இலங்கையின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்று இன்று (06-09-2010) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதற்காக சகல அரசாங்க அதிபர்களும் நேற்று மாலையே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். இன்று நடைபெறும் இம்மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவும் கலந்து கொள்கின்றார்.
இன்று காலை 9 மணிக்கு யாழ். செயலகக் கேட்போர் கூடத்தில் இம்மாநாடு ஆரம்பமானது. இன்றைய மாநாட்டில் அரசாங்க அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அராயப்பட்டு அவற்றைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.