எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர்; சட்ட மா அதிபர் தலைமையிலான குழு ஜெனீவா பயணம்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது.

ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் 13 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றவில்லை. தேர்தல் பணிகள் காரணமாகவே அவர் ஜெனீவா செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத் தொடரின்போது இலங்கையில் மனித உரிமை மறுக்கப் படுவதாக எந்தக் கருத்தும் தெரிவிக் கப்பட்டால் அமைச்சருக்கு பதிலாக சட்ட மா அதிபரும் அவரது குழுவினரும் உரிய வகையில் பதிலளிப்பார்கள் என்று மனித உரிமைகள் அமைச்சு வட்டாரம் கூறியுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை தேர்தல் பணிகளில் சுமார் 3 லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் அதிகம்

படகில் தீ: கடலில் தத்தளித்த 12 வெளிநாட்டவர் மீட்பு

படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காலி கடற்பரப்பில் தத்தளித்த 12 வெளி நாட்டவர்களை காலி கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இந்தோனேசியாவுக்குச் சொந்தமான மேற்படி படகில் இலங்கைக் கடலில் வைத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

படகிலிருந்தவர்கள் கடலில் தத்தளிப்பதை அவதானித்த காலி மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்க ளிடையே ஒரு தாய்லாந்து நாட்டவரும் 11 இந்தோனேசிய நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (2) காலி துறைமுக பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆசிரிய மாணவர்கள் வினாப்பத்திரங்களைத் திருடல் – கல்வியியற் கல்லூரிகளின் பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைப்பு

teacher.jpgதேசிய கல்வியியற் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு பயிற்சிப் பெற்று வெளியேறியவர்களுக்கு நேற்று முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம் பெறவிருந்த இறுதிப்பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள 17 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நேற்று முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை எழுத்துப்பரீட்சையும் 6 ஆம் திகதி ஏழாம் திகதிகளில் செயன்முறைப்பரீட்சைகளும் நடைபெறவிருந்தன. இந்நிலையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப மேற்படி பரீட்சைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 

பண்டாரவளை கல்வியியற் கல்லூரியிலிருந்த வினாத்தாள் பொதிகளிலிருந்து ஒவ்வொரு வினாத்தாள்கள் இனந்தெரியாதோரால் எடுக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இவ்வாறு பரீட்சை பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது விடயமாக 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது – ஜனாதிபதி

mahindaநாட்டில் என்ன தான் அபிவிருத்தி இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கை தரமும், நற்பண்புகளும் மேம்படாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்தப் பயனுமே இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலையில் பெல்மதுல்லையில் தெரிவித்தார். பெல்மதுல்ல ரஜமஹா விகாரையில், நடைபெற்ற அறநெறிச் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வைபவத்தில் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இந்த விகாரைக்கு நான் தொழில் அமைச்சராக இருந்தபோது முதலாவதாக இங்கு வந்தேன். அப்போது இங்கு தொழிற் பயிற்சி நிலையமொன்றையும் திறந்து வைத்தேன். அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயமும் வந்து சென்றேன். இப்பகுதிக்கும் எமக்கும் நீண்ட காலமாக நல்ல தொடர்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் எனது வெற்றிக்காக தேரர்கள் பாரிய பங்களிப்பும் செய்திருக்கின்றார்கள்.

இந்த நாடு அச்சுறுத்தல்களுக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெளத்த தேரர்கள் முன்வந்து நாட்டை அந்த அச்சுறுத்தல்களிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இது வரலாறாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை விபரிக்கவே முடியாது. நாம் ஜனநாயகத்தையும் பாதுகாப்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின் றோம். எம்மிடம் வஞ்சம் தீர்க்கும் அரசியல் கிடையாது.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதேநேரம் சுமார் முப்பது வருடங்கள் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி துண்டாடப்பட்டிரு ந்த நாட்டை மீளவும் ஒன்றுபடுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எமது பதவிக் காலத்தில் இங்கு ஆரம்பிக்க ப்பட்டிருக்கின்றன.

வீதி அபிவிருத்தி, மின்னுற்பத்தித் திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி என பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் நாட்டில் என்ன தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் மூலம் மக்கள் மேம்பாடு அடையாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்த பயனுமே இல்லை. மக்களின் உள்ளங்கள் மேம்பட வேண்டும். அது அவர்களை சிறந்த நற்பண்பாளர்களாக மேம்படச் செய்யும் அத்தோடு மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சி அடையும். இவை எதிர்கால சமுதாயத்திற்குச் சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

மக்களின் உள்ளங்களை மேம்படுத்தவென தேரர்கள் பாரிய பங்களிப்பு செய்கிறார்கள். இருப்பினும் இந்நாட்டினருக்கும், வெளிநாட்டவருக்கும் பெளத்த மதம் குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவை நிலவுகின்றது. இதனை அவரவர் மொழிகளிலேயே செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு மொழிகளின் அறிவு அவசியம். அதனால் வெளிநாட்டு மொழி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பிரிவெனா கல்வி பெரிதும் உதவும். இதனூடாக பெளத்த மதத்தை பரப்ப முடியும். இத்திட்டத்திற்கு நாம் பங்களிப்பு செய்யத் தயாராகவுள்ளோம்.

