வன்னி மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா வருத்தம்

John_Holmes_UNஇலங்கையின் வடபகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமிடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று கவலை தெரிவித்திருக்கிறார்.

விசேட விஜயமாக புதன்கிழமை பின்னிரவு கொழும்பு வந்த சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று மதியம் இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கில் ஏற்பட்டுள்ள மனித நேய நெருக்கடிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சரும், ஐ. நா. பிரதி செயலாளர் நாயகமும் ஒன்றாக இணைந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். ஊடவியலாளர்களிடம் கருத்துவெளியிட்ட சேர் ஹோம்ஸ், வடக்கில் மோதல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிப்படைவது குறித்து ஐ.நா மிகவும் கவலையும், விசனமும் அடைந்திருப்பதாகவும், இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இக்கலந்துரையாடலின் போது முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களின் நிலைமை குறித்தும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களின் நிலைமை குறித்தும் விசேட கவனம் செலுத்தினோம். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் ஐ. நா. தொடர்ந்தும் மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்கும். முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் கடல் மார்க்கமாக அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதையிட்டு நாம் பெரிதும் சந்தோஷப்படுகிறோம்.

அதேநேரம், வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திற்கு உதவி, ஒத்துழை ப்புக்களை நல்குவதற்கு ஐ. நா. தயாராக விருக்கிறது. வட பகுதியை மீளக்கட்டி யெழுப்புவது என்பது இலேசான காரியமல்ல. அதனால் அரசாங்கத்துடன் இணைந்து அப்பகுதியை கட்டியெழுப்புவதற்கு ஐ. நா. திட்டமிட்டிருக்கிறது.

இதேவேளை முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்வதற்கு புலிகள் இயக்கத்தினர் இடமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகிறேன் என்றார்.

இச்சமயம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி செயலாளர் நாயகம், புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் நம்பிக்கை தரக்கூடியவையாக இல்லை. ஆயினும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இராணுவ நடவடிக்கை முடிவுற்றதும் இடம்பெயர்ந்து ள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் துரிதப்படுத்தப்படுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது என்றார்.

அமைச்சர் ரோஹித போகெல்லாகம

இச்செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை பெரிதும் குறைந்துள்ளோம். புலிகள் இயக்கத்தினர் சிறுவர்களை  பயன்படுத்துகின்றனர். சுமார் எழுபதினாயிரம் மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாக தடுத்து வைத்துள்ளனர். அந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருவதைத் தடுத்து வருகின்றனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கும் முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களுக்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நிவாரண உதவிகள் தொடர்பாக ஐ. நா. வின் பிரதி செயலாளர் நாயகத்திற்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *