விஸ்வா

விஸ்வா

“இந்தியாவினால் அமைக்கப்படவுள்ள வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் போதுமானவையல்ல, குறைந்த வட்டியுடனான கடனுதவிகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due-00000.jpgஇந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இவை அனைத்துக் குடும்பங்களுக்கும் போதுமானதல்ல என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகரா தெரிவித்துள்ளார்.  இதே வேளை இவற்றை நிர்மானித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், சேதமுற்ற வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் இலங்கை வங்கியுடன் இணைந்து குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கடன் வழங்கலுக்காக இலங்கை வங்கி 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், 4வீத வருடாந்த வட்டியுடன் 10 வருடங்களில் மீளச்செலுத்துக்கூடியதாக அதிக பட்சக்கடனாக இரண்டரை இலட்சம் ரூபாவை  பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு மேற்கில் 409 குடும்பங்கள் மீள்குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மேற்குப் பகுதிகளில் 409 குடும்பங்கள் நேற்று (14-09-2010) மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புதுருக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்றான விசுவமடு மேற்கிலேயே இக்குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. 409 குடும்பங்களைச்சேர்ந்த 1301 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் வசித்து வந்தவர்களாவர்.

வெளிமாவட்டங்களில் உறவினர். நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 17ம் திகதி குறிப்பிட்ட பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த  1411 பேர் அடங்குவர் எனவும், இதுவரை முல்லை மாவட்டத்தில் 16ஆயிரத்து 769 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

”அமெரிக்கா தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல

Keheliya_Rambukwella”அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்nவெல காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 18வது அரசமைப்புத் திருத்தம் நிறைவேறியுள்ளதையடுத்து அமெரிக்கா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இவ்விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற விதத்தில் தலையிடக்கூடாது. தேவையற்ற, பொறுப்பற்ற விதங்களில் விமர்சனங்களை வெளியிடுவதை அது தவிர்த்துகொண்டு தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அமரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. அத்துடன் எமது நாட்டின் அதியுயர் கட்டமைப்பான உயர் நீதிமன்றத்தையும் அது அவமதித்துள்ளது” எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

”இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தம் அதன் தேவை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது சட்டப்படியானது. அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 18வது அரசமைப்புத் திருத்திருத்தத்தைக் கண்டித்து அமெரிக்கா அதன் விமர்சனத்தைத் வெளியிட்டிருந்தது. இவ்வரசமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத் தன்மையினைப் பலவீனப்படுத்தும் என அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது.

யாழ் அபிவிருத்திக் கூட்டத்தில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பினரும் இணைந்து பங்கு கொண்டனர்.

Suresh_P_and_Powzi_Ministerயாழ்ப் பாணத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முதன்முதலாக கலந்து கொண்டுள்ளது. அத்துடன் அனர்த்த செயற்பாட்டு மையத்தையும் ஏனைய அரசு சார்பு அமைச்சர்களுடன் சோந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்துள்ளனர்.

யாழ்.செயலகத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எம் பௌசி ஏற்பாடு செய்த அபிவிருத்திக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு அனர்த்த செயற்பாட்டு மையத்தை அமைச்சர் பௌசி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் திறந்து வைத்த போது அதில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இணைந்து கொண்டார்.

Suresh_P_and_Douglas_D_MPs_12Sep10இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் நடைபெற்றக் கூட்டங்களில் அரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  ஆனால் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்த்திக் கூட்டங்களில் கூட்டமைப்பு நாமாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் பின்னர் அரசாங்கத்தின் அபிவிருத்தி, மீள்குடியமர்வுப் பணிகளுக்கு தமது ஆதரவு உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டடில் அனர்த்த முகாமைத்துவ செயற்திட்டங்கள் 167 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் என் அமைச்சர் ஏ.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Magazine_Prisonநீண்டகாலமாக தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை பிணையிலாவது விடுதலை செய்யுமாறு அவர்களின் பெற்றோர் உறவினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போது பல்வேறு சந்தாப்பங்களில் நாட்டின் பல பாகங்களிலும் வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர். யுவதிகளின் விடுதலை குறித்து பல தடவைகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது இக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் குடும்பத் தலைவர்களாகவிருப்பதால் சம்பத்தப்பட்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில வாடுகின்றமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பிணையிலாவது இவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கைதிகளின் பெற்றோர். உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறந்து ஒரு நாளான குழந்தையொன்று வீதியோரத்தில் மீட்பு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்!

பிறந்து ஒருநாளான ஆண் குழந்தையொன்று பையினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியோர பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் செம்பியன் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை குறிப்பிட்ட வீதி வழியாக சென்று கொண்டிருந்த கொக்குவில் வாசி ஒருவர் சாக்குப் பைக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரலை அவதானித்துள்ளார். அதனை அவர் அயலவர்களிடம் கூறவே அயலவர்கள் வந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர் உடல் நீலம் பாரித்த நிலையில், தெர்ப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பெற்ற தாய் பிறந்த குழந்தையை அனாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவான சம்பவம் கிளிநொச்சி மருத்துவமனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.  பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்! கடந்த 30 ஆண்டுகால யுத்தம் சமூகத்தின் விழுமியங்களையும் தனிமனித உள்ளுணர்வுகளையும் சிதைத்துள்ளதன் வெளிப்பாடாக இவ்வாறான சம்பவங்களைக் காண முடிகிறது.

குறிப்பிட்டக் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் அக்குழந்தையின் தாயாரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் புதிதாக 25 கரையோர பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

SL_Navyவடக்கு கிழக்கு கரையோரங்களில் 25 புதிய பாதுகாப்பு முகாம்களை அமைக்கவிருப்பதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கரையோர பாதுகாப்பிற்காக இ;ம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாதுகாப்பிற்கு சிக்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுப்பதற்காகவே இம்முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் புலிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர்கள் ஆயதங்களுடன் வடக்கு கிழக்கு கடலூடாக ஊடுருவுவதைத் தடுக்க படையினர் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் சேயலாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னர் படையினர் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக கூட்டமைப்பு இன்று கூடி ஆராய்வு.

TNAநாளை மறுதினம் 8ஆம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதா ஆதரவளிக்காமல் விடுவதா என்பது குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி ஆராய்ந்து முடிவொன்றை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இதே வேளை, அரசாங்கம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி இற்கும் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அரசமைப்புத் திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ள 8ஆம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி கொழும்பில் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமயும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சகல அரச அதிபர்களும் கூடும் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

இலங்கையின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்று இன்று (06-09-2010) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதற்காக சகல அரசாங்க அதிபர்களும் நேற்று மாலையே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். இன்று நடைபெறும் இம்மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவும்  கலந்து கொள்கின்றார்.

இன்று காலை 9 மணிக்கு யாழ். செயலகக் கேட்போர் கூடத்தில் இம்மாநாடு ஆரம்பமானது. இன்றைய மாநாட்டில் அரசாங்க அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அராயப்பட்டு அவற்றைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் வாகனங்களின் நெரிசல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

Jaffna_Trafficயாழ் நகரின் பல வீதிகளில் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். நகரின் பிரதான வீதிகளில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கமாறும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வாகனப் பயன்பாட்டளர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Jaffna_Traffic

தற்போது நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதாலும், தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கனங்களும் அதிகரித்துள்ளதாலும் யாழ். நகரில் வாகனங்களின் நெரிசல் என்றுமில்லாதவாறு அதகரித்துள்ளது. இதனால்  விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.