அரசியல்வாதிகள் எப்போதும் முன்னு தாரணம் மிக்கவர்களாகத் திகழவேண்டும். அவர்கள் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டுக்காகப் பாடுபடவேண்டும். அந்த வகையில் இரத்தினபுரி மாணிக்கக் கல் நிறைந்த பூமி என்றாலும், இங்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் சீவிக்கின்றார்கள்.

இவ்வாறான மக்கள் வாழும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளப்பத்தப்பட்டுள்ளன. இம்மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேர்தலை காரணம் காட்டி மீள்குடியேற்றம் தாமதிக்கப்படாது – எஞ்சிய 70,000 பேரும் விரைவில் மீள் குடியேற்றம்

Rehabilitation_Wanniபாராளு மன்றத் தேர்தல் காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது எனவும், எஞ்சியுள்ள சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களையும் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்தது. போர்ச் சூழல் காரணமாக சுமார் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமானதோடு மீள்குடியேற்றப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். இந்த மாதத்திலும் பெரும்பாலானவர்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு, அவர்கள் வசித்த இடங்களில் உள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்க ப்படுவதாகவும் அந்த உயரதிகாரி கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவ டைந்து வருவதோடு, ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. மிதிவெடி அற்றப்படும் பணிகள் பூர்த்தியடைந்தவுடன் அப்பகுதிகளில் மக்கள் துரிதமாக மீள்குடியேற்றப்பட்டு வருவதோடு, எதிர்வரும் வாரங்களில் ஏ-9 வீதியின் கிழக்கு பகுதியில் மீள்குடி யேற்றங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட த்தில் அடுத்த மாத முதற்பகுதியில் மக்கள் மீள்குடி யேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக மக்கள் மீள்குடியேற்றும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவோ தாமதிக்க ப்படவோ மாட்டாது என அமைச்சு குறிப்பிட்டது.

கண்டிக்கு நான் ஒன்றும் புதிதானவன் அல்ல- மனோ கணேசன்

mano-ganesan.jpgகண்டி மாவட்டத்தில் நான் போட்டியிட இருப்பதை கண்டு ஜாதிக ஹெல உருமயவும், எமது சொந்த இனத்தை சார்ந்த சில தமிழ் ஹெல உருமய காரர்களும் எனக்கு தடைபோட நினைக்கின்றார்கள். கண்டிக்கு நான் புதிதாக வரவில்லை. கண்டியிலிருந்தே கொழும்புக்குச் சென்று அங்கே எமது மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்திவிட்டு இன்று மீண்டும் எனது கண்டிக்கு திரும்பி வருகின்றேன் என்பதை இந்த நண்பர்கள் தேடி அறிந்துக்கொள்ளவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் கண்டிக்கு வரக்கூடாது என்று கூறி ஜாதிக ஹெல உருமய நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

எனது தந்தைவழி சொந்த ஊர் கண்டி. கண்டி மாநகரத்தையொட்டிய அம்பிட்டிய கிராமத்திலேயே எனது தந்தை பிறந்திருந்தார். நான் கல்விக்கற்றது கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலாகும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர்வரை எனது இளமைக்காலம் முழுவதிலும் கண்டி மாநகரத்திலேயே வாழ்ந்திருக்கின்றேன். இதுவே கண்டி மாவட்டத்தில் நான் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதன் பிரதான பின்னணி காரணம் ஆகும்.

கண்டி மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்ஸிம் மக்களும், சிங்கள சகோதர்களும் எனது சொந்த மக்களாகும். எனது மக்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டே நான் இத்தீர்மானத்திற்கு வந்திருக்கின்றேன். எனவே எனக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்து பொய் பிரசார கருத்துகளை தெரிவித்து எனக்கு தடைபோடுவதற்கு எவராலும் முடியாது.

1994ம் ஆண்டிற்கு பிறகு ஒர் தமிழர்கூட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை. கடந்த 2000, 2001, 2004 ஆகிய வருடங்களில் நடைபெற்ற மூன்று பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழர்கள் தோல்வியடைந்தார்கள். சில தரப்பினர் உள்ளேயும், வெளியேயும் இருந்தப்படி தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சதி செய்து தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

கடந்த பாராளுமன்றத்திலும் கண்டி மாவட்டத்தின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களிலே 9 பேர் சகோதர சிங்கள இனத்தையும், 3 பேர் சகோதர முஸ்லிம் இனத்தையம் பிரதிநிதித்துவம் செய்தார்கள். ஏன் எங்கள் இனத்திற்கு நம்மவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்குரிய ஜனநாயக உரிமை இல்லையா? கண்டி மாட்ட தமிழ் மக்களின் துணையுடன் சகோதர சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் ஏழாவது பாராளுமன்றத்திலே கண்டி மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுவதன் மூலம் எமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நான் மீட்டெடுத்து நிலை நாட்டியே தீருவேன். 

