விஸ்வா

விஸ்வா

செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள மக்களை இடமாற்ற நடவடிக்கை.

வவுனியா செட்டிக்குளம் ‘மெனிக்பாம்’ முகாமில் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களை கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி முகாம்களுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இன்னும் அறுநூறு குடும்பங்கள் மட்டும் உள்ளதாகவும், இவர்கள் தற்போது வசிக்கும் குடில்கள் பழுதடைந்துள்ளதாகவும் மழைகாலத்தில் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமலிருக்க கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி ஆகிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், மூவாயிரம் விடுகள் வெறுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விரண்டு முகாம்களிலும் குறித்த மக்கள் மாற்றப்படுகின்ற போது, அவர்களின் பராமரிப்பினை சுலபமாக மேற்கொள்ள முடியும் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக் கூட்டம் முன்று உறுப்பினர்களுடன் நடைபெற்றமை சட்ட விதிமுறையின்படி சரியானதாம்.

வவுனியா நகரசபைக் கூட்டம் கடந்த சனிக்கழமை முன்று உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் இவ்வாறு நடைபெறுவதற்கு சட்ட விதிமுறையில் இடமுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையுடன் உள்ள வவுனியா நகரசபையின் கூட்டங்களில் எட்டு உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் நகரசபைத் தலைவருக்கு பல உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவின் முன்பு உறுப்பினர்கள் முன்வைத்த 29 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப் படவில்லை. இதன்காரணமாக கூட்டமைப்பு, புளொட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் மாதாந்த கூட்டங்களைப் புறக்கணித்தனர். இதனையடுத்து கூடாமலிருந்து மாந்த கூட்டம் நேற்று முன்தினம் மூன்று உறுப்பினர்களுடன் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக கல்வி வாய்ப்புக்களை இழந்த மாணவர்களுக்கு துரித கற்றல் செயல்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், வடக்கு, கிழக்கு மாகாண கல்வித்திணைக்களங்கள், என்பன இணைந்து ‘யுனிசெவ்’ நிறுவனத்தின் அனுசரணையில் இச்செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இதில் தரம் 3முதல், தரம் 9 வரையுள்ள மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். தமிழ், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும், தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடமும் துரிதகற்றலாக கற்பிக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து இச்செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வலி.வடக்கு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை.

வலிகாமம் வடக்கில் இன்று திங்கள் கிழமை நடைபெறுவதாகவிருந்த மீள்குடியேற்றம் நடபெறவில்லை. அது எப்போது நடைபெறும் என்பது குறித்தும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இம்மீள்குடியேற்றம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டாசுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா சென்றிருப்பதால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். வருகைதர முடியவில்லை எனவும், அதனாலேயே மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உதவிபுரியம் என்றும், அதற்கு பல நிறுவனங்கள் முன்வந்தள்ளன எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கிலுள்ள பத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள 915 குடும்பங்களுக்கு யு.என்.டி.பி, சோஆ, போரூட், பாஸிக், சேவ் த சில்ட்ரன் ஆகிய நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிறுவனங்களின் செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி விசேட செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸிக் நிறுவனம் 202 மீன்பிடி வலைகளையும், 85 படகுகளையும், 85 வெளியிணைப்பு இயந்திரங்களையும், 70 கட்டுமரங்களையும் வழங்க முன்வந்துள்ளது. போரூட் நிறுவனம் 342 மீன்பிடி வலைகளை வழங்க முன்வந்துள்ளது. சோஆ நிறுவனம் 100 தெப்பங்களையும், அதற்கான மீன்பிடி வலைகளையும் வழங்க முன்வந்தள்ளது. இதே போன்று ஏனைய நிறுவனங்களும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

நல்லூரில் கட்டப்படவிருக்கும் விடுதி ஆடம்பரவிடுதியாக இல்லாமல் யாத்திரிகர் மடம் போல் அமையுமாம்.

நல்லூரில் உல்லாச ஹோட்டல் ஒன்றை கட்டுவிருப்பது தொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை ஹோட்டல் கட்டவிருக்கும் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலின் போது குறித்த ஹோட்டல் கட்டடம் உல்லாச விடுதியாக இல்லாது ஒரு யாத்திரிகர் மடம் போன்ற வடிவத்தில் கட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் இணங்கியுள்ளதாக இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவது தொடர்பாக அதன் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் நேற்று சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் வைத்து கலந்துரையாடல் நடைபெற்றது. புனித பிரதேசமான நல்லூரில் உல்லாச விடுதி கட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அதே வேளை, இவ்விடுதி அமைக்கப்படுமானால் நல்லூரின் சூழல் மாசடைவது குறித்தும். இவ்விடுதியை வேறு விசாலமான பகுதியில் கட்ட முடியும் என்பது குறித்தும் இந்து அமைப்புக்களின் ஒன்றியப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அந்த விடுதியை நல்லூரில் அமைப்பதால் யாழப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என ஹோட்டல் அமைக்கவிருக்கும் நிர்வாகத்தினரால் கூறப்பட்டது.

கலந்துரையாடல்களின் முடிவில் நல்லூரில் கட்டப்படவுள்ள இந்த விடுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அசைவ உணவுகள் சமைப்பதில்லை எனவும், அவ்விடுதி யாத்திரிகர் விடுதி போல் அமைக்கப்படும் எனவும், கழிவு நீரை அகற்றுவதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக மேற்படி ஒன்றியத்தின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதுவரை 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த 28,473 குடும்பங்களில் 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ம் திகதி வரை இவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் ஏனையவர்களும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் சட்டவிரோத மதுபான விற்பனை.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்கள் நடைபெற்று வருகின்றமை பொலிஸாரினால் கண்பிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிப்பணம். மற்றும் வீடமைப்புப்பணிகள் என்பனவும் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்ட விரோத சாராயம் காச்சும் தொழிலினாலும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களாலும் சமூகச் சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களை சட்டபூர்வமாக விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளி மத்திய கல்லூரி முகாமிலுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vஇடைத்தங்கள் முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற பிரிதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார், நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த அமைச்சர் முரளிதரன் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த போது அவர்களிடம் இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இடைத்தங்கள் முகாமில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். ஆனால். சில குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கள் முகாமிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மக்கள் நேற்று அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரனிடம் தாங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் புனரமைப்பிற்குத் தேவையான உதவிகளை கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு எற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து பணியில் நீடிப்பார்.

chandresiri.jpgகிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. குருகுலராஜா தொடர்ந்தும் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக பணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை வவுனியாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் திரு. குருகுலராஜாவிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் குருகுலராஜா திடீரென அவரது பணியிலிருந்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி கல்வித் திணைக்கள ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள் முதலானோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று வவுனியாவில் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலை கட்ட அமைப்பிற்காக வடமாகாண ஆளுநர் அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்வு அண்மையில இடம்பெற்றது. ஆனால், அதன் கட்டப் பணிகள் தொடர காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆளுநரால் வலயக்கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.