எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நீருக்கடியில் ஓடும் மூன்று ஸ்கூட்டர்கள் புதுக்குடியிருப்பில் படையினரால் கண்டெடுப்பு

ltte_underwater_vehicle.pngநீருக்கடியில் ஓடக்கூடிய புலிகளின் மூன்று ஸ்கூட்டர்களை (அண்டர் வோட்டர் ஸ்கூட்டர்கள்) படையினர் நேற்று வன்னியிலிருந்து மீட்டிருப்பதாக 58 ஆம் படையணியின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

புதுக்குடியிருப்புக்கு வடக்கே தமது நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் அம்பலவன் பொக்கணை என்ற கிராமத்திலிருந்தே நீருக்கடியில் ஓடக் கூடிய மூன்று ஸ்கூட்டர்களுடன் பல பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  இந்த ஸ்கூட்டரில் ஒன்று ஒருவர் பயணிக்கக் கூடியது. இன்னுமொன்று இருவர் பயணிக்கக் கூடியது. மற்றையது தேவைக்கேற்ப விரித்து ஒடுக்கக் கூடியது. அதில் மூவரும் பயணிக்கலாம். ஒருவரும் பயணிக்கலாமெனவும் பிரிகேடியர் சவேந் திர சில்வா தெரிவித்தார். புலிகளின் மறைவிடமொன்றிலிருந்து இந்த ஸ்கூட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 58 ஆம் படையினர் இவற்றுடன் 25 ஒட்சிசன் தாங்கிகள், நீருக்கடியில் உபயோகிக்கக் கூடிய இரண்டு தொலைநோக்கி, ஆயுதங்களை வைக்கக்கூடிய ஜக்கற்றுக்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் 20 அங்கிகள், கடற்புலிகளின் சீருடைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்றுக் காலை இடம் பெற்ற மோதல்களில் புலிகளின் முக்கியத் தலைவர்களான அன்பு, சுரேஷ் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார கூறினார். இவர்கள் புலிகள் இயக்கத்தில் விசேட தேர்ச்சி பெற்றவர்களெனவும் அவர் தெரிவித்தார்.

புலிகள் வைத்திருப்பது கேடயம்- ராணுவம் வைத்திருப்பது கத்தி : விஜயகாந்த்

vijayagath1.jpgஇலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் விஜயகாந்த் பேசியதாவது: 

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகிறது. நம் மக்கள் இலங்கையில் தினம் தினம் செத்து மடிகிறார்கள். அதனால் நமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல. இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சனையில் நாடகமாடி வருகிறார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவோ, ‘ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்’ என்று கூறுகிறார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும். விடுதலைப்புலிகள் வைத்திருப்பது கேடயம்தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கிறது.
 
கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.

அடுத்த நாட்டு பிரச்சனையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சனையில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். எங்களை பார்த்து தான் இப்போது மற்ற கட்சிகளும் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.

வரும் 24 ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது நம்முடைய போராட்டம் அவர்களுடைய செவிக்கு எட்டும் வகையில் அமைய வேண்டும். இருந்தாலும், தேமுதிக தொண்டர்கள் அனைவரும் ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். அதன் பின்னர் அவரது தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு அளித்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை; இரண்டாவது நாளாக இந்திய பாராளுமன்றில் எதிரொலிப்பு

india-parliament.jpgஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் (லோகசபை) நேற்று இரண்டாவது நாளாகவும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சபையை 45 நிமிடங்கள் இடைநிறுத்தி வைத்தார்.

மக்களவை அமர்வு பகல் 11 மணியளவில் ஆரம்பமானது. அச்சமயம் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் மறுப்புத் தெரிவிக்கவே அமளிஏற்பட்டது. இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த பா.ம.க., ம.தி.மு.க. எம்.பி.க்களும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பாரதியஜனதா, பகுஜன்சமாஜக் கட்சி உறுப்பினர்களும் ஆசனங்களை விட்டு எழுந்து சபா மண்டபத்தில் குழுமிநின்று கோஷம் எழுப்பினர். முதலில் உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயற்சிசெய்தார் சபாநாயகர். முடியாமல் போகவே கடுமையாக எச்சரித்துவிட்டு சபையை 12 மணிவரை இடைநிறுத்தி வைத்தார்.

