எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கை அணி மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு -ஆதாரம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி

crc-04032009-01.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை “இரும்புக் கரம்’ கொண்டு கையாளப்போவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி நேற்று சூளுரைத்திருக்கும் நிலையில், செவ்வாயன்று இடம்பெற்ற தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகத்தின் (எவ்.பி.ஐ.) பணிப்பாளர் ரொபேர்ட் மில்லர் தலைமையிலான குழு நேற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்துள்ளது. இச்சந்திப்பின்போதே இலங்கைக் கிரிக்கெட் குழுவினர் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டிருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக கிலானி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

அத்துடன் மும்பைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இந்தியா ஒத்துழைக்கவில்லையென்று கிலானி எவ்.பி.ஐ. அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை தாக்குதல் தொடர்பாக 14 பேர் மீது ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக லாகூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது செவ்வாய்க்கிழமை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய முகமூடியணிந்த 12 பேர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1,25,000 டொலர்கள் (இலங்கை நாணயப்பெறுமதி சுமார் 1 கோடி 25 இலட்சம்) சன்மானம் வழங்கப்படுமென பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டும் 6 இலங்கை கிரிக்கெட் வீரர்களும் உதவி பயிற்றுவிப்பாளரும் காயமடைந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுமார் 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்

reg-camp.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று (4) விஜயம் மேற்கொண்டது. இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் இவர்கள் வவுனியாவுக்கு விஜயம் செய்தனர். இவர்களிடையே பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மாலைதீவு நாட்டு தூதுவர்களும் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹனவும் அடங்குவர்.

இவர்கள் மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச உடன்பாடு அவசியமென்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

l-yaappa-abayawardana.jpg பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு சர்வதேச உடன்பாடொன்று எட்டப் படவேண்டும் என்பதையே லாஹ¤ர் தாக்குதல் உணர்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் பூரணமான விசாரணைகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் கோருமானால் விசாரணைகளுக்கு எமது அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் எமது அணியை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்திய பின்னரே அது தொடர்பில் முடிவு செய்யப்படும்.

லாஹ¤ரில் இடம் பெற்ற சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அது தொடர்பில் சகல ஆலோசனைகளையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார். இதன்படி, இலங்கை வீரர்கள் உடனடியாக திரும்பி அழைக்கப்பட்டனர்.

1996 உலகக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடைபெற்ற போது பல நாடுகள் இங்கு வரமறுத்தன. அந்த சமயம் பாகிஸ்தானும் இந்தியாவுமே இங்கு விளையாட முன்வந்தன. வலய நாடுகளிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்பும் வகையிலே இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்றது. உச்சப் பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் வாக்களித்தாலும் பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு இருந்தது.

விளையாட்டுத்துறையில் பயங்கரவாதம் நுழைய முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க சகல தரப்பும் ஒன்று பட வேண்டும். அதனையே இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை எந்த ஆயுதக் குழு செய்தது என இதுவரை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை. ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது உள்நாட்டு மோதல் காரணமாகவோ இந்தத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தினால் காயமடைந்த இலங்கை அணி வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஓஸ்கார் என்பது ஓர் Fashion Show. சில சமயங்களில் திறமைகள் அங்கீகரிக்கப்படும். பல சமயங்களில் நிராகரிக்கப்படும். – Oscar. DOG and Slumdog Millionaire : ரதன்

Slumdog_Millionaire_Childrenஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப், ஒஸ்கார் விருதை பெற்றுக் கொடுத்த படமான Slumdog Millionaire – “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம் இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட இப்படம் ஒஸ்காரில் எட்டு விருதுகைள பெற்றுக்கொண்டது. ரொரண்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் பலரது பாராட்டைப் பெற்ற படம். அத்துடன் சிறந்த மக்கள் தெரிவு விருதையும் பெற்றுக் கொண்ட படம்.

