விஸ்வா

விஸ்வா

வடக்கில் 2000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிப்பு.

வடக்குப் பிரதேசத்தில் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பிரதேசத்தில் இன்னும் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பகுதிகளில் தற்போது கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கில் இதுவரை, 3,14,850 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனை விட அதிகமான அளவு கண்ணி வெடிகள் எதிர்காலத்தில் அகற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் வன்னியின் வயல், நிலங்கள் மற்றும் காட்டுப் பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்கள் பொதுமக்களின் குடியிருப்புக்களாக இருந்த பிரதேசங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ‘குவைத்சிட்டி’ வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 43 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு.

மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் தெற்கு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘குவைத் சிட்டி’ என்ற வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் 43 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மண்முனை வடக்குப் பிரதேசச்செயலர் திருமதி கலாமதி
பத்மராஜாவால் கடிதங்கள் முலம் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடுகள் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் குவைத் நாட்டின் உதவியுடன், அமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவையாகும். ஆனால், இதில் குடியிருக்கும் 27 குடும்பங்கள் தவிர்ந்த ஏனையோர் உண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களல்ல என நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் சுனாமியினால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்தானா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றினாலும் கோரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசச்செயலர் அங்குள்ள 70 வீடுகளில் வசிப்பவர்களில் 27 பேர் மட்டுமே சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் குறித்த 27 வீடுகளில் வசிப்பவர்கள் தவிர்ந்த ஏனைய 43 வீடுகளில் வசிப்பவர்களும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தாங்கள் வீடுகளை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும், இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு தாங்கள் அறிவித்துள்ளதாகவும் மேற்படி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலிகளை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய நால்வர் கைது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையிலீடுபட்டதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைக் கோரி கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு பிரதம நீதிமன்றுக்கு அறிக்கையொன்றை பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

கடவுச்சீட்டுக்களில் போலியான விசாவை ஒட்டியே புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய நீதவான் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றிற்கு அறியத் தரவேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னர் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தற்போது, அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேறுகின்றனர். தண்ணீரூற்று, நீராவியடி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் தங்களது சொந்தக் காணிகளில் குடிமனைகளை அமைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தங்கள் காணிகளில் குடியேறுவதற்காக வருகை தந்த வண்ணமுள்ளனர்.

போர் சூழ்நிலைகளின் போது அக்கிராமங்களிலிருந்து வெளியேறிய மக்களும், விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, வெளியேறிய மக்களுமே இவ்வாறு மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகாம்களிலும் சிறுவர் இல்லங்களிலும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன.. மதபோதகர் தலைமறைவு!

மன்னார் சிறுவர் இல்லமொன்றில் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சிறுவர் இல்லம் நேற்று புதன் கிழமை மூடப்பட்டது.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள ‘என் இரட்சகர்’ என்ற சிறுவர் இல்லத்தில் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் பராமரிக்கப்பட்டு வந்தனர். மதபோதகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான அ.அமிர்தலிங்கம் (வயது 45) என்பவர் இதனை நடத்தி வந்தார்.  பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு வீட்டு வேலைகளுக்காக மதபோதகர் அழைத்துச் செல்வதுண்டாம்.  இந்நிலையிலேயே சிறுமிகள் மீதான துஸ்பிரயோகம் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவர் மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து மேலும் ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி குறித்த இரு சிறுமிகளையும் வைத்தியப் பரிசோதனைகளுக்குட்படுத்துமாறும், குறித்த சிறுவர் இல்லத்தை முடி அங்குள்ள சிறுவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை நீதவான் இவ்வாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று புதன் கிழமை குறித்த சிறுவர் இல்லம் மூடப்பட்டது. மதபோதகர் தலைமறைவாகியுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Constantine_Tஇலங்கையில் இருந்து தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன்:

