இலங்கையும் பாகிஸ்தானும் நெருங்கிய உறவினைக் கொண்ட நாடுகள் என்பதால், கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதல் தொடர்பில் மிகுந்த நிதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் நேற்றுச் சபையில் பிரஸ்தாபித்தனர். அதற்குப் பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் தமது பதிலில் மேலும் தெரிவித்ததாவது :-
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதையடுத்து உடனடியாகக் கிடைத்த தகவல்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் தெளிவுபடுத்தினார். அதற்குப் பிறகு சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை பிந்திக் கிடைத்த தகவல்களாகும்.
இத்தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்படுகின்றன. எவ்வாறெனினும் இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடு என்பதால், இப்பிரச்சினை நிதானமாக அணுகப்பட வேண்டியதெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு அந்நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக நேற்று முன்தினம் சபையில் ஆளும்கட்சி அமைச்சர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், சம்பவத்தைப் பார்க்கும் போது சாதாரண அமைச்சர்களுக்கு வழங்கும் பாதுகாப்புக் கூட அவர்களுக்கு வழங்கப் படவில்லையே என எதிர்க் கட்சியினர் சபையில் பிரஸ்தாபித்தனர். இதற்குப் பதிலளித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.