சமையல் எரிவாயு மீதான சகல வரிகளும் நீக்கம் – விலை அதிகரிப்பதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை

bandula.jpgஉலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதும் விலையதி கரிப்பின்றி நடைமுறை விலையிலேயே மக்களுக்கு தொடர்ந்தும் அதனை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

செல், லாஃப்  எரிவாயு நிறுவனங்கள் மார்ச் முதலாம் திகதி முதல் விலையதிகரிப்பைக் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலையதிகரிப்பைத் தவிர்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றி விளக்கிய அமைச்சர்; நடைமுறை விலை மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடருமெனவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு மெனவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் தொடர்பில் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மல்சூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்து விளங்குக்கையில்:-

கடந்த 2009 நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு ஷெல், லாஃப் எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியிருந்தன. எனினும் அச்சபையானது அதற்கான அனுமதியை வழங்க மறுத்துவிட்டது.

தற்போது உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதால் மார்ச் முதலாம் திகதி முதல் இந்நிறுவனங் கள் விலையதிகரிப்புக்கான வேண்டுகோளை மீண்டும் முன்வைத்தன. இதன்படி ஷெல் சமையல் எரிவாயுவின் விலை 224 ரூபாவாலும், லாஃப் சமையல் எரிவாயுவின் விரை 198 ரூபாவாலும் அதிகரிப்பு செய்யப்படவிருந்தன.

இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மேற்படி எரிவாயு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி மக்கள் மீது ஏற்படவிருந்த சுமைகளை இலகுவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எரிவாயுவுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

நடைமுறையில் ஷெல் எரிவாயு சிலிண்டரொன்று 1550 ரூபாவாகவும் லாஃப் எரிவாயு சிலிண்டரொன்று 1422 ரூபாவாகவும் விற்பனையில் உள்ளன. அரசாங்கம் ஒருகிலோ சமையல் எரிவாயுவிற்கு 8 ரூபா 70 சதத்தை வரியாக அறவிட்டு வந்தது.

ஷெல் எரிவாயு நிறுவனமானது கடந்த நவம்பர் மாதத்தில் 195 ரூபாவாலும் 2010 ஜனவரியில் 180 ரூபாவாலும் விலையதிகரிப்புச் செய்வதற்கான அனுமதியினைக் கோரியிருந்தது. அத்துடன் மார்ச் முதலாம் திகதி முதல் 220 ரூபாவால் எரிவாயுவின் விலையினை அதிகரிக்கவும் அனுமதி கோரியிருந்தது.

எனினும் அரசாங்கம் கடந்த ஆறுமாத காலங்களில் எரிவாயு நிறுவனங் களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி விலையதிகரிப்பைத் தவரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த ஆறுமாத காலத்திலும் நிலையான விலையொன்றைத் தக்கவைப்பதற்கும் வழிவகை செய்தது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் தற்போது அரிசி, மரக்கறி மற்றும் மீனின் விலை குறைந்து வருகின்றன எனக் குறிப்பிட்ட அமைச்சர்; வடக்கிலிருந்தும் பொருட்கள் வருவதால் எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் குறைவடையுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தொடர்ச்சியாகத் தமது விலையதிகரிபுக்கான வேண்டுகோளுக்கு அதிகார சபை அங்கீகாரமளிக்காத காரண த்தால் ஷெல் எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் 1.4 பில்லியன் ரூபாவை நட்டஈடாகக் கோரியுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதுடன் எதிர்வரும் 26ம் திகதி இது தொடர்பில் விளக்கமளிக்கவுமுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணிவெடியகற்றல்; சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் 50 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள், கூடாரங்கள் மற்றும் உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

நேற்றுக் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் சீனத் தூதுவர் யென் சிங் ருவென் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இந்த இயந்திர உபகரணங்களை உத்தி யோகபூர்வமாகக் கையளித்தார்.

அத்துடன் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 6252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் அதனோடு சம்பந்த ப்பட்ட உபகரணங்களையும் நேற்று வழங்கியதுடன் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதனையும் சீனத் தூதுவரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டார். இவற்றை சீனக்குடியரசு மக்கள் இலங்கையில் மீள் குடியேற்றப்படும் மக்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர்.

ஜெனரல் சரத் தடுத்து வைப்பு சட்டவிரோதமானது : சரத் என்.சில்வா

sarath.jpgஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு குற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி கொழும்பு 7 இல் உள்ள அவரது அலுவலகத்தில் இணையத்தளம் ஒன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இணையத்தளத்தில் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரும் மக்கள் கோரிக்கைகள் சேகரிக்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முன்னாள் நீதியரசர்இ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கருத்துத் தெரிவித்த சரத் என். சில்வா  “இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களை இராணுவச் சட்டத்துக்குள் தண்டனை வழங்க முற்படுவது இதற்கு முன் நாட்டில் எப்போதும் நடந்ததில்லை” என்றும் தெரிவித்தார்.