இது வரையில் ஒஸ்காருக்கு இந்தியாவில் இருந்து சிறந்த வெளிநாட்டு படத்துக்காக மதர் இன்டியா, சலாம் பொம்பாய், லகான் ஆகிய படங்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆனால் விருது கிடைக்கவில்லை. சத்யஜித்ரேக்கு சிறப்பு விருது கிடைக்கப்பெற்றது. காந்தி படத்தின் costume designer Bhanu athaiya க்கு ஒஸ்கார் விருது கிடைத்தது.

Vanitha_Rangaraju_Ramananஇதைத் தவிர திருச்சியை பிறப்பிடமாகக் கொண்டு கலிபோர்னியாவில் வாழ்ந்து வந்த வனிதா ரங்கராசு-ரமணனுக்கு 2002ல் Shrek படத்துக்கு technical work in the animation movie கிடைத்தது. இந்தியாவால் கமலின் ஆறு படங்கள் ஒஸ்காருக்கு அனுப்பப்பட்டன. ஒரு படமும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகவில்லை. “நாயகன், தேவர் மகன், கே ராம், இந்தியன், குருதிப் புனல். சுவாதி முக்தியம்” ஆகிய படங்களே அவை.

ஓஸ்காரில் எட்டு விருதுகளைப் பெற்றுக் கொண்ட “குப்பத்து நாய் லட்சாதிபதி”. இதில் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கும், பாடல்களுக்காக இரு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்றிற்கு ஒஸகார் கிடைத்தது. மற்றையதை (ஓ..சாயா…சாயா…) பாடியவர் மாயா- M.I.A எனப்படும் மாதங்கி அருட்பிரகாசம். இவர் லண்டனில் பிறந்து, இலங்கை, இந்தியாவில் சிறிது காலம் வாழ்ந்து இப்பொழுது லண்டனில் வாழ்கின்றார். இவரது தந்தை “அருளர்” என அழைக்கப்படும் ஈரோஸ் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவர். M.I.A – Missing in Action or Missing in Acton. 

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களில் சுமார் 33 வீதமானோர் இந்தியாவில் தான் வாழ்கின்றனர். மும்பையில் மாத்திரம் சுமார் 2.6 மில்லியன் சிறுவர்கள் சேரியில் வாழ்கின்றனர். இதில் 400,000 சிறுவர்கள் பாலியல் தொழில் புரிகின்றனர். அங்கு வாழும் ஒருவனைப் பற்றிய படமே இது.

விகாஸ் சுவாரப்பின் கேள்வியும், பதிலும் என்ற நாவலை மையமாகக் கொண்டு சிமன் பியுபோய் திரைக்கதை அமைத்துள்ளார். எ.ஆர். ரகுமானின் இசையமைத்துள்ளார். இயக்கம் டான் பொயில் Danny Boyle (இங்கிலாந்து). 

மும்பை தெரு வீதிகளில் வாழும் 18 வயது ஜமால் மாலிக் Who Wants To Be A Millionaire? என்ற லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கூறுகின்றார். இன்னும் ஒரேயொரு கேள்வி, பதில் கூறினால் 20 மில்லியன் ரூபா பரிசு. அன்றைய நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொள்கின்றார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் பிரேம் குமார் (அனில் கபூர்). நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தை விட்டு வெளியே காலடிவைத்த ஜமால் பொலிஸால் கைது செய்யப்படுகின்றான். மோசடி செய்து பதில்கள் கூறியதாக இன்ஸ்பெக்டர் காரணம் கூறுகின்றார். அடி, உதை எப்படி பதில்களை பெற்றுக் கொண்டாய்? கேள்விகளுக்கான பதில்களை எப்படி ஜமால் தெரிந்து கொண்டார் என்பதுடன் விரிகின்றது. வாழ்வின் அவலங்களை, வறுமையின் நிறங்களையும், அவனது காதலின் தூய அன்பையும் கூறுகின்றான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவன் அளித்த பதில்கள் எங்கிருந்து பெற்றுள்ளான். பார்வையாளர்களுக்கு வெளிச்சமாகின்றது. மறு நாள் இறுதிக் கேள்விக்கான பதிலை நோக்கி இன்ஸ்பெக்டரும் அன்றைய இரவும் நகருகின்றது.

கேள்விகளுக்கான பதிலை எப்படி பெற்றுக் கொண்டான்?

இந்து, முஸ்லீம் கலவரத்தில் தாய் இறந்து விட, ஊரைவிட்டு தனது அண்ணன் சலீமுடன் ஓடி வருகின்றான் ஜமால். வந்து சேர்ந்த இடம் மிகவும் மோசமான பம்பாயின் தாதா உலகத்தில். சேரி வாழ்வு. இவர்களுடன் அநாதரவற்று நின்ற லத்திக்காவையும் சேர்த்துக் கொள்கின்றான் ஜமால். சிறுவர்களுக்கு வாழ்வு தருவதாக கூறி அழைத்துச் சென்ற கும்பலிடம் சிக்கிக் கொள்கின்றனர். நன்றாக பாட்டு பாடுபவர்களது கண்களை குருடாக்கி, பணம் பிச்சை எடுக்க அனுப்புகின்றது இந்தக் கும்பல். ஜமாலும் நன்றாக பாடுவான். இந்தக் கும்பலின் நம்பிக்கையை சம்பாதிக்கும் சலீமிடமே, ஜமாலின் கண்களை கொதி எண்ணெயை ஊத்தி குருடாக்கும்படி கூறுகின்றனர். அமிலத்தை எடுத்து அருகில் நின்ற கும்பல் உறுப்பினக்கு ஊத்திவிட்டு தப்பி ஓடுகின்றனர்.

காலங்கள் கரைகின்றன. ஜமால் உணவு விடுதியில் வேலை பார்க்கின்றான். சலீம் தாதா குழுவில் உறுப்பினராகி விடுகின்றான். ஜமால் லத்திகாவை தேடித்திரிகின்றான். ஒருவாறு லத்திகாவை கண்டுபிடித்து சலீமின் உதவியுடன் மீட்டுக் கொள்கின்றான். சலீம் துப்பாக்கி முனையில் ஜமாலை துரத்திவிட்டு லத்திகாவை தனதாக்கிக் கொள்கின்றான். பின்னர் லத்திகா, சலீமின் தாதா குழு தலைவரின் சொத்தாக்கப்படுகின்றாள். ஜமால் தொடர்ந்து லத்திகாவை தேடுகின்றான். அவள் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று தன்னுடன் வரும்படி கூறுகின்றான். இதற்கிடையில் இப் போட்டியில் கலந்து கொள்கின்றான். போலிஸ், அடி உதையின் பின்னர், மறு நாள் காலை ஜமால் பற்றிய விபரங்கள், பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் அலங்கரிக்கின்றன. சலீம் லத்திகாவிடம், தனது முதலாளியின் கார் திறப்பையும் தனது கைத் தொலைபேசியையும் கொடுத்து தப்பி ஓடி விடுமாறு கூறுகின்றான். தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கூறுகின்றான்.

இறுதிக் கேள்வி இவர்கள் பள்ளியில் படித்த Three Musketeers கதையை மையமாகக் கொண்டது. இதற்கான விடைக்கு உதவி பெற தனது அண்ணன் சலீமின் கைத்தொலைபேசிக்கு அழைக்க்கின்றான். நீண்ட நேரத்தின் பின்னர் லத்திகா குரல் கொடுக்கின்றாள். அப்பாவியாக விடை தெரியாது எனக் கூறுகின்றாள். சலீம் தனது முதலாளியை சுட்டுக் கொல்கின்றான். சலீமும் இறக்கின்றான். இறுதிக் கேள்விக்கான விடையை அதிர்ஸ்டமாக “ஏ” எனக் கூறுகின்றான். அதுவே சரியான விடை. 20 மில்லியன் ரூபாய்கள் பரிசாக பெற்றுக் கொள்கின்றான். ஜமாலும், லத்திகாவும் இணைகின்றனர்.

படத்தில் வரும் சிறுவர்களுக்கு இந் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இந் நிகழ்ச்சியையோ, இப் படத்தையோ பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை. பாத்திரங்கள், பார்வையாளர்கள் என அந்நியப்பட்ட சூழ் நிலையில்தான் இது உள்ளது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் தமது மனச்சாட்சி மீதான விசாரணைகளை மேற்கொள்ளக் கூடாது. இது படத்தின் ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜமால் இறுதிக் கேள்வி பதில் கூறி 20 மில்லியன் ரூபாயை பெறுவாரா? என்ற கேள்வியுடனேயே படம் தொடங்குகின்றது. மத்திய மேல் தட்டு வர்க்க பார்வையாளர்கள் சேரி சிறுவனுக்கு 20 மில்லியனா? என்ற கேள்வியுடனே படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள். படம் பார்வையாளர்களை சேரி வாழ் மக்களது வாழ்வியலில் இருந்து, தொலைக் காட்சி நிகழ்ச்சி மூலம் மேலும் அந்நியப்படுத்துகின்றது. ஜமாலை ஓர் கதாநாயக, காவியனாகவே காட்டுகின்றார்கள். இப் படத்தைப் பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது. இறுதிக் காட்சி மேலும் இதற்கு சான்று.

உலகமயமாக்கலின் கட்டாயம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை எதுவுமற்றவர்களாக காட்டுவதுடன், இங்கு சமூகரீதியான ஒடுக்கு முறைகள் உள்ளன என்பதனை வெளிப்படுத்தி இந்திய பார்வையாளர்களையும், அவர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினையும் தகர்ப்பது மிக முக்கியம். மேற்குலகு பற்றிய போலி மதீப்பீட்டினை இவர்கள் மத்தியில் வளர்ப்பது, மேற்கின் வியத்தகு வியாபார தாபனங்களின் லாபத்தை அதிகரிக்கும். இன்றும் காலனித்துவ ஆட்சி மீதும், வெள்ளையர் மீதும் மரியாதையுடன் உள்ளனர் இந்த மூன்றாம் உலக நாட்டு மக்கள்.

காதல் பற்றிய மத்தியதர வர்க்க கோட்பாடுகளில் இருந்து மாறி, கற்பு போன்ற கற்பிதங்களை மீறி ஜமாலின் தூயகாதல் வெளிப்படுகின்றது. இது வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மத்தியேலே தான் சாத்தியம்.

தாதாக்கள் அவர்களது மனோ நிலைகள், கதாநாயகத் தன்மைகள் சலீமிடம் சென்றடைகின்றன. அதன் வெளிப்பாடு தம்பியின் காதலியையே துப்பாக்கி முனையில் தனதாக்கிக் கொள்கின்றான். இது “துப்பாக்கியிலான” அதிகாரத்து வெளிப்பாடு. இது எமக்கு புதிதல்ல.

சலீம் பாத்திரத்தின் படிப்படியான வளர்ச்சி இயல்பாகவுள்ளது. ஜமாலின் வளர்ச்சி இயல்பற்றுள்ளது. தாஜ்மகால் உல்லாசப் பயணிகளிடம் ஆங்கிலம் பேசுவது போன்றவை நம்பமுடியாமல் உள்ளது. அதுவும் ஒரு சிறுவனை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும் உல்லாசப் பயணி, “ இது ஓர் 5 நட்சத்திர கோட்டல், இராணி விபத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார்” போன்றவற்றை நம்பும் உல்லாசப்பயணி. இதில் யார் முட்டாள், பார்வையாளர்களா? பாத்திரங்களா?

படத்தில் வரும் ஜமாலும், சலீமும் முஸ்லீம்கள். ஏன் இவர்களை இந்துக்களாக காட்டவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. மூலக் கதையில் இப் பாத்திரத்தின் பெயர் “ராம் மொகமட் தோமஸ்” என உள்ளது. நாவலாசிரியர் இப் பாத்திரம் ஓர் இந்தியன் எனக் காட்டுவதற்காகவே அவ்வாறான பெயர் சூட்டப்பட்டதாக தெரிவித்தார்.  படத்திற்கான வியாபாரமும், மேற்குலகு முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிக்கு மனோரீதியான வடிகாலாக இது அமையும்.

