேண்டும்.

ஆனால் செயற்குழு அதற்கு மா¡றாகவே முடிவெடுத்தது. ஏனெனில் செயற்குழு ரணிலினால் நியமிக்கப்பட் டது. அவர் சொற்படி தான் நடக்கும். எனவே கட்சியில் ஜனநாயகம் அற்ற வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது தெளிவாகிறது.

மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதல் நோயாளி மரணம்

swine-flu-2.jpgமட்டக் களப்பு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் புதன்கிழமை மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானைச் சேர்ந்த பாக்கியராசா (45 வயது) என்பவர் கடந்த 27 ஆம் திகதி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவருடைய இரத்தம் களுத்துறையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இரத்த பரிசோதனை அறிக்கை மூலம் இவர் ஏ எச்1 என்1 என்ற வைரஸினால் பன்றிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். இறந்தவரின் உடல் பாதுகாப்பான முறையில் தனிமைப்

படுத்தப்பட்டது.இந்த உடல் பன்றிக்காய்ச்சலினால் இறந்தவரின் உடல்அடக்கம் செய்யப்படும் விதிமுறைக்கு அமைய உறவினர்களிடம் கையளிக்காது நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை,மட்டக்களப்பில் பன்றிக்காய்ச்சலால் ஒரு நோயாளி இறந்த நிலையில் மேலும் இந்த நோயாளர்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.இந்நோயிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதற்காக கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிடல், பதாகைகளை அமைத்து மக்களை தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெருமழை; வெள்ளம்; மக்கள் இடம்பெயர்வு – பரீட்சை நிலையங்களும் நீரில்

rain2.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் இடை விடாத அடைமழை காரணமாக கரையோரப் பிரதேச தாழ் நிலங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக 41800 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினால் அம்பாறை அரச அதிபர் காரியாலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6300 குடும்பங்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5150 குடும்பங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 4505 குடும்பங்களும, காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 3200 குடும்பங்களும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4500 குடும்பங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6100 குடும்பங்களும், பதியதலாவ பிரதேச செயலாளர் பிரிவில் 2700 குடும்பங்களும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 4750 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்பாறை மேலதிக அரச அதிபர் அசங்க அபயவர்த்தன தெரிவித்தார். தொடர்ந்து இம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் இடம்பெயரும் குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. பிரபல பாடசாலைகளான கல்முனை ஸாகிறாக் கல்லூரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, பொத்துவில் மத்திய கல்லூரி, சம்மாந்துறை, வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

இதன் காரணமாக க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு மேற்படி பரீட்சை மண்டபங்களாக பாடசாலைகளை பயன்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அதிபர்களும், மேற்பார்வையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின் உடனடியாக அரசியல் தீர்வு டில்லியில பசில்

basil-rajapaksa.jpgதமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றதும் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் வியாழக்கிழமை உறுதியளித்திருக்கிறது. அத்துடன் அரசியல் தீர்வுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களுக்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென டில்லிக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர் மட்டக்குழுவே இந்திய அரசுக்கு இந்த உறுதி மொழிகளை வழங்கியிருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை நேற்று வியாழக்கிழமை மாலை தெரிவித்தது.

அதேசமயம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சகல தமிழரும் ஜனவரி 10இல் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கைத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது. இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை சிறப்பாகவும் சுமுகமாகவும் இடம்பெற்றதாக இச்சந்திப்பின் பின்னர் நிருபர்களிடம் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

முகாம்களிலுள்ள தமிழர்கள் சகல ஜனநாயக உரிமைகளையும் கொண்டிருப்பதாகவும் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக கேட்கப்பட்டபோது பதிலளித்த பசில் ராஜபக்ஷ, “நாம் மிகவும் உறுதியான புரிந்துணர்வுடன் உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்த இலக்கு குறித்து கவனத்தில் எடுப்பதாக உறுதியளிக்கிறோம். அரசியல் தீர்வுக்குத் தேவையான சகல அரசியலமைப்பு ரீதியான திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நலன் சார்ந்த சகல விடயங்களிலும் இலங்கை இந்தியாவுடனேயே நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இலங்கை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அதேசமயம் இச்சந்திப்பின்போது, தனது பாதுகாப்பு தொடர்பான கவலைகள், அக்கறைகள் தொடர்பான விடயங்கள் எதனையும் இந்திய அரசாங்கம் எழுப்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என த.தே.கூ. முடிவு

