தமிழகத் திலிருந்து செய்மதியூடாக உலகமெங்கும் ஒளிபரப்புச் செய்யப்படும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலங்கையில் தடை செய்யப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையிலும், அதன் இணையத் தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளார் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி சேவைகளுக்கு எதிராக இலங்கையில் எவ்வித தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும், இவ்வாறான தகவல்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மக்கள் தொலைக்காட்சிக்கு பூரண தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதிவு செய்யப்பட்ட கேபிள் மற்றும் செய்மதி ஒளிபரப்பு நிறுவனங்கள் இலங்கையில் மக்கள் தொலைக்காட்சியை மீள் ஒளிபரப்புச் செய்வதில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டதாக கடந்த புதன் கிழமை ஒளிபரப்புச் செய்யப்பட்ட நிகழ்ச்சியை இலங்கையில் உள்ள பதிவு செய்யப்படாத செய்மதி அன்டனாக்களைப் பயன்படுத்துவோர் காணக்கூடியதாக அமைந்ததென அவர் தெரிவித்துள்ளார்.