இச்சம்பவம் தொடர்பாக தற்போது இலங்கையில் உள்ள தேசம்நெற் ஆசிரியர் ரி கொன்ஸ்ரன்ரைன் தகவல் அளிக்கையில் வடமாகாணத்தில் கிறிஸ்தவச் செல்வாக்குள்ள மன்னார் மாவட்டத்தில் எழுந்தமானமாக சில கிறிஸ்தவ குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு புகலிடம் வழங்குகிறோம் என்ற பெயரில் அவர்களை துஸ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வறுமையும் சமூகக்கட்டுமானமும் சீரழிந்துள்ள சூழலில் இவ்வாறான தவறான சக்திகள் அதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். வறுமை காரணமாக பல பெற்றோர் இவ்வாறான இல்லங்கள் பற்றிய எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளை போலியான இல்லங்களில் ஒப்படைக்கின்றனர் எனத் தெரிவித்தார் ரி கொன்ஸ்ரன்ரைன். தாய் தலைமறைவான நிலையில் இரட்டைகளாகப் பிறந்த குழந்தைகளை வைத்தியசாலையில் இருந்து கிறிஸ்தவ சகோதரிகளால் முறையாகப் பராமரிக்கப்படும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்த காட்சியைத் தான் நேரில் பார்த்ததாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

இடப்பெயர்வுகள் முகாம் வாழ்வுகள் பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகத்தை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ரி கொன்ஸ்ரன்ரைன் தற்போதுள்ள வவுனியா முகாமில் இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் அதகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். வயது குறைந்த பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் முகாம்களுக்குள் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும்பாலும் முகாம்களில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் சுட்டிக்காட்டினார். மேலும் பல பெண்களுடனான பாலியல் உறவுகளும் முகாம்களில் அதிகரித்துள்ளதாகவும் இவை மிகுந்த சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கட்டுப்படுத்த முகாம்களில் சைவ குருக்களை அழைத்து வந்து மத போதணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சிந்தனையை இந்தச் சைவக் குருக்கள் மூலம் உபதேசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான முகாம்கள் மூடப்பட்டுள்ள போதும் இறுதி யுத்தம் நடந்த பகுதிகளில் வெடிபொருட்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களைச் சேர்ந்த மக்களும் எப்போதுமே தமக்கு நிரந்தர வாழ்விடத்தையும் நிரந்தர தொழில்வாய்ப்பையும் கொண்டிராத மக்களும் இன்னமும் முகாம்களில் தங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். முகாம் வாழ்வுமுறை துரிதமாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

”போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் திருப்தி தருவதாக இல்லை” யாழ். வந்த ஐரோப்பிய பிரதிநிதிகள்

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவுற்றாலும் மக்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என நேற்று புதன் கிழமை  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தெரிவித்தள்ளனர். இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதன் கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்து, யாழ். அரசாங்க அதிபர் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை யாழ். அரச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

தாம் நேரடியாக அவதானித்த வகையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். போரின் பின்னான தற்போதைய முன்னேற்றம் குறித்து தமக்கு திருப்தி இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Commonwealth_Parliamentary_Associationபோர் முடிவடைந்தமை மகிழ்ச்சியானதுதான் ஆனால், போர் முடிவுற்ற போதும் மக்களால் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியாத நிலை உள்ளது எனவும், பயங்கவரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் எனபன தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமையே இத்றகுக் காரணம் எனவும்,  இந்நிலை நீடிக்குமானால் திட்டமிட்ட- கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் தோன்றா விட்டாலும் சிறியளவிலான வன்முறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம் எனவும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பிரதிநிகளிடம் கலந்துரையாடலின் போது  சுட்டிக்காட்டினர்.

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களும் பிணையில் விடுவிப்பு.

விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதான குற்றச்சட்டில் வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த யூன் மாதம் 6ஆம் திகதி விசுவமடுவில் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவச்சிப்பாய்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருமதி கொஸ்வத்த பிணைமனு ஒன்றை கடந்த 10ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.  இம்மனுவை ஆட்சேபித்து பாதிக்கப்ட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் வாதாடியிருந்தார். வழக்கு விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில்  20ஆம் திகதி பிணைமனு மீதான தீர்ப்பினை வழங்குவதாக நீதவான் பெ.சிவகுமார் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று 20ஆம் திகதி புதன்கிழமை குறித்த நான்கு சிப்பாய்களுக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். இச்சிப்பாய்கள் 25 அயிரம் ரூபா காசுப் பிணையிலும், ஒவ்வொருவரும் மூன்று பேரின் ஐந்து இலட்ச ருபா சரீரப்பிணையிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார். மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவித்த நீதவான் குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாவதைத் தடுக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

மன்னாரில் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பம். ஞாபகார்த்த விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

மன்னார் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ச் செம்மொழி மாநாடு மன்னாரில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தமிழியல் துறையில் அரும்பணியாற்றிய பெரியோர்களின் பெயரில் ஞாபகார்த் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது பெறும் பதினைந்து பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தூது தனிநாயகம் விருதை ஜின்னா சரிபுதீன், அறுமுகநாவலர் விருதை பேராசிரியர் சிவலிங்கராஜா, சுவாமி விபுலானந்தர் விருதை பேராசியரியர் அ.சண்முகதாஸ், சோமசுந்தரப்புலவர் விருதை கவிஞர் மேமன்கவி, வித்துவான் ரகுமான் விருதை திருமதி ந.சிறீதேவி, சுவாமி ஞானப்பிரகாசர் விருதை பேராசிரியர் எம்.ஏ.நுஹ{மான், கலாயோகி ஆனந்தகுமாரசாமி விருதை வை.சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி), சின்னத்தம்பி புலவர் விருதை வே. இறைபிள்ளை, முதுதமிழ் புலவர் நல்லதம்பி விருதை அகளங்கன், அறிஞர் சித்திலெப்பை விருதை நா.யோகேந்திரநாதன், தாவீது அடிகள் விருதை டொமினிக் ஜீவா, பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி விருதை திருமதி லீலாம்பிகை செல்வராஜா, ஈழகேசரி பொன்னையா விருதை பத்திரிகையாளர் கானமயில்நாதன், இசைப்புலவர் ந.சண்முகரட்ணடம் விருதை திருமதி விஜயகுமாரி, சிரித்திரன் சிவஞானசந்தரம் விருதை ச.யோகரத்தினம் ஆகியோர் பெறுகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் காயம்.

கடந்த 18ஆம் திகதி கிளிநொச்சி பாரதிபுரத்தில் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்த போது குண்டு ஒன்று பெரும் அதிர்வுடன் வெடித்துள்ளது. இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சியில் தினமும்  குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டு வருகின்றன. போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை துப்புரவாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் வெடிபொருட்கள் மீடக்கப்பட்டு அவை செயலிழக்கப்படுவதாலும் தற்செயலாக நிகழும் பல குண்டுகள் வெடிப்புக்களாலும் இச்சத்தங்கள் கேட்டுவருகின்றன. இக்குண்டு வெடிப்பினால் பொதுமக்கள், துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனவர்கள் பாதிப்படைகின்ற நிலையும் ஏற்பட்டள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளில் மேலும் 500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.

due-00000.jpgபுனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மேலும் 500 பெண்கள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர  நேற்று தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடீவுற்ற நிலையில் 11,696  புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. ஓகஸ்ட் மாதம் வரை இவர்களில் 4,485 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,881 ஆண்களும் 1,604 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வெண்ணிக்கையில் 594 சிறுவர்களும் அடங்குகின்றனர். இதில் பெண்கள் கணிசமான அளவில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இம்மாத இறுதியில் 500 பெண்கள் விடுவிக்கப்பட்டால் 27 பெண்கள் மட்டுமே புனர்வாழ்வு முகாமில் எஞ்சியிருப்பர் எனவும் அவர் குறிப்பட்டார்.