பின்னர், சபை மீண்டும் கூடியபோது, இலங்கைப் பிரச்சினை குறித்து பிரணாப் தாக்கல் செய்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி பா.ம.க. வினர் குரல் எழுப்பினர் பிரணாப் அறிக்கை இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பேசியதற்கு அப்படியே எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் பிரணாப்பின் அறிக்கை ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகவும், பெறுப்பற்ற முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. பா.ம.க மற்றும் ம.தி.மு.க.வினர் லோக்சபாவுக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

காயமடைந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களுடன் முல்லைத்தீவிலிருந்து இன்று கப்பல் திருமலை வருகை

ship.jpgமுல்லைத் தீவிலிருந்து காயமடைந்த மேலும் ஒரு தொகுதி பொதுமக்களை ஏற்றிக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை தான் கப்பல் புறப்படும் என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் வழித்துணையுடன் இக்கப்பல் நேயாளர்களுடன் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவை நோக்கி கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே பெப்ரவரி, 11, 12, 16 ஆம் திகதிகளில் மூன்று தடவைகளில் 1,212 பொதுமக்கள் கப்பலில் செஞ்சிலுவைச்சங்கத்தினரால் கூட்டிவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் சிலர், கந்தளாய், தம்பலகமம், பொலநறுவை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். சிறிய காயங்களுக்குள்ளானவர்கள், ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருமலை ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையிட்ட மட்டு.ஆயர் வேதனை

batticolo1.jpgகடல் கோள் அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்குள்ளாகி காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமானதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்பு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“”பாதுகாப்புத் தரப்பின் விசேட அனுமதி பெற்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம். இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியன அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளியார் எவரும் பார்வையிடுவதற்கு அனுமதியில்லை. இந்நிலையிலேயே இந்த விசேட அனுமதியைப் பெற்று நாம் நோயாளர்களைப் பார்வையிட்டோம்.

காயமடைந்தவர்களைப் பொறுத்தவரை பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். சிலரது உடலினுள் இன்னமும் குண்டுகள் அகற்றப்படாமல் இருப்பதை எக்ஸ்ரே மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மக்களுக்கு இப்படியும் ஒரு மோசமான நிலை வந்து விட்டதே என்று வேதனையாக உள்ளது. ஏற்கெனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலையில் இட நெருக்கடி காரணமாக மெத்தைகள் போடப்பட்டு நோயாளிகள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையைச் சமாளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அங்கு எந்நேரத்திலும் தயார் நிலையிலேயே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. அவர்களுடைய உறவினர்களைப் பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.

தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரினாலும் அது உடனடியாக சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்திய வசதிகளும் ஏனைய வசதிகளும் அவர்களுக்குப் போதியளவு வழங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியர்கள், தாதிகள் உட்பட வைத்திய மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

படையினர் அம்பலவான்பொகனை நகருக்குள் நுளைந்துள்ளனர்

truck.jpgமுல்லைத் தீவு புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ள 58வது டிவிசன் படையினர் நேற்று(பெப்:19)அம்பலவான்பொக்கனை நகருக்குள் நுளைந்துள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவிக்கின்றது.

அம்பலவான்பொகனை நகருக்குள் நேற்று பிற்பகல் நுளைந்துள்ள படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் மீதிப்பகுதியை கைபற்றும் நோக்குடன் தாக்குதல்கள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
 

வன்னி மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா வருத்தம்

John_Holmes_UNஇலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமிடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று கவலை தெரிவித்திருக்கிறார்.

விசேட விஜயமாக புதன்கிழமை பின்னிரவு கொழும்பு வந்த சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று மதியம் இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கில் ஏற்பட்டுள்ள மனித நேய நெருக்கடிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சரும், ஐ. நா. பிரதி செயலாளர் நாயகமும் ஒன்றாக இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். ஊடவியலாளர்களிடம் கருத்துவெளியிட்ட சேர் ஹோம்ஸ், வடக்கில் மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா மிகவும் கவலையும், விசனமும் அடைந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலின் போது முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களின் நிலைமை குறித்தும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களின் நிலைமை குறித்தும் விசேட கவனம் செலுத்தினோம். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் ஐ. நா. தொடர்ந்தும் மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கும். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் கடல் மார்க்கமாக அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதையிட்டு நாம் பெரிதும் சந்தோஷப்படுகிறோம்.

அதேநேரம், வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவி, ஒத்துழை ப்புக்களை நல்குவதற்கு ஐ. நா. தயாராக விருக்கிறது. வட பகுதியை மீளக்கட்டி யெழுப்புவது என்பது இலேசான காரியமல்ல. அதனால் அரசாங்கத்துடன் இணைந்து அப்பகுதியை கட்டியெழுப்புவதற்கு ஐ. நா. திட்டமிட்டிருக்கிறது.

