வெள்ளை மாளிகை முன் இன்று இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

white-house.jpgஇலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி அமெரிக்கா வாழ் இலங்கைத் தமிழர்கள் இன்று  வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தவுள்ளனர். “இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அழைப்பு’ என்ற அமைப்பே இந்தப் பேரணியையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையில் யுத்தம் நடைபெறும் பகுதியில் இடம்பெறும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து சர்வதேச தொண்டர் அமைப்புகள் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் அரசால் வெளியேற்றப்பட்ட பின்னர் தமிழர்கள் அங்கு திட்டமிட்ட ரீதியில் தாக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது தமிழ் மக்கள் கடும் ஷெல் தாக்குதலையும் விமானத் தாக்குதலையும் துப்பாக்கிச் சூடுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதன் மூலம் தினமும் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. வன்னியில் பெரும் உணவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்காக அமெரிக்கத் தமிழர்களும் அவர்களது நண்பர்களும் இன்று வாஷிங்டனில் கூடுவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது வன்னிப் பகுதிக்கு மனிதாபிமான உதவிகள், உணவு வாகனத் தொடரணிகள் , மருந்துப் பொருட்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அங்கு செல்வதை இலங்கை அரசு முற்றாக மறுத்துள்ளதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இன்டியன் பத்திரிகை  தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *