பிறந்து ஒருநாளான ஆண் குழந்தையொன்று பையினால் சுற்றப்பட்ட நிலையில் வீதியோர பற்றைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் செம்பியன் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை குறிப்பிட்ட வீதி வழியாக சென்று கொண்டிருந்த கொக்குவில் வாசி ஒருவர் சாக்குப் பைக்குள்ளிருந்து குழந்தையொன்றின் அழுகுரலை அவதானித்துள்ளார். அதனை அவர் அயலவர்களிடம் கூறவே அயலவர்கள் வந்து அக்குழந்தையை மீட்டெடுத்தனர் உடல் நீலம் பாரித்த நிலையில், தெர்ப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் அக்குழந்தை காணப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பெற்ற தாய் பிறந்த குழந்தையை அனாதரவாக கைவிட்டு விட்டு தலைமறைவான சம்பவம் கிளிநொச்சி மருத்துவமனையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்! கடந்த 30 ஆண்டுகால யுத்தம் சமூகத்தின் விழுமியங்களையும் தனிமனித உள்ளுணர்வுகளையும் சிதைத்துள்ளதன் வெளிப்பாடாக இவ்வாறான சம்பவங்களைக் காண முடிகிறது.
குறிப்பிட்டக் குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் அக்குழந்தையின் தாயாரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.