tna.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கொழும்பில் கூடி முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்ந்த போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. தேர்தலை பகிஷ்கரித்தல், தனி வேட்பாளர் நிறுத்துதல், வாக்கு சீட்டை செல்லுபடியற்றதாக்குதல், யாராவது ஒரு வேட்பாளரை ஆதரித்தல், தீர்மானம் எடுக்கும் முடிவை மக்களிடமே விட்டு விடுவது உட்பட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் தேர்தல் பகிஷகரிப்பு, தனி வேட்பாளர் நிறுத்துதல்,வாக்கைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகிய யோசனைகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கைவிடப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்பு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுடன் பேச்சுவார்ததைகளை நடத்துவது என்றும் அதன் பின்னர் இத்தேர்தல் தொடர்பாக மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் முடிவெடுத்துள்ளனர்.

மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடுமா துருப்பிடித்த தமிழ்த் தேசியம். : யூட் ரட்ணசிங்கம்

Mahinda Rajaparksa and Sarath Fonsekaமீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல், தமிழ்பேசும் மக்கள் தம் வாக்குமூலம் பேசவேண்டிய நேரம், எதிர்த்தரப்பிலே இரண்டு இனவாத அரசியலின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல மக்களைக் கொன்று குவித்த இரு கொலைகாரர்கள்.

சிங்களத் தேசிய இனவாதத்துக்கும் தமிழ்த் தேசிய இனவாதத்துக்கும் இடையில் நடந்த கொடூரமான போரில் செத்து மடிந்தன ஏதுமறியா அப்பாவி உயிர்கள். அதை முன்னின்று நடாத்தியவர்களும் வேடிக்கை பார்த்தவர்களுமே இன்று களமாட காத்திருக்கின்ற காவல் தெய்வங்கள். ஜனநாயகம் தத்தெடுத்த தவப்புதல்வர்கள். இவர்கள் ஜனாதிபதியாக வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

1) இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2) இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இவர்கள் இருவரையும் தராசிலே போட்டால் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது. (பகுத்தறிவு இல்லாவிட்டாலும் அந்தமுள் தன் பண்பிலிருந்து மாறாது) களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில்லாது நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

போர்க்களத்திலே சந்தித்த பெரும் சவால்களையெல்லாம் முறியடித்து வெற்றி கொண்டவர் என்ற வீராப்புடன் சரத் பொன்சேகாவும், போர் சூழ்ந்த வேளையில் எத்தனையோ அரசியல் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு இந்தப் போரை வென்று முடித்தவர் என்று உரிமை கோரும் மகிந்தாவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் இரண்டாக பிரிந்து போகும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற வேளை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மீண்டுமொருமுறை களத்திற்காக காத்து நிற்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது வாக்கெடுப்புக்கு போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். (அதாவது 50% க்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் எந்த ஒரு நபரும் ஜனாதிபதியாக முடியாது. ஜனாதிபதியாக வேண்டுமாயின் 50%க்கு அதிகமான வாக்குகள் பெறவேண்டும்)

களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களுக்கு இன்று ஓர் தலைமை இல்லை. இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கூறு மக்களையும் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வாக்குகளை ஓரிடத்தில் குவிப்பார்களேயானால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு போகவேண்டிய நிலையை உருவாக்கும். அப்படியான நிலை உருவாகுமேயானால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் உலகத்திற்குமே ஓர் செய்தியைச் சொல்லும்.

அந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் தமது தரப்பின் அரசியல் கோஷங்களை முன் வைக்கக் கூடிய களநிலையைத் தோற்றுவிக்கும். ஓர் நிரந்தரமான தீர்வை நோக்கிய பேச்சை உருவாக்கக்கூடிய அரசியல் சூழலை உருவாக்கக்கூடும்.

