இடைத்தங்கள் முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற பிரிதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார், நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த அமைச்சர் முரளிதரன் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த போது அவர்களிடம் இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.
அகதி முகாம்களில் தங்கியிருக்கும் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இடைத்தங்கள் முகாமில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். ஆனால். சில குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கள் முகாமிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மக்கள் நேற்று அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரனிடம் தாங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் புனரமைப்பிற்குத் தேவையான உதவிகளை கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு எற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.