இதேவேளை முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்வதற்கு புலிகள் இயக்கத்தினர் இடமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறேன் என்றார்.

இச்சமயம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி செயலாளர் நாயகம், புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியவையாக இல்லை. ஆயினும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இராணுவ நடவடிக்கை முடிவுற்றதும் இடம்பெயர்ந்து ள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் துரிதப்படுத்தப்படுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது என்றார்.

அமைச்சர் ரோஹித போகெல்லாகம

இச்செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை பெரிதும் குறைந்துள்ளோம். புலிகள் இயக்கத்தினர் சிறுவர்களை  பயன்படுத்துகின்றனர். சுமார் எழுபதினாயிரம் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக தடுத்து வைத்துள்ளனர். அந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருவதைத் தடுத்து வருகின்றனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பாக ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன் என்றார்.

மக்கள் தொலைக்காட்சி மீது தடை விதிக்கப்படவில்லை – தகவல் திணைக்களத்தின் பணிப்பாளார்

makkaltv-1802.jpgதமிழகத் திலிருந்து செய்மதியூடாக உலகமெங்கும் ஒளிபரப்புச் செய்யப்படும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலங்கையில் தடை செய்யப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையிலும், அதன் இணையத் தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளார் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு எதிராக இலங்கையில் எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும், இவ்வாறான தகவல்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மக்கள் தொலைக்காட்சிக்கு பூரண தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதிவு செய்யப்பட்ட கேபிள் மற்றும் செய்மதி ஒளிபரப்பு நிறுவனங்கள் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சியை மீள் ஒளிபரப்புச் செய்வதில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டதாக கடந்த புதன் கிழமை ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சியை இலங்கையில் உள்ள பதிவு செய்யப்படாத செய்மதி அன்டனாக்களைப் பயன்படுத்துவோர் காணக்கூடியதாக அமைந்ததென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கோருவது போர்நிறுத்தமே—இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் பதில்

nadesanltte.jpgஇலங்கை யின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவ தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள், தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும், சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும், சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன், இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக்கு விளங்கும் என்றும் கூறினார்.

”எமது மக்கள் எங்களோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ தாக்குதல்கள் நடந்த சமயத்தில் மக்கள், விடுதலை புலிகளின் இன்ப துன்பங்களில் மட்டுமல்லாது போராட்டத்திலும் பங்குபெற்று வருகிறார்கள். அரசு பொய்யான பிரச்சாரத்தை செய்கிறது. சர்வதேச நிறுவனங்களோ ஒரு தலைப்பட்சமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன”, என்றார் நடேசன்.

ஐநா மன்ற ஊழியரை விடுதலைப்புலிகள் கட்டாயமாக ஆள்சேர்த்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, தமது அமைப்பு யாரையும் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பதில்லை என்றும், அதேசமயம் அரச படைகளின் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது பொதுமக்களின் சகலதரப்பாரும் தமது இயக்கத்தில் தாமாக முன்வந்து இணைவதாகவும், அப்படி அந்த ஊழியரும் இணைந்திருந்தால் தமது இயக்கம் அவரை இணைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

வெள்ளை மாளிகை முன் இன்று இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

white-house.jpgஇலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி அமெரிக்கா வாழ் இலங்கைத் தமிழர்கள் இன்று  வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தவுள்ளனர். “இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அழைப்பு’ என்ற அமைப்பே இந்தப் பேரணியையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச தொண்டர் அமைப்புகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் அரசால் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழர்கள் அங்கு திட்டமிட்ட ரீதியில் தாக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது தமிழ் மக்கள் கடும் ஷெல் தாக்குதலையும் விமானத் தாக்குதலையும் துப்பாக்கிச் சூடுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதன் மூலம் தினமும் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. வன்னியில் பெரும் உணவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக அமெரிக்கத் தமிழர்களும் அவர்களது நண்பர்களும் இன்று வாஷிங்டனில் கூடுவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது வன்னிப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள், உணவு வாகனத் தொடரணிகள் , மருந்துப் பொருட்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு செல்வதை இலங்கை அரசு முற்றாக மறுத்துள்ளதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இன்டியன் பத்திரிகை  தெரிவித்துள்ளது.