திருமலை ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையிட்ட மட்டு.ஆயர் வேதனை

batticolo1.jpgகடல் கோள் அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்குள்ளாகி காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமானதென மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கலாநிதி வண. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்பு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“”பாதுகாப்புத் தரப்பின் விசேட அனுமதி பெற்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம். இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியன அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளியார் எவரும் பார்வையிடுவதற்கு அனுமதியில்லை. இந்நிலையிலேயே இந்த விசேட அனுமதியைப் பெற்று நாம் நோயாளர்களைப் பார்வையிட்டோம்.

காயமடைந்தவர்களைப் பொறுத்தவரை பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். சிலரது உடலினுள் இன்னமும் குண்டுகள் அகற்றப்படாமல் இருப்பதை எக்ஸ்ரே மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது மக்களுக்கு இப்படியும் ஒரு மோசமான நிலை வந்து விட்டதே என்று வேதனையாக உள்ளது. ஏற்கெனவே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலையில் இட நெருக்கடி காரணமாக மெத்தைகள் போடப்பட்டு நோயாளிகள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலைமையைச் சமாளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அங்கு எந்நேரத்திலும் தயார் நிலையிலேயே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. அவர்களுடைய உறவினர்களைப் பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.

தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரினாலும் அது உடனடியாக சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. வைத்திய வசதிகளும் ஏனைய வசதிகளும் அவர்களுக்குப் போதியளவு வழங்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. வைத்தியர்கள், தாதிகள் உட்பட வைத்திய மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்த மக்களுக்கு கிறிஸ்தவ அமைப்புக்கள் முன்னின்று குரல் கொடுத்தால் பல நாடுகள் உதவ முன்வரும். அந்த உதவிகளினால் அம்மக்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் உறுப்புகளிளப்பிற்கும் வைத்திய உதவிகள் கிடைப்பதோடு மனநிம்மதியும் கிடைக்கும்.

    Reply