சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

தேசிய மீலாத் விழா கலாசார ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி 46 பேர் காயம்.

akkurassa-02.jpgஇன்று மு.ப. 10.40 மணியளவில் மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரி ஒருவருடன் தேசம் நெற் தொடர்பு கொண்ட போது இத்தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தேசம் நெற்க்கு உடனடியாகத் தெரிவித்தார். இத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 14பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

akkurassa-05.jpgஇந்தச் சம்பவத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார். மாத்தறை வைத்திய நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி அமைச்சர் மஹிந்த விஜயசேகர உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அமீர் அலி, மகிந்தயாப்பா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

akkurassa-04.jpgமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய ரீதியில் வைபவமாகக் கொண்டாடுவதுண்டு. இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மீலாதுன் நபி விழா விழாக் கொண்டாடங்கள் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ கொடபிட்டிய எனுமிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

akkurassa-01.jpg அமைச்சர்கள் விழாவில் பங்கு கொள்ள ஊர்வலமாக வருகை தந்திருந்த நேரத்தில் சைக்கிளில் வந்த குண்டுதாரர் ஒருவர் மூலமாக குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஹெக்டர் வீரசிங்க தகவல் தருகையில் கொழும்பிலிருந்து விசேட பயிற்சி பெற்ற டாக்டர்கள் குழுவொன்று மாத்தறை வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புகைப்படங்கள் lankadeepa.lk இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு பாக். சாரதியால் ஏற்பு

cricket_pakisthan.jpg இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் விடுத்த அழைப்பை இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் வாகனச் சாரதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார நேற்று குறித்த வாகனச் சாரதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு உரையாடினார். இதன்போதே நிறுவனம் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். வாகனச் சாரதியான முஹம்மட் கலீலுக்கான அழைப்பு, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தது.

உங்களின் துணிச்சலான வீரமிக்க செயற்பாட்டுக்கு நாங்கள் தரும் கெளரவம் இது என குறித்த அழைப்பிதழில் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களை காப்பாற்ற முடிந்ததையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைவதாக வாகனச் சாரதி, நிறுவன தலைவருடனான தொலைபேசி உரையாடலின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

38 வயதுடைய இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் வாகனச் சாரதியாக சுமார் 22 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு ஆண்கள் ஜவாத் (10), உஸாமா (13), இரண்டு பெண்கள் ஷவியா (7), லியவா (4).

இந்திய மருத்துவர்கள் குழுவுடன் மருந்துப் பொருட்களும் இலங்கை வந்துள்ளது

india-dr.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் பொருட்டு இந்திய மருத்துவர்களின் குழு ஒன்று மருந்துப் பொருட்களுடன் இன்று இலங்கைக்கு வந்துள்ளது  இந்திய மருத்துவர்களும் மருந்துகளும் மருத்துவ பணியாளர்களையும் தாங்கிய விமானம் இன்று கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் 8 வைத்தியர்களும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரும் உள்ளடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய மருத்துவர்கள் புல்மோட்டையில் 50 படுக்கை வைத்தியசாலை ஒன்றை அமைக்கவுள்ளதாக இன்று கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது. – விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகள் வழங்க.  இந்தியா ஏற்கனவே 2 முறை மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3வது முறையாக மருந்து பொருட்களை இலங்கைக்கு இந்தியா நேற்று அனுப்பியது.

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் ஐஎல் 76 விமானத்தில் 25 டன் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள்ஆகியவற்றுடன் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவும், இலங்கைக்கு நேற்று சென்றது.

இதேபோல், மருந்து மற்றும் மருத்துவக் குழுவுடன் மற்றொரு விமானம் இன்று, கொழும்பு செல்கிறது. இது மட்டுமின்றி, மேலும் 2 விமானங்களில் மருந்துகள் அனுப்பப்படும்  என்றும் விமானப்படை அதிகாரி கேப்டன் எஸ்.எம்.கோஸ்வாமி தெரிவித்தார். இந்த மருந்து பொருட்கள் ஐ.நா. குழு மற்றும் செஞ்சிலுவைசங்கம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

இன்று கருணா அம்மான் அமைச்சரானார்.

karuna_minister_.jpgபாராளுமன்ற உறுப்பினரான விநாயக மூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) இன்று தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்தற்ற) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் சத்தியப் பிரமாண வைபவம் இடம்பெற்றது.

சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எமது கடற்படை வலுப்படுத்தப்படும் – ஜனாதிபதி

president_at_trinco_navy.jpgஇலங் கைக்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் கடற் படை வலுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறுவோருக்கான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருமலை கடற்படை பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் நடை பெற்றது. இவ் வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறப்பிட்டார். ஜனாதிபதியின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உட்பட்டோர் கடற்படை அதிகாரிகள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதிகள் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கனவு கண்ட ஈழ ராஜ்யத்தின் தலைநகராகக் கருதிய திருகோணமலையிலிருந்து உங்கள் முன்பாக உரையாற்றுகிறேன். இந்த உரையின் ஊடாக, பிரிவினைவாதத்தை அந்தக் கன விலிருந்து நாம் துரத்தியடித்துவிட்டோம் என்பதை உலகிற்கு சொல்லிக்கொள் ளுகிறோம். இந்த பதிலையே இந்நாட்டு மக்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்தார்கள். இதுவே அவர்களின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் இருந்தது. இதற்காக கடற் படையினர் ஆற்றியுள்ள சேவை அளப்பரியது.

எமது நாடு கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இப்படியான நாட்டைப் பாதுகாப்பதற்கு மிகவும் வலுவான கடற்படை அத்தியாவசியமாகும். கடலின் ஆதிக்கம் எம்மால் தளர்த்தப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமது தாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. கள்ளக் கடத்தலில் முன்னர் ஈடுபட்ட குழுவொன்று தனியான ராஜ்ஜியமொன்றுக்கான உரிமையாளர்களாக கற்பனை செய்வதற்கு நாம் அன்று எமது கடற்படை குறித்து அதிக கவனம் செலுத்தாததே காரணமாகும்.

நாட்டின் மீது அன்பு இல்லாததன் காரணமாக எமது தாயகத்திற்குச் சொந்தமான கடற் பகுதியின் சுமார் மூன்றிலிரண்டு பகுதி திருமலை உட்பட சமாதான உயிலில் எழுதிக் கொடுக்கப்பட்டது. இதனால் எமது கடற்படை பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்தது. எமது கடற்படையினரின் பலம் சரியான முறையில் மேம்படுத்தப்படாததால் தான் பயங்கரவாதிகள் கடலில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டது. என்றாலும் எமது கடற்படையினர் கடந்த மூன்று தசாப்தங்களாக உலகிலுள்ள மிக மோசமான பயங்கரவாதிகளுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். எமது கடற்படையினரின் பயிற்சி மேம்படுத்தப்பட்டதன் பயனாக பயங்கரவாதிகளின் கடல் ஆதிக்கம் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான படகுகளை விடவும் அர்ப்பணிப்பும், தைரியமும்மிக்க கடற்படை அதிகாரிகள் நாட்டுக்குப் பெறுமதியானவர்கள். இதன் பயனாகத்தான் எமது கடற்படையினர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து எமது தாயகத்தைப் பாதுகாத்தனர்.

புலிகளிடமிருந்த சகல கப்பல்களையும் எமது கடற்படையினர் அழித்துவிட்டனர். பயங்கரவாதிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலைகள் பத்தை கடலின் தூரப்பகுதியில் வைத்து தாக்கி அழித்தார்கள்.