அறிவிப்பாளர் இறுதிவரை ஜமாலை போட்டியில் இருந்து விலத்தி விட தீவிரம் காட்டுகின்றார். மலசல கூடத்தில் கண்ணாடியில் “B”  என எழுதி விட்டுச் செல்கின்றார். ஜமால் அதற்கெதிரான விடையை D  எனக் கூறுகின்றான். அறிவிப்பாளர் ஜமாலை அடிக்கடி “சாய் வாலா” எனக் கூறி கேலி செய்கின்றார். ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் பிண்ணனியில் சிரிப்பொலி கேட்கின்றது. இவ்வாறான சிரிப்பொலிகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் செயற்கையாக ஒலிபரப்படுவது வழமை. இப் படத்தில் இந் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக காட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் சிரிப்பொலியாக காட்டப்படுகின்றது. பார்வையாளர்கள் பெரும்பாலோனோர் மத்திய மேல்தட்டு வர்க்கத்தினரே. படத்தின் பார்வையாளர்களும், நுகர்வோர்களும் அவர்களே. படத்தின் கருவின்படி சேரி வாழ்வியலால் அனைத்து பதில்களை கூறும் ஜமாலால் ஏன் இறுதிக் கேள்விக்கு மாத்திரம் அதிர்ஸடத்தை நம்ப வேண்டி வந்தது? அதுவும் தான் படித்த புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கே விடை தெரியாமல் அதிர்ஸ்டத்தை அழைக்கின்றான். அனைத்து கேள்விகளுக்கும், அனுபவத்தில், பொதுப் புத்தயில் பதில் கூறும் ஜமால், இறுதிக் கேள்விக்கு, அவனது கல்வியறிவே உதவவில்லை. இயக்குனர் ஜமாலையும், அவன் சார்ந்த சேரி மக்களையும், நன்றாகவே கேலி செய்துள்ளார். இது கூட வர்த்தகரீதியான வெற்றிக்கான வழியமைப்பும், மேல்தட்டு வர்க்க மனோபாவத்தின் எதிரொலியாகவுமே வெளிப்படுகின்றது.
 
சேரிவாழ் மக்கள் பற்றிய பதிவின் காவியாக ஏன் இப் போட்டி நிகழ்ச்சி பயன்படுத்தப்பட்டது? ஓர் சேரிவாழ் நாயகனால் இப் போட்டியில் இலகுவாக பங்குபற்ற முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இப் படக்கதையின் மூல ஆசிரியரான விகாஸ் சுவாரப்பின் பேட்டி ஒன்றின் போது “இங்கிலாந்தில் ஒரு இராணுவ அதிகாரி ஒருவர் இப் போட்டியில் தவறான வழியில் விடைகளை பெற்றதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கினார்” அதைப் பற்றி யோசிக்கும் பொழுது ஒரு சேரிவாழ் சிறுவன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றாலும் இது போன்ற சட்ட நடவடிக்கைக்குட்படலாம். அதுவே கதையாயிற்று என்றார். சேரி வாழ் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அணுகும் கதாசிரியரின் சமூக அக்கறையை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். ஆசிரியர் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவரது மூதாதையர் வழக்கறிஞர்கள். தாத்தா இந்திய முன்னால் சட்டமா அதிபர்.

ஓர் ஒடுக்கப்பட்ட, பல துன்பங்களை சந்திக்கும், அனைத்து அரசுகளாலும் கைவிடப்பட்ட சமூகத்தின் பதிவு, அதன் அகச் சூழலை வெளிப்படுத்தியுள்ளதா? கவர்ச்சியான கரு. இக்கருவின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் வெளிப்படுத்ப்படவில்லை.  படத்தில் பல தவறுகள் உள்ளதாக பல இணையத்தளங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. கவி சுரதாஸ் எழுதியதாக விடை கூறப்பட்ட பாடல், உண்மையில் நர்சி பகட்டால் எழுதப்பட்டது. டொன் பட இசைக்கு, யுவா பட காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மும்பை பாடத்திட்டத்தில் மூன்று நுளம்புகள் கதை பாடத்திட்டத்தில் இல்லை.

