விஸ்வா

விஸ்வா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று இந்தியா சென்றுள்ளனர்.

TNAஇந்தியாவின் அழைப்பின் பேரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறுவர் அடங்கிய குழுவினர் இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு இந்தியா சென்றுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையிலான இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

மூன்று நாள் பயணமாக செல்லும் இக்குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இந்தியப் பிரதமரையும் சந்திக்கும் வாயப்பு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அகிய விடயங்களுக்கே இச்சந்திப்பில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாண நிர்வாக செயலகங்கள் ஓகஸ்ட் 1 முதல் கிளிநொச்சியில் இயங்கும்.

வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண பொது நிர்வாக செயலகமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கிளிநொச்சியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதம செயலாளர் அலுவலகமும், அமைச்சுக்களின் உப பிரிவுகளும், கிளிநொச்சி நகருக்கு மாற்றப்படும் எனவும், வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண அளுநர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் நெறிப்படுத்தலில் வடமாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக கடமையற்றியவருமான தி.இராசநாயகம் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும், அடுத்த மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரிற்கு மாற்றப்படும் எனவும், அதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் மரணம்!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்தவர் விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (July 01 2010) ஏழாலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பி.றொபின் (வயது36) என்பவரே மரணமடைந்தவர்.

நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மரண விசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இவர் லண்டனிலிருந்து அண்மையில் யாழப்பாணத்திற்கு உறிவினரைப் பார்ப்பதற்காக வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

”இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.” ததேகூ சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!

Sivasakthi_Anandan_TNA”இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்”, என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்தோடு போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்கியதைப் போல தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் விடுதலை செய்ய்ப்பட்டுள்ளனர் ஆனால்,  அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் சிவசக்தி ஆனந்தன் அவரது உரையில் குறிப்பட்டுள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு கிராம மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். தங்கள் மீள்குடியமாவக்காக இதுவரை இம்மக்கள் பதிவு செய்யாமலிருந்தால் குடத்தனையில் இயங்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் உடனடியாக தங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதி மேற்படி பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோட்டம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முகாமிலிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த கந்தகடுவ பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தொழில் பயிற்சிகளைப் பெற்று வந்த  முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் காரணமாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயெ கடந்த 30ஆம் திகதி அங்கிருந்து அவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ளவர்களில் காயமுற்றவர்கள், நோயாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழமையானது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இவர் தப்பிச்சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவர் கிளிநொச்சியைச் சேர்ந்த 27 வயதான நித்தியானந்தன் ராசா என்பவர் எனவும், இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் இராணுவம் திடீர் சோதனை

தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளவத்தை கடற்கரை வீதிப் பகுதிகள் சோனையிடப்பட்டதோடு,  காலி வீதியில் வானங்களும் இடை மறிக்கப்பட்டு  சோதனையிடப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சிறிது பதற்றமடைந்த போதிலும் இந்நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா செல்லவுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சுமந்திரன், அ.விநாயகமூர்த்தி, மாவை சேனாதிராஜா ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. இதன் போது இந்திய அரசுத் தலைவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பேச்சுவார்த்தைகள் எப்போது நடைபெறும் என்கிற விபரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சீற்றம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை துரோகம். இதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

தமிழரசுக்கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழரசுக்கட்சிக்கு துரோகம் செய்த திருவாளர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகிக்கும் பதிவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலர் எஸ்.எக்ஸ். குலநாயகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலொ ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பாக செயற்படலாமேயன்றி இவை தனி அரசியல் கட்சியாக செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் பங்கு வகிக்க முடியாது எனவும், அதனைத் தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் திரு. குலநாயகம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்தவொரு தமிழசுக் கட்சிக்காரனும் ஏற்கப்போவதில்லை எனவும், இலங்கையில் தமிழ் பேசும் இனத்தை இணைத்த தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்ட தமிழசுக்கட்சியின் அழிவை தமிழ்பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் உபதலைவரும், 1956ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் அங்கம் வகித்து வருபவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான யாழ். பலகலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலமும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு கட்சியாக பதிவு செய்வதற்கு முதல்நாள் இவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

அநுராதபுரம் விமானத்தளம் மீதான தாக்குதல் குற்றவாளிகளுக்கு பிணை மறுப்பு.

அநுராதபுரம் விமானத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்று சந்தேக நபர்களின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான தடயப் பொருட்களையும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.