விஸ்வா

விஸ்வா

புலம்பெயர்ந்த தமிழர்கள் காணிகளைப் பொறுப்பேற்க வடக்கு நோக்கிப் பயணம்!!!

Abondon_Landவன்னியில் சொந்தக் காணிகளையுடைய வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்கள் காணிகளைப் பொறுப்பேற்பதற்காக வன்னிக்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தங்கள் காணிகளை கைவிட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கூட  தற்போது வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதால் அங்கு சென்று  தங்களின் காணிகளைப் பொறுப்பேற்பதற்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Abondon_Landவெளிநாடுகளில் வசிப்பவர்களின் காணி, வீடுகளை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் தம்வசப்படுத்தியிருந்தனர். சில காணிகளில் விடுதலைப்பலிகளின் முகாம்கள், அலுவலகங்கள் என்பன அமைக்கபட்டிருந்தன.  அவ்வாறான காணிகளை தற்போது படையினர் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். சில காணிகளில் ‘இரரணுவத் தேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்ட பலகைகளையும் காணமுடிகின்றது. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கள் காணி, வீடுகளைப் பொறுப்பேற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றவர் விளக்கமறியலில்!

கிளிநொச்சி பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றமை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கழமை கிளிநொச்சி நகரப்பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் படசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபரொருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளார். குறித்த மாணவி சத்தமிட முயன்ற போது அவரின் வாயைப் பொத்தியிருக்கின்றார். அவ்வழியாக வந்த சில பொதுமக்கள் மாணவியை காப்பாற்றியதோடு சம்பந்த நபரையும் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கபட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பாலியல்வல்லுறவிற்கு உட்படுத்த முயன்றவர் வியாபார நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணசபை அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் நடவடிக்கை நிதியின்மையால் தாமதம்

uthaya_nanayakara_.jpgவடமாகாண சபை அலுவலகங்கள் விரைவில் கிளிநொச்சியில் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான அரசின் நிதி இன்னும் கிடைக்கப் பெறாமையால் இந்நடவடிக்கை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 வடமாகாண சபை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி  வடமாகாண சபையின் செயலாளர்களை நேற்று சந்தித்போது, இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சு அலுவலகங்கள் கிளிநொச்சிக்கு இடம் மாற்றவது தொடர்பாக ஆராயும் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது, மாகாணசபை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைப்பது, கட்டடங்களைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இப்பணிகளுக்கு 200 தொடக்கம் 300 மில்லியன் ரூபா வரை தேவை என மாகாணசபை செயலாளர்கள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

 இதனையடுத்து, அரசிடமிருந்த இந்நிதி கிடைக்கும் வரை மாகாணசபை அலுவலகங்களை கிளிநொச்சிக்கு இடம்மாற்றும் பணியை நிறுத்தி வைப்பதாக  ஆளுநர் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை மருத்துவ பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்படவுள்ளது!

மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நாளை 28ம் திகதி தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு கொண்டு செல்லப்படவுள்ளது. தர்சிகாவின் தாயார் தமது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் எனவே. அவரது சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தர்சிகாவின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதபரிசோதனைக்குட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் நாளை 28ம் திகதி தர்சிகாவின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணகள் நேற்றும் இன்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் கிடைக்க இரண்டு வருடங்கள் செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ceb.jpgகிளி நொச்சிக்கு சீரானமுறையில் மின்சாரம் வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஒன்று அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவுபெற இரண்டு வருடங்களில் செல்லும் எனவும், அதன் பின்னரே கிளிநொச்சிப் பகுதிகளுக்கு மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சாரசபையின் மின்விநியோகம் வவுனியாவிலிருந்து மின்கம்பி மூலம் கிளிநொச்சி, பரந்தன் வரை வழங்கப்படுகின்றது. மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் மின் விநியோகத்தில் சில சமயங்களில் தடங்கள் ஏற்படுகின்றது. வடபகுதி காலநிலையும் இதற்கு முக்கிய காரணியாகவுள்ளது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வழங்கப்படும் ‘லக்சபான’ மின்சாரத்தை கிளிநொச்சி உப மின்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் போதே கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் முன்னர் ‘லக்சபான’ உப மின்சார நிலையம் செயற்பட்டு வந்தது. பின்னர்  எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில்  போர் நடவடிக்கைகளால் அது செயலிழந்து போனது. அந்த மின்சாரசபை வளாகத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதே இடத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சியையும் பூனகரிப் பகுதிகளையும் இணைக்கும் சங்குப்பிட்டி-கேரதீவு பாதையின் பாலத்தின் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன.