போட்டி நிகழ்ச்சி படத்தில் நேரடி ஒளிபரப்பாகவே காட்டப்படுகின்றது. வழமையில் இது முன்னரே ஒளிப்பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதியே ஒளிபரப்படும். இது திரைக்கதையாசிரிருக்கோ, இயக்குனருக்கோ உள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகின்றது. சினிமாத்தனம் என்பது இவர்களுக்கு நன்கு பொருந்தும். பல இடங்களில் காட்சி சட்டகங்களில் தொடர்ச்சி தவறானதா காணப்படுகின்றது. ஜமாலின் காயமடைந்த கண் முதலில் இடதாகவும், பின்னர் வலதாகவும் வெளிப்படுகின்றது.

Slumdog_Millionare_Protestஇந்திய வறுமையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. மீரா நாயரின் சலாம் பம்பாய், சத்தயஜித்ரேயின் படங்கள் போன்ற பல படங்கள். இவையாவும் வெளிநாட்டுச் சந்தையை நோக்கியும், திரைப்பட விழாக்களையும் நோக்கியே நகர்கின்றன. மாதுர் மன்டகாரின் ரபிக் சிக்னல் என்ற இந்திப் படம் ஒரு சந்தியைச் சுற்றியுள்ள சேரி மக்களை பதிவு செய்துள்ளது. இப்படம் பதிவு செய்த பல தீவிர கருத்துக்களை சிலம் டோக் பதிவு செய்யவில்லை.  ரபிக் சிக்னல் இந்திய சந்தையிலேயே விற்கப்பட்டது. அண்மையில் இந்தியாவின் தெய்வீக கதாநாயகன் அமிதாப்பச்சன் “சிலம் டோக்” இந்திய வறுமையை கேலி செய்வதாக குற்றஞ்சாடடியுள்ளார். (Amitabh Bachchan: Slumdog Millionaire Shows India as Third World’s Dirty Underbelly) சேரி வாழ்மக்கள் பற்றிய பல படங்கள் உலகலாவிய ரீதியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வீதிச் சிறுவர்களைப் பற்றிய பல பதிவுகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக City of God மற்றும்  The Kite Runner போன்ற படங்கள் பரவலாக அறியப்பட்ட படங்கள். 1958ல் லண்டனில் வெளியான A Cry from the Streets என்ற படம் லண்டன்வாழ் சேரி சிறுவர்களை பதிவு செய்துள்ளது. இவை கூட பெரும் வரவேற்பு பெறவில்லை. இவற்றில் வெளிப்பட்ட யதார்த்தமும், இம் மக்கள் மீதான அக்கறையும் இப் படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் மேற்கூறிய படங்களுக்கு கிடைத்த கவன ஈர்ப்பைவிட அதிகளவில் இப்படம் பெற்றுள்ளது. இது அமிதாப்பின் கூற்றில் உள்ள உண்மையை உணர்த்துகின்றது. அதற்காக அமிதாப்பிற்கு இவர்கள் மேல் அக்கறையோ, அனுதாபமோ எனக் கூறமுடியாது. இதுவும் ஓர் சுய வியாபாரமே. இவரது படங்களில் எதிலும் சேரி வாழ் மக்கள் நலன்கள் கருதி கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

உலகெங்கும் சேரிகளில் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் விதி விலக்கல்ல. அமெரிக்காவில் பெரும் நகரங்களிலேயே இதனை காணலாம். டிற்றொய்ட், அற்லான்ரா, மியாமி, சென் லூயிஸ், கூஸ்ரன், சிக்காகோ, நியு ஒலியன்ஸ், மில்வாக்கி போன்ற நகரங்களில் சேரிகளை காணலாம். இவற்றில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் (49 வீதம்) கறுப்பின மக்களே. வெள்ளை இனத்தவர்கள் வெறும் .5 வீதத்திற்கும் குறைவானவர்கள். இது உலகின் பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களிலும் காணப்படுகின்றது. நவீன நகரமயமாக்கல் என்பதன் பெயரில் குடியிருப்போரை எழுப்பி வீடற்றவர்கள் ஆக்கும் முயற்சியும் வளர்ச்சியடைந்த நகரங்களிலேதான் நடைபெறுகின்றன. நியுயோர்க் நகரில் புறுக்களின் பாலத்தை சுற்றியுள்ள நகர மக்கள், ரொரண்ரோவின் றிஞன்ற் பூங்கா மக்கள் இவ்வாறு நவீன மயமாக்கலில் பாதிக்கப்பட்டோர். இவர்கள் மீதான வன்முறையையும், ஒடுக்குமுறையையும் மறைக்கும் முயற்சியே, இப் படம் மீதான அதீத விளம்பரத்திற்கான காரணம். இப் படம் சிறந்த மக்கள் தெரிவு விருதை ரொரண்ரோ சர்வதேச திரைப்படவிழாவில் பெற்றுக் கொண்டது. ரொரண்ரோ விழா கேந்திர முக்கியத்துவமுடையது. உலகின் இரண்டாவது பெரிய திரைப்பட விழா, அத்துடன் வட அமெரிக்க சந்தையையும் தீர்மானிக்கின்றது. பல வெகுசனத் தொடர்பாளர்கள் சங்கமிக்கும் விழா. இப்பொழுது தங்க உலகம்(Golden Globe), ஒஸ்கார் எனத் தொடர்கின்றது.

