கிளி நொச்சிக்கு சீரானமுறையில் மின்சாரம் வழங்குவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஒன்று அமைக்கப்படும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவுபெற இரண்டு வருடங்களில் செல்லும் எனவும், அதன் பின்னரே கிளிநொச்சிப் பகுதிகளுக்கு மின்சாரம் சீரான முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மின்சாரசபையின் மின்விநியோகம் வவுனியாவிலிருந்து மின்கம்பி மூலம் கிளிநொச்சி, பரந்தன் வரை வழங்கப்படுகின்றது. மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் மின் விநியோகத்தில் சில சமயங்களில் தடங்கள் ஏற்படுகின்றது. வடபகுதி காலநிலையும் இதற்கு முக்கிய காரணியாகவுள்ளது. வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு வழங்கப்படும் ‘லக்சபான’ மின்சாரத்தை கிளிநொச்சி உப மின்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் போதே கிளிநொச்சிக்கு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் முன்னர் ‘லக்சபான’ உப மின்சார நிலையம் செயற்பட்டு வந்தது. பின்னர் எண்பதுகளின் இறுதிக்கட்டத்தில் போர் நடவடிக்கைகளால் அது செயலிழந்து போனது. அந்த மின்சாரசபை வளாகத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அதே இடத்தில் உப மின்நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Rakulan
மின்கம்பிகளில் படரும் மண்துகள்களால் கிளிநொச்சிப்பகுதியில் மின்சாரம் தடைபடுவது ஒரு புறமிருக்க அப்பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்லுகையில் கிளம்பும் புழுதிப்படலத்தால் பொதுமக்களுக்கு சுவாச நோய் உட்பட பல பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அண்மையில் கிளிநொச்சி டிப்போ வீதியால் பயணம் செய்தபோது திருத்தப்படாத அம்மண் பாதையில் கிளம்பிய புழுதிப்படலத்தால் திக்குமுக்காடிய அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. ஏ-9 பிரதான பாதையிலும் பல இடங்கள் புழுதிப்பாதையாகவே உள்ளன. இவை முதலில் திருத்தியமைக்கப்பட வேண்டும். மினாசரம் ஒரு ஊரினது அபிவிருத்திக்கு அடிப்படையானது. இவற்றை எல்லாம் கவனிக்காமல் வடக்கின் வசந்தம் என்பதுவெறும் கேலிக்கூத்தாகும்.