இந்த அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் அரசியல் திராணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா? சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் அரசியல் திறனும் நேர்மையும் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் எதற்காக மீண்டும் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளை களத்திற்கு எடுத்து வருகிறார்கள்?

ஏன் இந்த தமிழ் அரசியல் சற்று வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கக் கூடாது? சம்பந்தனால் இதை செய்ய முடியாது என்று கண்டுகொண்டால் ஓர் மாற்று அரசியல் திட்டத்தை வகுப்பதுதானே ஓர் முஸ்லீம் பிரதிநிதியை நிறுத்தி அவரை ஆதரியுங்கள் என்று கேட்கலாம். ஓர் மலையக வேட்பாளரை கொண்டுவந்து நிறுத்தலாம். புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும்கூட இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிக்கலாம் அல்லது புலிகளை ஆதரிக்காத சிங்கள இடதுசாரியான சிறிதுங்க ஜெயசூரியவை ஆதரிக்கலாம்.  அதன்மூலம் அவர் கையைப் பலப்படுத்தலாம், சிங்கள மக்களின் முற்போக்கானவர்களின் ஆதரவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள இது உதவலாம்.

எதற்காக மீண்டுமொருமுறை தமிழர் வாழ்வை பாழ்படுத்துகின்ற அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள்? தமிழர் வாழ்வில்  எத்தனை தடவைகள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தன? தமிழர் வாழ்வை தமதாக்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தம் மக்களின் வாழ்வை வளப்படுத்த இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தினார்களா?

தழிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதன் வரலாறு காணாத அழிவு வரையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புலிகளின் தலைமை தலைவரின் சுயநலபோக்கினால் இப்படிக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடிப்பதிலும் வெளிநாட்டு சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதிலும் குறியாக இருந்தார்களே தவிர கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் ஸ்திரத்தையும் கொண்டிருக்கவில்லை.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை இன்றிருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டுசெல்ல இந்தத் தேர்தல் உதவுமா என்று பார்ப்பதும் அப்படி இருக்குமாயின் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தவறுவது தனது சுயநலம் கருதி பிரபாகரன் போராட்டத்தைச் சிதைத்தற்கு ஒப்பாகும்.

ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாமா? அப்படியாயின் அது எவ்வாறு என்பதை சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தமக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு தவறவிட்டு பழியை எதிரியின் மீது சுமத்துவதால் என்ன பயன்?

சர்வதேசம் இன்று இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற வேளை ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுமேயானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோஷத்தை முன்வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இது அமைந்துவிடக்கூடும்.

உலகம் முழுவதும் மாவீரர்தினம் கொண்டாடி மகிழ்வதைவிட உருப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்வதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

இன்று தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை விட அதிகமானவற்றைத் தருவதாக முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்ற நேரம், தேர்தலின் வெற்றி யாருக்கு என்று தெரியாது இடைநடுவில் நின்றுபோகுமேயானால் அதன்பின் ஏற்படும் பேச்சுவார்த்தை மேசையில் பதின்மூன்று என்ன பதினைந்தே தருவோம் என்று கூறுகின்ற நிலையை உருவாக்கும் காலம் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

அந்த நிலையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளை உடனடியாக தொடங்க வேண்டிய காலத்தில் இன்று நாம் உள்ளோம். 35 ஆண்டு காலம் புஜத்தை நம்பி அரசியல் செய்த நாம் இனியாவது புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அந்த மக்களுக்கு ஓர் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படுவோம்.

இந்த தேர்தலைத் தவறவிட்டால் மீண்டும் 6 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 60 ஆண்டு காலம் இப்படியே காத்திருந்து காத்திருந்து கழிந்தது.

கடந்த 60 ஆண்டு காலம் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் வைக்கோல் போரிலே படுத்திருக்கும் நன்றியுள்ள மிருகம் போல் நடந்து கொண்டார்கள். அதே அரசியலை அழியவிடாது பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக சிலர் இப்போதும் செயல்படுகிறார்கள்.

செயல்படுவது ஒன்றும் தப்பில்லை, இவர்களால் உருப்படியான எதையாவது தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதுதான் அன்றும் இன்றும் இவர்கள் முன் விடைதேடி விரிந்து கிடக்கும் வினா.
 