ஒன்றை மட்டும் கூறலாம் யதார்த்தை மீறி வெளிப்பட்டுள்ள இப் படத்தை பார்க்க செல்ல முன்னர் மூளையை கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். பொதுப் புத்தி என்பது பார்வையாளனுக்கு இல்லை என்பதையே இப் படம் வெளிப்படுத்துகின்றது. இன்றைய மேற்கத்திய வெகுசனத் தொடர்பு சாதனங்கள் இப்படம் செய்ததைத்தான் செய்கின்றன.

இறுதியாக ஓர் கேள்வி? இப்படத்தின் தலைப்பு  சேரி “நாய்”  என இடப்பட்டுள்ளது. வறுமையில் வாழ்பவர்களை “நாய்” என்று கூறும் ஆங்கிலேய தயாரிப்பாளருக்கு எந்த இந்தியரும் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. பிரித்தானிய காலனித்துவ மனோபாவமே “நாய்”.

அனைத்து ஊடகங்களும் மௌனமாக உள்ளன. “தேசம்” ஊடாக இந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் இதன் தயாரிப்பாளருக்கும் தெரியப்படுத்துவோம். இப் படத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் இது பற்றி மௌனமாக இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கின்றது.

Slumdog_Millionaire_Oscarஓஸ்கார் அரசியல்:

அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அமெரிக்காவிற்கு எதிராக கருத்துக்கள் முன் வைப்பவர்களை ஒஸ்கார் தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. இவ் வருடம் மாயாவிற்கும் இதுவே நடைபெற்றது. 1969ல் வியட்நாம்போருக்கு எதிராக குரல் எழுப்பிய ஜேன் பொன்டா விற்கு ஒஸ்கார் நிராகரிக்கப்பட்டது. சார்லி சப்பிளின் இவருக்கு ஒஸ்கார் விசேட விருதே 1972ல் கிடைக்கப்பெற்றது. இவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அரசியல் படங்களும், சர்சைக்குரிய விடயங்களையும் கொண்ட படங்கள் நிராகரிக்கப்பட்டன.

இவ் வருடம் பிரான்ஸில் இருற்து அனுப்பப்பட் “Class” இது ஒரு வகுப்பில், பல்வேறு இனங்களை கொண்டவர்களுக்கு பாடம் நடாத்தும் ஓர் ஆசிரியயையும், வகுப்பறையையும் மையமாகக் கொண்டது. இது போன்ற பல படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

ரகுமான் தமிழிழ் பேசினார் என சந்தோசப்படும் நாங்கள் “இவர் என்ன பேசினார்” என ஒரு தடவை யோசிக்க வேண்டும். மார்லன் பிராண்டோ, மைக்கல் மூர் போன்றோர் ஒஸ்கார் மேடையில் துணிச்சலாக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முன்னவர் அமெரிக்க பூர்விக குடிகளான இந்தியரின் இறைமையை வலியுறுத்தி பேசினார். முன்னவர் அமெரிக்காவிற்கு எதிராகவே பேசினார். அதுவும் அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ்ஸை கேலி செய்து “”we are against this war Mr. Bush. Shame on you! Shame on you!” என பேசினார்.

ஓஸ்கார் என்பது ஓர் Fashion Show. இதில் சில சமயங்களில் திறமைகள் அங்கீகரிக்கப்படும். பல சமயங்களில் நிராகரிக்கப்படும்.

‘இலங்கை – பாக். மிகுந்த நட்பு நாடு; நிதானம் அவசியம்’

sri-lanka-parliment.jpgஇலங்கையும் பாகிஸ்தானும் நெருங்கிய உறவினைக் கொண்ட நாடுகள் என்பதால், கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் தொடர்பில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் நேற்றுச் சபையில் பிரஸ்தாபித்தனர். அதற்குப் பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தமது பதிலில் மேலும் தெரிவித்ததாவது :-

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதையடுத்து உடனடியாகக் கிடைத்த தகவல்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் தெளிவுபடுத்தினார். அதற்குப் பிறகு சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை பிந்திக் கிடைத்த தகவல்களாகும்.

இத்தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்படுகின்றன. எவ்வாறெனினும் இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடு என்பதால், இப்பிரச்சினை நிதானமாக அணுகப்பட வேண்டியதெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு அந்நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக நேற்று முன்தினம் சபையில் ஆளும்கட்சி அமைச்சர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், சம்பவத்தைப் பார்க்கும் போது சாதாரண அமைச்சர்களுக்கு வழங்கும் பாதுகாப்புக் கூட அவர்களுக்கு வழங்கப் படவில்லையே என எதிர்க் கட்சியினர் சபையில் பிரஸ்தாபித்தனர். இதற்குப் பதிலளித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் போரை நிறுத்த இங்கிலாந்துக்கு மனு:பழ.நெடுமாறன், வைகோ, திருமா

br-embassy-india.jpg சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் மைக்கார்னை, பழ.நெடு மாறன் தலைமையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த இங்கிலாந்து தலையிட கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தனர். இந்த மனுவை அளித்த பின்னர் நிருபர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது :

இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.  அவசியம் உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளதாக கூறியதைத்தொடர்ந்து பேசிய வைகோ, 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்து போடுகிறார்கள். அமெரிக்க அதிபர், ஐ.நா.பொது செயலாளர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கையெழுத்துக்களை அனுப்புவோம். கட்சி எல்லைகளை கடந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. எனவே அரசியல் கூட்டணிக்கும், இலங்கை தமிழர்களை காக்க போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உரிய நேரத்தில் கூடி முடிவு செய்வோம் என்றார்.

முல்லைத்தீவிலிருந்து 7வது தொகுதி காயமடைந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என 157 பேர் நேற்று அழைத்துவரப்பட்டனர்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் கடல் வழியாக 7வது தொகுதியாக நோயாளர்கள் கர்ப்பிணிகள் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 157 பேர் நேற்று இரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 50 ஆண்கள் 81 பெண்கள் 26 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் 42 ஆண்களும் 45 பெண்களும் வைத்திய சிகிச்சைகளுக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. ஏனையவர்கள் அவர்களுடன் உதவிக்கு வந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் திகதி முதல் இதுவரை 7 தொகுதிகளில் கடல் வழியாக நோயாளர்கள் காயமடைந்தவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 2553 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்தார்

rohitha-sir-john.jpg வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேபாள விஜயத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சரை இலங்கை கிரிக்கட் அணியினர் மீது நேற்று பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிணங்க இன்று பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல்களின் பின்னர் இஸ்லாமாபாத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளார் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

அவசர காலச் சட்டம் 62 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

srilanka-parliament.jpgநாட்டில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை 62 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

இப்பிரேரணைக்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

புலிகளின் 2100 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகள் படையினரால் மீட்பு

bobobo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 2100 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகளை இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குண்டுகளையும் விமானம் மூலம் கொண்டு வந்து புறக்கோட்டைப் பிரதேசத்தில் போட்டிருந்தால் அந்தப் பிரதேசம் முற்றாக அழிந்திருக்குமெனவும் அந்தளவுக்கு இந்தக் குண்டுகள் சக்திமிக்கவையாகக் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.