விஸ்வா

விஸ்வா

முப்பது வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தில் பொஸன் அலங்காரப் பந்தல்!

பொஸன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நாகவிகாரையில்  மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் நாளை (June 25 2010) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. யுத்தம் காரணமாக 30 வருடங்களின் பின்னர் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப் படுத்தப்படவிருப்பதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூர யுத்தம் காரணமாக முப்பது வருடங்களின் பின் முதல் முறையாக யாழ்.பிரதேசத்தில் மக்கள் கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி, உத்தரலங்கா பிரதான சங்க நாயக்கர் ஞானரத்தின தேரரின் உபதேசத்திற்கமைய யாழ்.பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட இராணுவ விரர்கள், பொலிஸார் ஆகியயோரின் ஏற்பாட்டில் நாளை (25-06-2010)  மாலை 6.30 மணிக்கு மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படும். இதன்மூலம் விருது ஜாதகக் கதை பற்றிய விளக்கமளிக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த அலங்காரப் பந்தல் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 433 பேர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் 93 குடும்பங்களைச் சேர்ந்த 433 பேர் மீள்குடியமர்த்தப்படமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இடம்பெயர்ந்தோர் முகாம்களும் மூடப்பட்ட நிலையில், இவர்கள் அங்குள்ள நண்பர்கள் உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இதில் கிரான் பிரதேச செயலர் பிரிவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும். செங்கலடிப் பிரிவில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 221 பெருமே நண்பர்கள் உறவினர் வீடுகளில் இன்னமும் தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், 93 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளன. கிழக்கிலும் வடக்கிலும் மக்களின் மிள்குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

KP_Selvarajah_Pathmanathanநடைபெற வுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் விளங்கிய கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் களமிறக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக இவர் நிறுத்தப்படவுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்காக கே.பி இற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கே.பி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள 20 தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அரசாங்கம் இவர்களை சகல பாதுகாப்புகளோடு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசின் விமானமொன்றில் பலாலி படைமுகாமிற்குச் சென்ற இக்குழுவினர் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இத்கவலை வெளியிட்டார்.

யாழ். சிமெந்து தொழிற்சாலை – உயர்மட்டக்குழு நாளை யாழ். வருகிறது.

KKS_Cement_Factoryகாங்கேசன் துறை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சிமெந்து நிறுவனம் ஆகியவற்றின் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வது குறித்து ஆராய உயர்மட்டக் குழுவொன்று நாளை (24-06-2010) யாழ்ப்பாணம் வரவுள்ளது. இவ்விரு நிறுவனங்களினதும் தலைவாராக நியமனம் பெற்றுள்ள தேசமானி எஸ.ஜே.பரணகம தலைமையில் கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் நாளை வருகை தருகின்றனர். 

தொழில்சாலையின் செயற்பாடுகள் பற்றி விளக்கவதற்காக செய்தியாளர் சந்திப்பு ஒன்று நாளைக் காலை 9 மணிக்கு இணுவிலில் உள்ள லங்கா சிமெந்து நிறுவன அலவலகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு ஆலயத் திருவிழா இன்று ஆரம்பமானது.

madu_churchவரலாற்றுச் சிறப்பு மிக்க புனித மடுமாதா ஆலையத் திருவிழா இன்று (June 23 2010) புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று ஆரம்பமான இத்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று யூலை மாதம் 2ம் திகதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடுஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தங்குமிடம், கழிவறை, குடிநீர், உணவு போன்றவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திற்கு வருகை தருவோர் மது பாவனையைத் தவிர்த்து புனிதம் பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 

வருடந்தோறும் நடைபெறும் மடு ஆலயத் திருவிழாவிற்கு இலங்கை முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் பல்லாயிரக் கணக்கில் வருகை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மொழி மாநாட்டில் மலையக ‘காமன் கூத்து’

நாளை (June 24 2010)  தமிழ் நாடு கோவையில் ஆரம்பமாகவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை மலையக மக்களின் பாரம்பரிய கலையான ‘காமன் கூத்து’ அரங்கேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் தமிழ்ச்சங்கத் தலைவரும். கவிஞருமான சு.முரளிதரன் மேற்கொண்டுள்ளர்.  செம்மொழி மாநாட்டின் இலங்கைக் குழுத்தலைவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கிணங்கவே காமன் கூத்துக் கலைஞர்கள்  அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இரா.பிரான்சிஸ் ஹெலன் நெறியாள்கையில் 14 பேர் கலைஞர்கள் அடங்கிய குழுவினர் இதற்காக தமிழகம் செல்கின்றனர்.

பொஸன் தினத்தைக் கொண்டாட யாழ். நைனாதீவிற்கு இரண்டாயிரம் பௌத்த யாத்திரிகர்கள்!

Nainathivu_Naha_Viharaநாளை மறுதினம் 25ம் திகதி பொஸ்ன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நைனாதீவு நாகவிகரையில் அதனைக் கொண்டாடுவதற்காக இரண்டாயிரம் பௌத்த யாத்திரிகர்கள் நாளை 24ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளனர். பௌத்த சங்கம் ஒன்றின் ஏற்பாட்டில். நைனாதீவு நாகவிகரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காகவே இந்த யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளனர். இவர்கள் கிரிமலைக்கும் உட்பட பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு, தங்குமிடம், உணவு வசதிகள் போன்றவற்றை அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, போர் முடிவிற்கு வந்து ஏ-9 பாதை திறந்து விடப்பட்டதன் பின்னர் வடபகுதிக்கான   சிங்களப் பொதுமக்களின்  சுற்றுலா வருகை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில்  தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

“தமிழ் கட்சிகள் ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்’ -முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

Varatharaja Perumalதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவி ஆகிய இரு முக்கிய பணிகளையும் முன்னெடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டிற்க வரவேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். June 18 2010 இலங்கை தனியார் வானொலி ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளை கைவிட்டு பொது உடன்பாட்டிற்கு வர வேண்டியது இக்காலகட்டத்தில் முக்கியமானதெனவும் அவர் வலியுறுத்தினார். இதற்காக தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்காகவே தான் இலங்கை வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி எதனையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவரெனவும், அவர் தமிழ் மக்களுக்கு தீரவு ஒன்றை வழங்கக் கூடிய பலத்துடன் இருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும், ஒரே எடுப்பில் அதிகாரப் பகிர்வை நோக்கி செல்வது கடினம் எனவும் திரு. வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.