இவ்வாறான பாரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆயுத தளபாட ரீதியாக வலுவடைந்துள்ள நாடுகள் கூட எமது கடற்படைத் தளபதியை விஷேட பேச்சாளராக அழைத்திருக்கின்றன. உலகில் அதிக கடலாதிக்கத்தை இலங்கைப் பயங்கரவாதிகள் கொண்டிருந்தனர். நாம் இராணுவ ரீதியாக வெற்றிபெற்ற போதிலும் கடற்புலிகளின் தற்கொலைப் படையினருடன் போராடி வெற்றிபெற முடியாதென சிலர் எதிர்வு கூறினர். அந்தப் புலிகள் இப்போது எங்கே? இவ்வாறு தான் புலி மாயை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவற்றை எமது கடற்படையினர் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களையும், மற்றும் உபாயங்களையும் பயன்படுத்தித் தான் எமது படையினருடன் சண்டையிட்டனர். இறுதியில் அவர்கள் நீர்மூழ்கிகளைக் கூட நிர்மாணித்துக் கொண்டிருந்தார்கள். இச்சூழலில் எமது கடற்படையினர் பாரிய முன்னனு பவங்களைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள் ஆயுத ரீதியாகவும் வலுப்படுத்தப்படுகின்றனர். இதன் பயனாக எமது கடற்படையினர் பாரிய வெற்றிகள் பலவற்றை அடைந்திருக்கிறார்கள். இதன் பயனாக இனிமேல் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது எமது கடற்படையினரே, கடற்புலிகள் அல்லர்.

புலிகள் பாடசாலை மாணவர்களை கடத்திச் சென்று தமது படையில் சேர்த்து அவர்களை தம்மைத் தாமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாற்றி சிறிய படகுகளை பாவித்து எமது கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இப்படியான தற்கொலை படகுகளுக்கு முகம்கொடுக்கும் யுத்த பிராந்தியம் உலகில் எங்கும் இல்லை. இருந்தும் எமது கடற்படையினர் புலிகளின் தற்கொலை பிரிவுக்கு முகம் கொடுக்கும் உபாயத்தை கண்டு பிடித்தனர். இதற்காக கடற்படையினர் படகுகளை உற்பத்தி செய்தனர். இதற்கு கடற்படை கப்பல்களை விடவும் பாரிய வரவேற்பு உலகில் கிடைத்திருக்கிறது. இப்போது எம்மிடமிருப்பது வலுவானதும், கெளரவமானதுமான கடற்படை, கடற்படையினருக்குத் தேவையான சகல உபகரண கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

குடாநாட்டில் 93,832 பேர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றனர்

jaffna.jpgயாழ். மாவட்டத்தில் 27 ஆயிரத்து 601 குடும்பங்களைச் சேர்ந்த 93 ஆயிரத்து 832 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இவர்களில் 21 ஆயிரத்து 591 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 672 பேர் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.

6 ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 205 பேர் மேற்படி திகதிக்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு மேலதிகமாக படையினரின் பயன்பாட்டுக்கென மேலும் பல பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இந்தக் குடும்பங்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றார்கள்.

இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கடகோள் அனர்த்தத்தால் பருத்தித்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரீ.எம்.வி.பி. ஆயுதப் பிரிவில் அங்கம் வகித்த உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்களை அவர்களது விருப்பின் பேரில் பொலிஸ் மற்றும் இராணுவப் படைப்பிரிவில் இணைத்துக் கொள்வதற்கும் வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரி வித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் உதவியுடனும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில இளைஞர்களுக்கு புனர்வாழ்வ ளித்து வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து சுயதொழில் ஆரம்பிக்க வழிகாட்டவும் கட்சி தீர்மானித் திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதப்பிரிவில் இதுவரைக்காலமும் தியாக உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்த உறுப்பினர்களுக்கு கட்சி சார்பாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் கூறினார்.

பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் சட்ட திட்டங்கள் – அமைச்சர் சுமேதா

sumeda-jayasena.jpgபெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கையில் பல்வேறு சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இவை இருப்பதே தெரியாது. சில நீதிபதிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் கூட இவ்வாறான சட்டங்கள் இருப்பதனை அறிந்து வைத்திருக்கவில்லை. சட்டங்களின் அடிப்படையில் கணவனால் கூட மனைவியை உடலுறவுக்கு கட்டாயப்படுத்த முடியாதென பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் சுமேதா ஜி. ஜயசேன தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:-

பெண்களைப் பாதுகாப்பதற்கான கடுமையான சட்டங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை. எமது சமுதாயத்தின் எண்ணத்தில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் நம் நாட்டுப் பெண்களை சக்திமிக்கவர்களாகத் தோற்றுவிக்க முடியும்.

ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகளின்படி பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வல்லுறவு என்பவற்றைத் தவிர ஏனைய பாலியல் துஷ்பிரயோகங்கள் பேரூந்துகளிலேயே இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் போராட வேண்டியுள்ளது. சில பெண்கள் இதனைத் தவிர்ப்பதற்காக மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களது நலன்புரி செயல்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் சுமேத ஜி. ஜயசேனவின் 20 வருட கால அரசியல் சேவையைப் பாராட்டி நாட்டின் முதற் பெண்மணியான சிரந்தி ராஜபக்ஷ அவரை விருது வழங்கி கெளரவித்தார். நேற்றைய நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய பெண்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மனிதாபிமான இராணுவ கட்டமைப்பு புலிகளை வெற்றிகொள்ள உதவியது – ஜனாதிபதி

mahi-trnco.jpgமரபுவழி இராணுவத்துக்கு கெரில்லாயுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்ற கருத்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் பொய்யாக்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைப் படையினரை மரபுவழி இராணுவமாகவன்றி மனிதாபிமானப் படையினராகக் கட்டியெழுப்பிய தன் மூலமே வடபகுதி நடவடிக்கையில் வெற்றிவாகை சூட முடிந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விமானப் படையினருக்கு வர்ணவிருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை சீனன் குடாவில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். விமானப் படையின் நான்கு பிரிவுகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் 30 உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.

தாய்நாட்டின் ஐக்கியத்தையும், கெளரவத்தையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வருகிறார்களென்று பாராட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் வான் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் உலகப் படையினருக்கு ஒரு முன்மாதிரியாக இலங்கை விமானப்படையினர் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எதிரியின் இலக்கை மாத்திரம் துல்லியமாக இலக்கு வைக்கும் நமது விமானப் படையினர் ஒரு போதும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொதுக் கட்டடங்களை இலக்கு வைத்தது கிடையாது. அந்தளவுக்கு எமது படையினர் ஒழுக்கமுடையவர்களாக உள்ளனர். உலகின் முதலாந்தர பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்தை எமது படையினர் இன்று மண்டியிட வைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்களிப்பை விமானப்படையினர் ஆற்றியிருக்கிறார்கள்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் படைத்தளபதிகள் அவர்களின் பாரியார்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்:- வடக்கில் எமது இராணுவ முகாம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது விமானப் படையினர் பாரிய சேவையை வழங்கியிருக்கிறார்கள். படையினர் போக்குவரத்து, கடல் கண்காணிப்பு போன்ற விடயங்களில் அளப்பரிய சேவைகளைப் புரிந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளிடமிருந்து நிலப்பரப்புகளை மீட்பதில் தரைப்படையினருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தரை, கடல் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், தற்கொலைப் படகுகள் போன்றவற்றை அழிப்பதில் பாரிய பணியாற்றியிருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வன் போன்ற தலைவர்கள் மெளனமாக்கப்பட்டபோது எமது விமானப்படையினரின் திறமைக்கே பாராட்டு கிடைத்தது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வேலை வாய்ப்பில் அங்கவீனர்களுக்கு 3 சதவீத ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானம்

athauda-senavi.jpgஅங்க வீனரான நிலையில் இருப்போருக்கு 3 வீதமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் உறவுகள் மற்றும் மனிதவள அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைத் தளங்களில் அங்கவீனராகவுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இணங்கியுள்ளதுடன் ஏனையோருக்கு வழங்கப்படுவது போன்ற கொடுப்பனவுகளை இவர்களுக்கு வழங்குவதற்கும் நிறுவனங்கள் சம்மாதம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்கவீனர்கள் தமது கடமையின் போது கூடுதலான அக்கறையுடன் பணியாற்றுவதோடு அதிக பயனுள்ள வகையிலும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். மேலும், அங்கவீனர்களைக் கடமைக்காகச் சேர்த்துக் கொள்ளும் போது தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தொழில் வாய்ப்புக்காக 500 அங்கவீனர்கள் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ள இருப்பதோடு அனைத்து அங்கவீனர்களையும் இந்த தொழில் சந்தைக்குள் பங்குக் கொள்ளச் செய்ய முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் அனைத்து அங்கவீனர்களையும் இந்தத் தொழிற் சந்தைக்குள் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் அதற்குள் பொருத்தமான வேலைகளை அவர்கள் தெரிவு செய்ய முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்