வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று பாகிஸ்தான் போய்ச் சேர்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேபாள விஜயத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சரை இலங்கை கிரிக்கட் அணியினர் மீது நேற்று பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிணங்க இன்று பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல்களின் பின்னர் இஸ்லாமாபாத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் போகொல்லாகம கலந்துகொள்ளவுள்ளார் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.