தனிமனிதனில்  அரசியலைப் பார்ப்பதும் பின் தனி மனிதனை பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதுமாக தமிழ் அரசியல் நகர்ந்தது கடந்த காலங்களில். இப்போதும் இராணுவத் தளபதியைக் கொண்டுவந்து மகிந்தாவை பழிவாங்க வேண்டுமென்று பேச்சுத் தொடங்கிவிட்டது.

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் அரசாட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு முழுநாடே புத்தமயமாகும் என்று தெரிந்தும் கூட ஒரு தனி மனிதனை பழிவாங்கும் அரசியலுக்காக அலுவல் பார்க்கிறார்கள்.

“எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்று அதற்கும் ஒரு விளக்கம். இம்முறையும் தமிழர் வாழ்வு சுடு சட்டியிலே இருந்து துள்ளி அடுப்பிலே வீழ்ந்த கதையாகவே முடியும். 

கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

Tilko_Property_Servicesகிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் என்று அறியப்பட்ட திலகராஜா தவராஜா யாழ் நகரின் மையப்பகுதியில் 340 பேர்ச் நிலத்தில் ஹொட்டல் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். Board of Investment – BOI of Sri lanka  திலகராஜா தவராஜா முகாமைத்துவ இயக்குனராக உள்ள Tilko Jaffna City Hotels (Private) Limitedக்கு அந்த அனுமதியை வழங்கி உள்ளது.BOI யின் சார்பில் அதன் தலைவர் தமிக்க பெரேரா கையொப்பமிட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளார். திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் உள்ள ரில்கோ புரப்பட்டி சேர்வீஸ், பிரியா உணவகம் ஆகியவற்றின் உரைமையாளர். 

திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் எஸ்டேட் ஏஜென்ட்களை நிறுவி தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையிலேயே முதலீடுகளை ஆரம்பித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பை வழங்குபவர்கள் அவர்களுடைய நிதிப் பங்களிப்பிற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் திலகராஜா தவராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டவர். ‘அப்படத்தை தனது பொக்கற்றினுள் வைத்து சுற்றத்தவர்களுக்குக் காட்டுவதில் பெருமைப்பட்டுக் கொண்டவர்’ என அப்படத்தை பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ் நகரத்தின் மையத்தில் அமையவிருக்கும் இந்த உல்லாசவிடுதி 33 அறைகளையும் இரு கொட்டேஜ்களையும் கொண்டிருக்கும் என்றும் உல்லாசப் பயணிகளுக்கு சொகுசான தங்குமிடத்தை வழங்கும் என்றும் திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார். இந்த உல்லாச விடுதியில் உணவகம், உடற்பயிற்சிக்கான இடம், மாநாடுகளை மேற்கொள்வதற்கான இடம் என்பனவும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொகுசான தங்குமிடங்களுக்கு பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த உல்லாச விடுதி பெரும்பாலும் வர்த்தக சமூகத்தையும் உல்லாசப் பயணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் கருத்தில் வைத்து அமைக்கப்படுவதாக திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார்.

Tilko_Property_Servicesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான முதலீட்டில் ஆணிவேர் படத்திற்கான முதலிட்டையும் திலகராஜா தவராஜா செய்திருந்ததாகவும் ஆனால் அதில் அவரது நிறுவனப் பெயரைப் போட தமிழீழ விடுதலைப் புவிகள் விரும்பியிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அதேசமயம் மற்றுமொரு படத்தில் தயாரிப்பாளராக இவரது நிறுவனத்தை போடுவதற்கு சம்மதித்ததாகவும் அப்படம் பூர்த்தியாக முன்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலைச் சந்தித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் நிர்மாண வேலைகள் 2010 பெப்ரவரியில் திறந்த வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் முதலீடுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திலகராஜா தவராஜா முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் – ஓர் அறிமுகம் : என் செல்வராஜா

ETDRC_Logoஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும்
(European Tamil Documentation and Research Centre – ETDRC)

தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்த போதும் கணிசமான தொகையில் தமிழர்கள் பரந்துள்ள நாடுகள்:
01 – இந்தியா 02 – இலங்கை 03 – மலேசியா 04 – சிங்கப்பூர் 05 – அவுஸ்திரேலியா 06 – தென் ஆபிரிக்கா 07 – பிரித்தானியா 08 – பிரான்ஸ் 09 – ஜேர்மனி 10 – சுவிஸ்லாந்து 11 – இத்தாலி 12 – நோர்வே 13 – சுவிடன் 15 – அமெரிக்கா 14 – கனடா

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவியல் வளங்கள்:
1. பல்கலைக் கழகம்
 1.1 SOAS : School of Oriental and African Studies
 1.2 ஒக்ஸ்போர்ட் – கேம்பிரிட்ஜ் நூலகங்களின் தெற்காசியப் பிரிவு

2. பொது நூலகங்கள்
 2.1 பிரித்தானிய நூலகம் (British Library)
 2.2 லண்டன் உள்ளுராட்சி சபை நூலகங்கள்

3. சிறப்பு நூலகங்கள்
 3.1 தமிழர் தகவல் நடுவம் – லண்டன் (அரசியல் மற்றும் சமூகவியல் துறை)
 3.2 உலகத் தமிழர் நூலகம் (ஒன்ராரியோ, கனடா)

4. தனியார் நூல் சேகரிப்புகள்
 4.1 முல்லை அமுதனின் சேகரிப்புகள்
 4.2 என் செல்வராஜாவின் சேகரிப்புகள்
 4.3 இன்னும் பலர் …..

தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தகவல் வளங்களையும் இந்த நூலகங்கள் கொண்டிருக்கின்றனவா ? 
தமிழ்ச் சமூகத்திற்கான இந்த அறிவியல் வளங்களை ஒரு ஆய்வாளர் எளிதில் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழரல்லாத ஒரு ஆய்வாளரால் தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு ஆய்வை மேற்கொள்ள இந்நூலகங்கள் போதிய பின்புலத்தை கொண்டுள்ளனவா?

இல்லை!!!

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழரின் சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார, வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் எந்தவொரு தமிழ் அல்லது தமிழரல்லாத ஆய்வாளருக்கும் தேவையான தகவல் வளங்களையும் அத்தகவல்களைப் பெறுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவதற்கு தமிழர்களின் வாழ்வியல் பின்புலத்தில் அமைக்கப்பட்ட அறிவுசார் தகவல் களஞ்சியங்களே பொருத்தமானவையாகும்.

இந்த எண்ணக்கருவில் பிறந்ததே ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC) ஆகும்.

நோக்கங்கள்:

* தமிழ், தமிழர் தொடர்பான நூல்களையும் ஆவணங்களையும் ஆய்வேடுகளையும் ஒளி, ஒலிப் பதிவுகளையும் சேகரித்து பாதுகாத்தல்.

* தமிழ், தமிழர் தொடர்பான ஆய்வுகளுக்குத் தேவையான மூலாதாரங்களை அடையாளம் கண்டு ஆய்வாளருக்கு வழிகாட்டுதல்.

* இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களுக்கான காப்பகமாக செயற்படுதல்.
 
* சர்வதேச ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பினை மேற்கொண்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல்.

* சர்வதேச பல்கலைக்கழக நூலகங்களின் தமிழியல் பிரிவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி நூலக வளங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

செயற்பாடுகள்:

இதன் அடிப்படையில்
* ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் (European Tamil Documentation and Research Centre – ETDRC)  என்ற அறிவியல் நிறுவனம் Charity Commissionஇன் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பதிவிலக்கம் : 1127365

* தற்போது ETDRC தற்காலிகமாக 48 Hallwicks Road, Luton, LU2 9BHஇல் இயங்குகிறது.

* நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தனிப்பட்ட சேகரிப்பான 3000 நூல்களுடன் ETDRC தற்போது இயங்குகிறது. நிர்வாகக் கட்டட வசதி ஏற்பட்டதும் மேலும் பலர் தங்களின் தனிப்பட்ட சேகரிப்புகளை வழங்குவதற்கு முன் வந்து உள்ளனர்.

* மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தற்போது ETDRCஇன் சேவைகள் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எம்முள் எழும் சில வினாக்கள்:

இன்றைய போர்க்காலச் சூழலில் இது அவசியமா?
முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழர்களின் அடையாளம் இப்பொழுது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழர் பற்றிய வாழ்வியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை அரசியல் மற்றும் கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் சேகரித்து பாதுகாப்பதும், அதை தமிழர்களும் தமிழர்கள் அல்லாதவர்களும் அறிவியல் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழர்களுக்கான ஆவணக் காப்பகம் தாயக மண்ணில் அல்லவா உருவாக்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் எதற்கு?
1981ல் யாழ்ப்பாண நூலகமும் பின்னர் ஹாட்லி கல்லூரி நூலகமும் எரியூட்டப்பட்டதன் பின்னர் அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழர்களுக்கான ஒரு ஆவணக் காப்பகத்தை இலங்கைக்கு வெளியே உருவாக்குவது அவசியமானது.

தாயகத்தில் ஏற்கனவே தேசிய நூலகமும் பிராந்திய பொது நூலகங்களும் இயங்கி வந்த போதிலும் வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு அவற்றை இலகுவாகப் பயன்படுத்த எவ்வித வசதியும் இல்லை.

3.2 மில்லியன் இலங்கைத் தமிழர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிதும் இவர்களின் அறிவியல் தேவைகளுக்குமான ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமும் மேற்கு நாடொன்றில் அவசியம். அது உலகின் தலைநகரான லண்டனில் அமைவது மிகவும் பொருத்தமானது.

புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறைக்கு தமிழ் தெரியாத நிலையில் இந்த தமிழ் நூலகம் அவசியமா?
முதலில் ETDRC ஒரு பொதுநூலகம் அல்ல. அது தமிழ் நூலகமும் அல்ல. தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழர்களுக்கும் தமிழர் அல்லாதவர்களுக்குமான ஒரு ஆய்வு நிறுவனம்.

இரண்டாம் தலைமுறையினருக்கு கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. எதிர்காலத்தில் தமது வேர்களை தேட முற்படும் இத்தலைமுறையினருக்கும் இவ்வாறான காப்பகங்கள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இந்த அறிவியல் நோக்கம் கொண்ட அமைப்பு தழைத்து வளர்வதற்கு உங்கள் உதவி முக்கியமானது.

சிறுதுளி. பெரு வெள்ளம்!

நிறுவனத்தின் சேகரிப்பினை வளர்த்தெடுக்க உங்களால் முடிந்த வரையில் நூல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்!
மாதம் ஒர் சிறு தொகையை ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கினூடாக சென்றடைவதற்கான ஒர் ஒழுங்கை ஏற்படுத்துங்கள்!

Bank  :  Abbey
Account Name :  ETDRC
Sort Code :  09-01-27
Account No :  24459051

நிறுவனத்தின் நிதிவளம் செழிப்பின் தனியானதொரு கட்டிடத்தில் விரைவிலேயே செயற்பட வாய்ப்பு ஏற்படும்.

எதிர்காலத்தில் உங்கள் சந்ததியினர் எமது தமிழ் வேர்கள் பற்றி அறிய வேண்டாமா ?
புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழர் வாழ்வியல், வரலாறு, கலாச்சாரம் பற்றிய அறிவியல் தகவல்களை பன்னாட்டவரும் அறிய வழிவகை செய்ய வேண்டாமா ?
முடிவு உங்கள் கைகளில்.
சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!

நன்றி!!!

._._._._._._.

ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனமும் ஆவணக்காப்பகமும் நடாத்தும் விருந்துபசார நிகழ்வு டிசம்பர் 12ல் நடைபெறவுள்ளது. ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்தினதும் ஆவணக் காப்பகத்தினதும் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கான உங்கள் ஆதரவை வழங்குவதன் மூலம் ஐரோப்பியத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் ஆவணக் காப்பகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.

நிகழ்வு விபரம்:
Doors Open – 6:30 pm till late

32 Raliway Approach, Harrow Middlesex HA3 5AA

Contact: N Selvarajah : 07817 402 704 or 01582 703 786