சிலம்டோக் மில்லியனர் – இயக்கம்: டேனிபோய்ல்
ஐந்து விமர்சகத் தேர்வு விருதுகள் நான்கு தங்கப் பூகோள விருதுகள், பாஃப்ரா விருதுகள் மற்றும் பத்து அக்கடமி விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கோ அல்லது சிறிதளவேனும் சில ஊக்கமளிக்கக் கூடிய கருத்துகள் கொண்டிருக்குமென நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலம்டோக் மில்லியனர், அதைப் பற்றிய அதீத விளம்பரங்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளின் பரிமாணத்தைத் தாண்ட முடியவில்லை. அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனச் சொல்லலாம்.
அதே வேளையில் இந்தியத் திரைப்பட ரசிகர்களையும் கவர்வதில் அது தோல்வியுற்று உள்ளது. உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 25 வீதமான இருக்கைகளே நிரம்பியிருந்ததாக ரைம்ஸ் மகசின் தெரிவித்திருந்தது. இந்திய மக்களுக்கு எப்போதுமே இவ்வகைப் பிரமாண்டமான கலைப் படைப்புகள் மீது சந்தேகமுண்டு. ஏனென்றால் இம்மாதிரியான கலைப் படைப்புகளைத் தயாரிப்பதன் முக்கிய குறிக்கோள் தங்களின் வறுமையை வியாபாரஞ் செய்து பணமாக்குவதே என்பதை அவர்கள் அறிவார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த அனில் கபூரின் வீட்டின் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதைத் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கைகளிலிருந்த அட்டைகள் பிரதிபலித்தன. அவற்றில் ‘வறுமை விற்பனைக்கல்ல” என்ற சுலோகம் எழுதியிருந்ததன் மூலமாக இதைப் பிரதிபலித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் சேரியும் சேரி மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதும் இப்படத்தின் தலைப்பில் சேரி என்ற சொல்லுடன் நாய் எனும் சொல்லும் உபயோகித்திருந்ததுமாகும்.
சிலம்டோக் மில்லியனர் எழுதப்பட்டதும் இயக்கப்பட்டதும் ஒருபுறம் மேற்கத்தைய சந்தை மறுபுறம் இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய மிகப் பெரும் திரைப்படத்துறை மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள இந்தியர்களையும் வைத்துப் பணம் கறக்கலாம் என்பதனாலாகும்.
சினிமாத்துறை மூலமாகப் பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்கள். ஆங்கிலமல்லாத இந்தித் திரைப்படங்கள் மூலமாக பிரிட்டனில் அதிக பணம் சம்பாதிக்கப்படுகிறது. சனரஞ்கமாகத் தயாரிக்கப்பட்ட ஐரோப்பியத் திரைப்படங்களை விட இந்தியத் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களை மிகவும் கவருகின்றது. பிரிட்டனில் பெருஞ் சனத்தொகை இந்தியர்கள் வாழுகின்றனர்.
பிரித்தானியக் கதாசிரியர்களும் முதலீட்டாளர்களும் தந்திரமான வழிமுறையொன்றைத் தேடினார்கள். வணிக ரீதியிலான சனரஞ்சகத் திரைப்படங்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பிரபல்யமாக ஓடுவதலிருந்து பெறும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து ஒரு பங்கை இந்தியத் திரைப்படத்துறையிலிருந்து பெற்றுக் கொள்வதே அதுவாகும்.
ஆனால் சிலம்டோக் மில்லியனர், சராசரி இந்தியர்களின் சனரஞ்சகக் கற்பனாசக்தியை மட்டுமல்ல சேரி மக்களையும் கூட அப்படம் கவரவில்லை.
எவ்வாறாயினும் இத்திரைப்படம் மேற்கத்தைய மனோபாவத்தைக் கவர முயற்சித்துள்ளது.
ஏமாற்றம்.
எந்த உலகில, ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பதே துன்பங்கள் தீர ஒரே வழியெனத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதோ, அவர்கள் ஒவ்வொருவரது கனவும் கோடீசுவரனாவதாகவே இருக்கும். ஆனால் சிலம்டோக் மில்லியனர் திரைப்படம் இக்கேள்வியை வெறும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு உடனே மலிவான காதல் கதையில் இறங்கி நகர்கிறது. இந்தியா, யார் கோடீஸ்வரனாகப் போகிறீர்கள்? நிகழ்ச்சிக்குச் சேரியிலிருந்து பங்குபற்றப் போகும் ஒரு இளைஞன் உச்சத்தொகையான இருபது கோடி ரூபாய் வெல்கின்றான். அவனுக்கு எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிந்தது? என்ற புலன்விசாரணையின் போது அவனது வாழ்க்கைக் கதை வெளிவருகிறது.
சிலம்டோக் மில்லியனர் ஒரு சாதாரண கதையாகும். இந்தியப் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பதனால் வித்தியாசமான அசாதாரணமான பரிமாணங்களைப் பெற்றது. உச்சக் கட்ட வறுமையும் வன்முறையும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஐரோப்பியப் பார்வையாளர்களுக்கு இவை புதியவையாகத் தெரியும்.
இப்படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகின்றது. வேகமான கமராவின் நகர்வு, சேரிக்குள் ஓடும் சிறுவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதிலே நடித்த சிறுவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதை சேரிக்கு வரும் மத்தியதர வர்க்க உல்லாசப் பயணியின் பரிதாபப் பார்வையுடன் பார்க்கிறது. இந்நிலையில் கழிப்பறையிலிருக்கக் கூடியவை கூட பார்வைக்கு மிக அழகாகக் காட்டப்படுகின்றது.
ஒரு வேளை, இந்த இந்தியாவின் அதாவது பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் நாட்டில் நீண்ட காலமாக ஆழமாக இருக்கும் வறுமையை அழகுபடுத்தும் முயற்சி தான் இத்திரைப்படம். அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சினால் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. சேரியின் மாதிரியை வடிவமைப்பாகக் கொண்டு இப்போது மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே எவராவது இப்படத்தினைப் பார்த்துத் தான் இந்திய சேரிவாழ்க்கையை அறியச் சென்றால் ஏமாற்றமேயடைவார்கள்.
1988 இல் மீரா நாயரினால் இயக்கப்பட்ட ‘சலாம்பாம்பே’ திரைப்படம் இதைவிட ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகும்.