பூனகரியுடன் யாழ்.குடாநாட்டை இணைக்கும் சங்குப்பிட்டி – கேரதீவு  பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் வீதி அபிவிரத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணி டிசெம்பர் மாத்துடன் நிறைவடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனையிறவுப்பாதை  எண்பதுகளின் பிற்பகுதியிலம், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த வேளையில், வன்னிமக்கள் சங்குப்பிட்டி – கேரதீவு பாதையூடாகவே தங்கள் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். அப்பாதையூடாகவே யாழ். குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. விடுதலைப்புலிகளின் யாழ். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையாகவும் இப்பாதை அவர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னர், தென்மராட்சி கேரதீவு பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும். கிளாலி கடல் நீரேரி ஊடாகவும், கொம்படி, ஊரியான் ஊடாகவும் மக்கள் பெரும் சிரமங்களுடன் தங்கள் பயணங்களை மெற்கொண்டனர். தற்போது சங்குப்பிட்டி- கேரதீவு பால திருத்த வேலைகள் நிறைவடையும் பட்சத்தில் பூனகரிப் பிரதேசத்திலிருந்து தென்மராட்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சுலபமாக மக்கள் பயணிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயத முனையில் 19 லட்சரூபா கொள்ளை. தென்னிலங்கை மிரிஹான பகுதியில் சம்பவம்!

தென்னிலங்கையின் மிரிஹானப் பகுதியில் ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா  கொள்ளையிடப்பட்டுள்ளது. மிரிஹான எத்துல்கோட்ட சந்தியில் (26-07-2010 முற்பகல் 10.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளரால் வங்கிக்கு வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுதராரிகளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஆயததாரிகள் இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக 60 வயது நபர் தனக்குத்தானே தீமுட்டிக் கொண்டார்!

unp-logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக நபரொருவர் தனக்குத்தானே தீமுட்டிக்கொண்ட சம்பவம் நேற்று மாலை (26-07-2010) நடைபெற்றுள்ளது.  கொழும்பில் அமைந்துள்ள ஐக்கியதேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிக்கோத்தாவின் முன்பாக வைத்து இந்த நபர் தன்னைத் தீயிட்டுக்கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான எரிகாயங்களுடன் இந்நபர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வெலிகம என்ற இடத்தைச் சேர்ந்த றியான்சி அல்கம என்ற 60 வயதான நபரே இவ்வாறு தீயிட்டுக்கொண்டவர் என களுபோவில வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை, ஐக்கியதேசியக் கட்சிக்குள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் தீக்குளிப்பு நடவடிக்கையில் இறங்கினார் என மற்றுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

ஆளும் கட்சியுடன் இணையப் போவதாக வெளியான வதந்திகளை விஜயகலா மகேஸ்வரன் மறுத்துள்ளார்.

Vijayakala_Maheswaranஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சிக்குத் தாவப்போவதாக வெளியான வதந்திகளை அவர் மறுத்துள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன்பு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் யாழ். கந்தர்மடத்திலுள்ள காலம்சென்ற அமைச்சர் மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதற்கு முன்னதாகவே விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணையப்போகிறார் என்கின்ற வதந்திகள் பரவியிருந்தன. இந்நிலையில், இச்செய்திகளில் எந்த உண்மையுமில்லை என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

மகேஸ்வரன் உயிருடன் இருந்த காலத்திலேயே தற்போதைய ஆளும் கட்சியைச சேர்ந்தவர்கள் அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

landmines.jpgவன்னியில் மிதிவெடிகள். கண்ணிவெடிகள் முதலான வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வந்தாலும், சில பகுதிகளில் வெடிபொருட்களின் அபாயம் இன்னமும் காணப்படுவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம், கோணாவில், பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்கள் தங்கள் காணிகளைத் துப்புரவாக்கி தீமூட்டும் போது, சில வெடிபொருட்கள் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன வெடித்துள்ளன. இதே வேளை, தென்னை, பனை போன்ற மரங்களில் கொழுவியபடி சில எறிகணைகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வெடிபொருட்கள் தொடர்பாக வளர்ந்தவர்கள் அவதானமாக இருந்தாலும் கூட சிறுவர்கள் இதில் அவதானமற்றும், விளையாட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளும் நிலை உள்ளதால் பொதுமக்கள் இவ்வெடி பொருட்கள் தொடர்பாக அச்சம் கொண்டவர்களாகவே உள்ளனர்.